சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை எதிர்கொள்ளும் இந்தியா – தமிழில்: ஜெயந்திரன்

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை

தமிழில்: ஜெயந்திரன்

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை எதிர்கொள்ளும் இந்தியா: சீன வெளிவிவகார அமைச்சரான வாங் யீ  (Wang Yi) ஆபிரிக்கக் கண்டத்தில் தான் முன்னெடுக்கின்ற ராஜீக பயணங்களை முடித்துக்கொண்டு கொமோரொஸ் (Comoros),  மாலை தீவுகள் (Maldives), சிறீலங்கா  (Sri Lanka) போன்ற நாடுகளுக்கான தனது பயணங்களை மேற்கொள்ளும் போது, இந்து சமுத்திரத்திலே அமைந்துள்ள இந்தத் தீவு நாடுகளில் எவ்வாறாக தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பைத் தக்க வைக்க மிகவும் முனைப்பாக சீனா இருக்கின்றது என்பது புலனாகும். தெற்காசியக் கடலில் தனது சிறப்புரிமையை வலியுறுத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக மாலைதீவு, மற்றும் சிறீலங்கா போன்ற நாடுகளில் சீனாவின் செயற்பாடுகள் சவாலாக அமையும்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை பெரும்பாலும் இமாலயப் பிரதேசத்தின் எல்லைகள் தொடர்பாக இருந்த போதிலும், மாலைதீவிலும், சிறீலங்காவிலும் முன்னெடுத்துவரும் பொருண்மிய முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான உதவிகள் உள்ளடங்கலான தனது நகர்வுகள் மூலம் இந்தியா மீது மிகக் கடுமையான அழுத்தத்தை சீனா பிரயோகித்திருக்கிறது. மாலைதீவையும் சிறீலங்காவையும் தெற்காசியாவில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு ஏதுவான நாடுகளாக இந்தியா இதுகாறும் கருதிவந்த பின்புலத்தில், இந்த இரு நாடுகளிலும் சீனா தற்போது தனது செல்வாக்கைச் செலுத்திவருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

கொள்கையளவில் புவியியல் ரீதியாக இந்தியாவுக்கு அருகில் இந்த இரு நாடுகளும் இருந்த போதிலும், பொருண்மியம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி, தன் மேல் ஆதிக்கம் செலுத்தும் அயல் நாடொன்றின் பலத்தைச் சமப்படுத்த விரும்புகின்ற இவ்வாறான சிறிய நாடுகளின் விருப்பத்தையும் சீனா நிறைவு செய்கின்றது. இந்த நாடுகளுக்கு அருகில் இந்தியா இருப்பதன் காரணமாக சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. மிகவும் அருகில் இருக்கும். நாடுகள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் போது பிரச்சினைகள் அவற்றுக்கு அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் தூரத்திலே உள்ள ஒரு நாடு மூலோபாயத்தின் அடிப்படையிலான ஒரு உறவை தனது நட்புநாட்டுடன் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு அதற்கு இருக்கிறது. இரு பெரும் உலக சக்திகளுக்கிடையே மாலைதீவிலும் சிறீலங்காவிலும் நடைபெறுகின்ற இந்தப் போட்டி இந்த இருநாடுகளினதும் உள்நாட்டு அரசியலோடு மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. காரணம் ஒன்றுக்கொன்று எதிரான உள்நாட்டு அரசியல் சக்திகள் ஒன்றில் சீனாவையோ அன்றேல் இந்தியாவையோ ஆதரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தோ-பசிபிக் திட்டத்தை அமெரிக்கா செயற்கையாக உருவாக்கிய ஒரு வெளிநாட்டுக் கொள்கை சார்பான எண்ணக்கருவாகக் கருதி, சீனா அதனைப் பெரிதாக எடுக்காமல் கிழக்கு ஆசியாவின் முற்றத்தில் தனது கவனத்தை மையப்படுத்தலாம். ஆனால் இந்து சமுத்திரத்தின் மீது தனக்கு இருக்கும் அக்கறையை சீனா ஒரு போதும் குறைத்துக் கொள்ளவில்லை. இராணுவ ரீதியாகத் தாய்வானை (Taiwan) நோக்கி தனது கவனத்தை சீனா தற்போது செலுத்திவருவதால் சீனாவை அண்மித்த பிரதேசங்களில் மோதலுக்கான ஒரு சூழல் ஏற்பட்டுவருகிறது. ஆனால் இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தும் பொருட்டு,  தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீனா எந்தவிதத்திலும் நிறுத்தவில்லை. பசிபிக்குடன் ஒப்பிடும்போது, அந்த தூர மேற்குக்கரை அதிகம் முக்கியமானதாகத் தெரியவில்லை. ஆனால் இரு சாகர மூலோபாயத்தைச் சீனா முன்னெடுத்து வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த செங்கடலின் ஓரத்தில் இருக்கின்ற நாடான எரித்திரியாவிலும் (Eritrea) அதே நேரம் கிழக்கு ஆபிரிக்காவில் அதிக பொருண்மிய பலம் கொண்ட நாடாகவும் இந்து சமுத்திர வணிகத்தின் அனைத்து தொடர்புகளுக்கும் வரலாற்று ரீதியான மையமாகத் திகழ்கின்ற கென்யாவிலும் (Kenya) வாங் தனது ஆபிரிக்க பயணத்தை இவ்வாரம் ஆரம்பிக்கிறார்.  சீனாவின் ‘பட்டையும் பாதையும்’  (Belt and Road) திட்டத்தில் எரித்திரியா அண்மையில் தன்னை இணைத்துக்கொண்டது. கென்யாவைப் பொறுத்தவரையில் சீனாவின் இருப்பு பொருண்மிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

