கிழக்கில் கறுப்பு பொங்கல் ! மட்டு.நகரான்

536 Views

கிழக்கில் கறுப்பு பொங்கல்

மட்டு.நகரான்

கிழக்கில் கறுப்பு பொங்கல்: மட்டக்களப்பில் அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘கறுப்பு பொங்கல் விழா’ தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தமிழ் தேசிய அரசியல் பரப்பிலும் அதற்கு அப்பாலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

கிழக்கில் கறுப்பு பொங்கல்கறுப்பு பொங்கல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக் கொணரும் வகையில் அந்த நிகழ்வு நடத்தப் பட்டது என்பதை அனைவரும் உணரும் நிலையில் இல்லை.

குறிப்பாக இந்த கறுப்பு பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டதனால் ஏதோ தமிழர்களின் கலாசாரத்தினை முற்றாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அழித்து விட்டதாக தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மட்டக்களப்பில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இன்று வடகிழக்கில் விவசாயிகள் பிரச்சினை, கால்நடை பண்ணையாளர்கள் பிரச்சினை, அத்துமீறிய குடியேற்றங்கள், தொல்பொருள் அபகரிப்பு என தினமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், அவற்றினை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கறுப்பு பொங்கல் நிகழ்வினை நாங்கள் சாதாரண ஓரு விடயமாகக் கடந்துவிட முடியாது.

இந்த பொங்கல் விழாவின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறித்த பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்தபோது, அது தொடர்பில் இவ்வாறான கருத்தினை கறுப்பு பொங்கல் விழா தொடர்பில் முன்வைத்தார்.

கிழக்கில் கறுப்பு பொங்கல்“தற்போதைய அரசு பதவி ஏற்று தற்பொது ஒரு வருடங்கள் கடந்து, இரண்டாவது வருடத்தை எட்டுகிறது. இந்த அரசு பதவி ஏற்ற காலம் தொடக்கம் இன்றுவரை மக்களின் வாழ்வு பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. பொருளாதார விலை நெருக்கடி, பொருட்களின் விலை ஏற்றம், தாய் சேய் நலனில் போசாக்கான பால்மா வாங்கமுடியாத் திண்டாட்டம், எரிவாயு சிலின்டர்கள் இல்லை. அப்படி வாங்கினால் அது வெடித்து சிதறும் அபாயம். மின்சாரத் தடைகள், சாதாரண பாண், பருப்பு மா சீனி அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாத விலை ஏற்றம் அதைவிட குறித்த பொருட்களுக்கு தட்டுப்பாடு, ஏழைகளின் வயிற்றில் நெருப் பெரியும் நிலை.

இவ்வாறான அவலங்களை பார்த்துக் கொண்டு ஒரு பொங்கல் விழாவை சிறப்பாக தடத்தமுடியாது. அதேவேளை பொங்கல் பண்டிகையை கைவுடவும் முடியாது. இல்லங்களில் அவரவர் எப்படியோ பொங்கலை ஓரளவு சிறப்பாக கொண்டாடினாலும், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அதனை சிறப்பாக வெளிக்காட்ட முடியாது என்பதை எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆராய்ந்து இதனை அரசாங்கத்திற்கு ஒரு எதிர்ப்பு நிகழ்வாகவும், துக்க நிகழ்வாகவும் வெளிக்காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.

துக்கத்துக்கான நிறம் கறுப்பு, எதிர்ப்புக்கான நிறமும் கறுப்பு என்பதால் கறுப்பு ஆடைகளை முடிந்தவரை அணிவது எனவும் அந்த கறுப்பு நிறத்தை மையப்படுத்தியே ‘கறுப்பு பொங்கல்’ என இம்முறை பெயரிட்டு இது உழவர்களுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் திருப்தி இல்லாமல் அரசாங்கம் ஏற்படுத்தி விட்டது என்பதை இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டது. உண்மையில் ஏனைய மாவட்டங்களை விடவும் மட்டக்களப்பு மாவட்டம் நெல் உற்பத்திக்கு பெயர் போன ஒரு மாவட்டம் பெரும்போக நெற்செய்கையில் ஏக்கருக்கு நாற்பது மூடை தொடக்கம் அறுபது மூடைகளை விளைச்சலாக பெற்ற விவசாயிகள் பலர் மட்டக்களப்பில் உள்ளனர். ஆனால் இந்த வருடம் சேதன உரம் பாவித்தமையால் ஒரு ஏக்கருக்கு பத்து மூடைகளைக்கூட பெற முடியாத நிலை உள்ளது.

கிழக்கில் கறுப்பு பொங்கல்அது மட்டுமல்ல வாழ்வாதாரத்திற்காகவும் பால் தரும் பசு எருமை மாடுகள் ஏறக்குறைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றரை இலட்சம் உள்ளது. அந்த மாடுகளுக்கு மேய்ச்சல் தரைகளாக ஒதுக்கப்பட்ட மாதவனை, மயிலத்தமடு, கெவுளியாமடு பிரதேசங்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களைக் குடியேற்றி மாடுகளின் மேய்ச்சல் தரை அபகரிப்பு நடந்துள்ளது. இவ்வாறான பெரும் அவலங்கள், ஏனைய மாவட்டங்களை விட மட்டக்களப்பில் மிகக் கூடுதலாக இடம்பெறுகிறது.