சீன இராணுவப் பலம் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கென்யா உட்பட பல்வேறு ஆபிரிக்க நாடுளில்  தனது தளங்களை அமைக்க சீனா முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பேஜிங்கும் (Bejing)  நைரோபியும் (Nairobi) கூட்டாக மறுத்திருக்கின்றன.

பாரம்பரியமாக, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வட்டத்துக்குள் இருக்கும் நைரோபி தனது முன்னாள் காலனீய சக்தியான இங்கிலாந்துடனும் அதே நேரம் அமெரிக்கா வுடனும் நீண்ட கால இராணுவம் சார்ந்த தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. இக்குறிப்பிட்ட பிரதேசத்தில் வோஷிங்டன் மற்றும் இலண்டனின் கவனம் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளிலேயே மையப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தோ-பசிபிக் (Indo-Pacific) பிரதேசத்தில் சீனாவை எதிர்ப்பதற்கான தளமாகவே கிழக்கு ஆபிரிக்காவை இந்நாடுகள் நோக்கி வந்தன.

சீனாவைப் பொறுத்தளவில் பொருண்மிய ரீதியாக ஆபிரிக்காவின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துவரும் பின்புலத்தில், மேற்கு சமுத்திரத்தில் கடற் பாதைகளுக்குக் குறுக்காகப் பரவிக்கிடக்கின்ற நாடுகளான சீசெல்ஸ் (Seychelles), கொமோரொஸ் (Comoros), மொரீசியஸ் (Mauritius), மடகஸ்கார் போன்ற நாடுகளில் அது தற்போது கண்வைத்திருக்கிறது. தீவுகளாக இருக்கின்ற இந்த நாடுகளில் தனது செயற்பாடுகளை சீனா அண்மையில் அதிகரித்திருக்கிறது. இந்து சமுத்திரத்துக்கான ஒரு கடற்படையைக் கட்டியெழுப்ப ஒரு காலத்தில் இந்த நாடுகளில் ஒன்று சீனாவுக்கு உதவிக்கரம் நீட்டும்.

தென் ஆபிரிக்கக் கண்டத்தை மடகஸ்காரிலிருந்து (Madagascar) பிரிக்கின்ற கடல் பாதையாக இருக்கின்ந மொஸாம்பிக் கால்வாயின் (Mozambique Channel) தொடக்கத்தில் அமைந்திருக்கின்ற கொமோரொஸ், சீனாவுக்கு வாய்ப்பான ஒரு இலக்காக மாறியிருக்கிறது. பேஜிங்கின் பிரசன்னம் கொமோரொஸ் தீவில் நீண்ட காலமாக இருந்துவருகின்ற போதிலும் அந்த நாட்டைத் தரிசிக்கும் முதலாவது சீன வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில், வாங்கின் பயணம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடியது.

கொமோரொஸ் தீவிலிருந்து மாலைதீவுக்கும் சிறீலங்காவுக்கும் பயணம் செய்யும் சீன அமைச்சர் வாங் இன் முடிவு, மத்திய, மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் பேஜிங் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கோடிட்டுக்காட்டுகின்றது. இதே நேரம் இந்தியாவும் கடல் ரீதியாக விரிவாக்கப்பட்ட தனது அயல்நாடுகளாக இத்தகைய இந்து சமுத்திரத் தீவுகளை நோக்குகின்றது. கொமோரொஸ் நாட்டில் எந்தவித செயற்பாட்டையும் இதுவரை மேற்கொள்ளாத போதிலும் மாலைதீவு, சிறீலங்கா ஆகிய நாடுகளில் மிகத் தீவிரமான பூகோளப் போரில் இந்தியா தற்போது அகப்பட்டிருக்கிறது.

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பு ஒழுங்கமைப்பின் ஒரு பகுதியாக இருந்த மாலைதீவு, 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றபின் அந்த நாடு இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்து சமுத்திரத்தை நோக்கி தனது மூலோபாயப் பார்வையை சீனா திருப்பிய போது, இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் மிக முக்கியமான கடற் பாதைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் மாலைதீவின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா உடனடியாகவே புரிந்து கொண்டது. 2013ஆம் ஆண்டில் மாலைதீவின் அதிபரான அப்துல்லா யாமீன் (Abdulla Yameen) தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்தியாவுடன் பாரம்பரியமாகப் பேணப்பட்ட உறவுக் கொள்கையை மாலைதீவு முறித்துக் கொண்ட போது, சீனா மாலைதீவுக்குள் உடனடியாகவே நுழைந்து கொண்டது.

சீன அதிபர் ஸி ஜின்பிங்  (Xi Jinping) 2014ஆம் ஆண்டில் மாலைதீவையும், சிறீலங்காவையும் தரிசித்தார். அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாலைதீவுக்கான சுற்றுலாப் பயணங்களை ஒழுங்குபடுத்தியதோடு, ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஒப்பமிட்டு, அங்கே பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை சீனா தொடங்கியது. 2018இல் நடைபெற்ற தேர்தலில், யாமீன் தோல்வியைத் தழுவிய போது, புதிய அதிபர் மொஹமத் சோலியின் (Mohamed Solih) தலைமையில் பதவியேற்ற அரசு, சீனாவிடம் மாலைதீவு பட்டிருந்த பாரிய கடனை கணிசமான அளவு குறைத்து, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உறைநிலைக்கு உள்ளாக்கி, ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கைக்குத் திரும்பியது.

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை

அத்தருணத்தில் மாலைதீவுடன் தனது உறவை வலுப்படுத்துவதற்காக பாரிய நிதி உதவி களை வழங்கி, உட்கட்டமைப்புத் திட்டங்களை இந்தியா அங்கு விரைவாகத் தொடங்கியது. மாலைதீவில் தனது இராணுவத்தை நிலைநிறுத்தி, அந்த நாட்டில் கடற் படைத்தளம் ஒன்றை நிறுவத் திட்டமிடுவதன் மூலம் அந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாக அதிபர் சோலியின் உள்நாட்டு எதிரிகள் சிலர் இந்தியா மீது குற்றம் சுமத்தி ‘இந்தியா வெளியேற வேண்டும்’ என்ற பரப்புரையை ஆரம்பித்தனர். இக்குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்று கூறி இப்பரப்புரையை மாலைதீவு அரசு எதிர்த்தது. ஆனால் இப்பரப்புரை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

மாலைதீவுக்குள் எண்ணிக்கையில் சிறிதாக இருக்கின்ற அரசியல் தலைவர்கள் நடுவில் நிலவுகின்ற உட்பூசல்களின் காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ஆதரவுநிலை மாறிமாறிக் கொண்டிருக்கும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மாலைதீவை விடப் பெரிய சனத்தொகையைக் கொண்டிருக்கும் சிறீலங்கா (சிறீலங்காவின் சனத்தொகை 21.5 மில்லியன்கள். இது மாலைதீவின் சனத்தொகையைவிட 39 மடங்குகள் அதிகமானது) அதிக சிக்கல் நிறைந்ததும் நுட்பமானதுமான உறவை நியூடெல்லியோடும் பேஜிங்கோடும் பேணி வருவதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது.

2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் அரசுக்கும் தமிழ்ப்புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் சிறீலங்காவில் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் சீனா தனது செயற்பாடுகளை மிக அதிகமாக அங்கு மேற்கொள்ளத் தொடங்கியது. 1980களில் இந்தியா புலிகளுக்குத் தனது ஆதரவை வழங்கி, பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தமிழ் மக்களுக்குமிடையே ஒரு தீர்வைக் கொண்டுவர முயற்சி செய்தது. சிறீலங்காவில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஆதரவை இந்தியா வழங்கி வந்த காலப்பகுதியில், இந்த கெரில்லா அமைப்புக்கு எதிரான போரில் அரசுக்கு அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை அபரிமிதமாகச் செய்து தனது நிபந்தனையற்ற ஆதரவை சீனா கொழும்புக்கு வழங்கியிருந்தது.

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை2009 இல் கொழும்பு புலிகளைத் தோற்கடித்த பொழுது, கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள ராஜபக்ச பன்னாட்டு விமானநிலையம் போன்றவை உட்பட்ட பல உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற் கொண்டு, தனது ஆதரவை சீனா கொழும்புக்கு வழங்கியது – இது சீனா பெற்றுக்கொண்ட முக்கிய மூலோபாய வெற்றியாக அக்காலப்பகுதியில் கருதப்பட்டது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என இந்தியா கொழும்புக்கு அழுத்தத்தைக் கொடுத்து வந்த வேளையில், சீனாவோ ‘சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்ற கொள்கையைப் பறைசாற்றி வந்தது.

சீனாவின் திட்டங்களை விரைவாக முன்னெடுத்த கொழும்பு, இந்தியாவின் முக்கிய முதலீடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இது டெல்லிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. சீனாவின் பக்கம் அளவுக்கு அதிகமாகச் சாய்வதன் காரணத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கொழும்பு தற்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதால் இப்போது அலை புதுடெல்லியின் பக்கமாக வீசத் தொடங்கியிருக்கிறது. தமது இறைமைக்கு ஆபத்து என்று இந்தியாவுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சிறிலங்காவில் தமது பிரசன்னத்தை மிக விரைவாக அதிகமாக்கியிருக்கும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

‘தமிழ்ப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பு கூறப்படவேண்டும்’ என்று வலியுறுத்துகின்ற மேற்குலகிலிருந்து தூரவிலகியிருக்கும் சிறிலங்கா, கடுமையான பொருண்மிய நெருக்கடியைச் சந்திக்கின்ற இக்காலகட்டத்தில், பாரிய பொருண்மிய உதவிகளை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறது. நாணயமாற்று வசதிகள், இறக்குமதிசெய்யப்படும் உணவு, எண்ணெய், மருந்துகளுக்கான கடன் வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய தனது சொந்த உதவிப்பொதியுடன் இந்தியா, சிறீலங்காவில் தற்போது கால்பதிக்கிறது. அதே வேளையில் நீண்ட காலமாகப் பின்போடப்பட்டுவந்த இந்தியத் திட்டங்களை தமது நாட்டில் முன்னெடுக்க சிறிலங்காவும் இந்தியாவுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தைஇந்தியாவின் ‘அதானி போட்ஸ்’ (Adani Ports) நிறுவனத்துக்கு ஒரு புதிய துறைமுக முனையத்துக்கென கொழும்பில் ஒரு இடத்தையும் ‘விசேட பொருண்மிய வலயத்தையும்’ சிறீலங்கா வழங்கி யிருக்கிறது. இலங்கைத் தீவின் அதிக விருத்தியடையாத மேற்குக் கரையோரத்தில் திரிகோணமலையில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணெயைச் சேமித்து வைக்கும் தளத்தை இணைந்து நவீனமயப்படுத்தும் திட்டத்தை மீண்டும் சிறீலங்கா ஆரம்பிக்க இருக்கிறது. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடற்பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற மூன்று தீவுகளுக்கு மின்சக்தியை வழங்குகின்ற திட்டத்தை இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சிறீலங்காவிடமிருந்து சீனா மீளப்பெற்றிருக்கிறது.

தமிழ் மக்கள் வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பின் காரணமாக இந்திய எல்லைக்கு மிக அருகாக சீனா முன்னெடுக்க இருந்த மின்வலு திட்டத்தை சிறீலங்கா கைவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தலைமைகளின் பக்கம் பேஜிங் தனது கவனத்தைத் தற்போது திருப்பியிருக்கிறது. 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறீலங்காவுக்கான சீனத்தூதுவர் கீ ஸென்ஹொங் (Qi Zhenhong) தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடமாகாணத்தின் மையமாக இருக்கின்ற யாழ்நகருக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். அங்கு பல அதிகாரிகளைச் சந்தித்ததோடு மட்டுமன்றி, தமிழ் மக்களின் பண்பாட்டு உடையணிந்து, ஏனைய ஆண்களைப் போன்று மேலாடை எதுவுமின்றி அர்ச்சனைகளையும் மேற்கொண்டார். சீனத் தூதுவர் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, சிறிலங்காவில் இந்தியாவுடனான தனது புவிசார் அரசியல் போட்டிகள் தொடர்பாக தனது வழமையான அணுகுமுறையை விட்டு வெளியே வர சீனா தயாராகிவிட்டது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.

தற்போதைய சூழல் மாலைதீவிலும் சிறீலங்காவிலும் இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகவே காட்சிதருகிறது. ஆனால் இவ்வாறான நிலைமை எப்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்வு கூறமுடியாது. இவ்விரு நாடுகளிலும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்புகளை எவ்வளவு விவேகமாக இந்தியா பயன்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்த நாடுகளில் இந்தியாவின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. தனது முயற்சிகளைக் கைவிடுவதற்கு எவ்விதத்திலும் சீனா தயாராக இல்லை என்பதையே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் இன் தற்போதைய பயணம் கோடிட்டுக்காட்டுகிறது. அதே நேரம் மாலைதீவாக இருந்தாலும் சரி அல்லது சிறீலங்காவாக இருந்தாலும் சரி, பேஜிங்கை எதிர்க்கவோ அல்லது எல்லாச் சீனத்திட்டங்களையும் ஏற்கமறுக்கவோ இந்த நாடுகளால் முடியாது.

நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது, உலகின் இரண்டாவது பொருண்மியமாகவும் இராணுவ உபகரணங்களை வழங்குகின்ற முதன்மையான நாடாகவும் சீனா திகழும் பட்சத்தில் தனது அயல் தீவுகளிலிருந்து சீனாவை இந்தியாவால் தூரவைத்திருக்க முடியாது. தனது பலங்களைச் சரியாகக் கையாள்வதிலும், அதே நேரம் அச்சுறுத்தும் வகையில் தனது கால்களை உறுதியாகச் சீனா இந்தத் தீவுகளில் பதிப்பதைத் தடுப்பதிலுமே புதுடெல்லியின் மூலோபாயம் தங்கியிருக்க வேண்டும்.

மாலைதீவு, சிறீலங்கா, கொமோரொஸ் ஆகிய தீவுகளுடன் இணைந்து பணியாற்றும் செயற்பாட்டை இந்தியா இன்னும் ஆழப்படுத்த வேண்டும். இந்தியா தனது பாரிய உள்நாட்டுச் சந்தையை இந்த நாடுகளுக்கு அதிகமாகத் திறந்துவிடலாம். நாட்டுக்கு நாடு எல்லைகளைக் கடந்த முதலீடுகளை ஊக்குவிக்கலாம். நீண்ட காலம் தொடர்கின்ற அரசியல் முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கலாம். இந்த நாடுகளின் உள்ளக விடயங்களில் தனது தலையீடுகளைக் குறைத்துக்கொள்ளலாம். உள்நாட்டு அதிகாரப் போட்டிகளிலிருந்து இருதரப்பு உறவுகளைப் பாதுகாக்கலாம். மேற்கூறிய வழிவகைகள் மூலம் இந்தியா இவற்றை முன்னெடுக்கலாம். இந்து சமுத்திரத்தில் உள்ள நாடுகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு வாங் பயணம் செய்து, தனது அக்கறையையும் பல புதிய திட்டங்களையும் இந்த நாடுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்நேரத்தில், தனது பிரதேச ரீதியிலான மூலோபாயப் போட்டிச் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியா இன்னும் அதிகமான அழுத்தத்தைச் சந்திக்கப் போகிறது.

நன்றி: foreignpolicy.com

Leave a Reply