இவைகளைத் தடுக்கவும், உண்மைகளை உலகம் உணரவும் இம்முறை கறுப்பு பொங்கல் என அடையாளமிடப்பட்டு ஒரு எதிர்பு நிகழ்வாகவே இதனை செய்தோம். போராட்ட வடிவங்கள் வெவ்வேறு பெயர்களில் பேரணி, உண்ணாவிரதம், கடை அடைப்பு, ஹர்த்தால், ஆர்ப்பாட்டம், கறுப்புப்பட்டி போராட்டம், மௌன ஊர்வலம், பகிஷ்கரிப்பு, பொங்குதமிழ், எழுகதமிழ், வீதிமறியல் போராட்டம், சத்தியாக்கிரகம் என பல வடிவங்களில் எதிர்புகளை காட்டிய தமிழ்தேசிய அரசியல் தலைமைகள் இந்த வருட பொங்கல் திருநாளை ‘கறுப்பு பொங்கல்’ என ஒரு கவன ஈர்ப்பு பொங்கல் நிகழ்வாக நடத்தியுள்ளோம்”என பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

எனினும் இந்த கறுப்பு பொங்கல் மூலம் இன்னுமொரு விடயமும் மீண்டும் வெளிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது தமிழ் தேசிய அரசியலில் கிழக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு வடக்கில் ஒத்துழைப்பு வழங்காத அல்லது உதாசீனம் செய்கின்ற செயற்பாடு வெளிகாட்டப்பட்டுள்ளது.

வடகிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைக்கு கவன ஈர்ப்பாக ஒரு தேசிய நிகழ்வினை பயன்படுத்த கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டுக்கு வடக்கிலிருந்து எந்த ஆதரவும் கைகொடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இதனை நான் இங்கு பிரதேசவாத போக்காகவோ அல்லது வடகிழக்கினை வேறுபடுத்தி பார்க்கவோ சொல்ல முயலவில்லை. தற்போதை நிலை என்ன என்பதையே இங்கு சொல்ல முற்படுகின்றேன். இதனை யாரும் பிரதேசவாதமாகக் கருதமுடியாது.

வடகிழக்கு இணைந்த தாயகம், தமிழர் தேசம் என்பவற்றில் கிழக்கு தமிழர்கள் என்றும் உறுதியாகவேயிருந்து வருகின்றனர். வடகிழக்கில் எடுக்கப்படும் எந்த தீர்மானங்களும் இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் கிழக்கு மக்கள் என்றும் உறுதியான நிலையிலேயே உள்ளனர்.

வடக்கில் தமிழ் தேசிய பரப்பில் செயற்படுவோர் அவ்வாறான மனநிலையில் உள்ளார்களா என்பது கேள்வியாகவேயுள்ளது. கடந்த காலத்தில் கிழக்கில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வடக்கிலிருந்து குரல்கள் வெளிவரவில்லை என்பது தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் தொடர்பில் கிழக்கில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதனை இங்குள்ள தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றன. இதனை அவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரசாரமாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த பிரசாரங்கள் இலகுவில் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் நிலையினைக் காணமுடிகின்றது. இதற்கு காரணமாக தமிழ் தேசிய சக்திகள் இருப்பதுதான் கவலைக்குரியதாகவுள்ளது.

இதே போன்றுதான் கிழக்கில் நடாத்தப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிகமான விமர்சனங்கள் வடக்கில் பொங்கல் விழாவினை கலைகலாசாரமாகவும், சிறப்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தியுள்ள நிலையில், கிழக்கில் இந்த பொங்கல் விழாவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் கறுப்பு, வெள்ளை உடையணிந்து கறுப்பு பொங்கலாக அனுஸ்டித்துள்ளமை தொடர்பிலேயே விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

இந்த விமர்சனங்களுக்கு பதில் கூறமுடியாத வகையில் கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்தவர்கள் வாயடைத்துப் போயுள்ள நிலையினை காணமுடிகின்றது. கிழக்கில் தீர்மானிக்கும் விடயங்களை ஏன் வடக்கில் உள்ளவர்கள் புறந் தள்ளுகின்றார்கள் என்ற கேள்வியை தமிழ் தேசியம் சார்ந்துள்ளவர்களுக்குள்ளே உள்ளவர்களே எழுப்புகின்ற நிலையில், அதன் வெளிப்பாடு வெளியில் எப்படியிருக்கும் என்பதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கட்சிக்குள்ளேயே ஒரு இணைந்த முடிவினை எடுத்து மேற்கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு வடகிழக்கினை இணைத்து கிழக்கு மக்களுக்கு ஆதரவாக இருக்கப் போகின்றார்கள் என்ற கேள்விகள் இன்று பல்வேறு பக்கங்களிலும் எழுப்பப்படுகின்றன. ஏற்கனவே தமிழ் தேசியம் சார்ந்தவர்களின் செயற்பாடுகளில் விரக்தியுற்றுள்ள மக்களை மேலும் விரக்திப்படுத்தும் செயற்பாடுகளாகவே இவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப் படுகின்றது, தமிழர்களின் பொருளாதாரம் பறிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் இணைந்து குரல்கொடுக்கும் போதே அந்த பிரச்சினைகள் ஏனையவர்களினால் கவனம் செலுத்தும் நிலையேற்படும்.

நாங்கள் இலக்கு வார இதழ் ஊடக அண்மையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் தொழில்பேட்டை என்ற பெயரில் குடியேற்றத்திற்காக முஸ்தீபுகள் நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டிருந்தோம். இன்று அது உண்மையென நிரூபிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

தமிழர்கள் இந்த நாட்டில் தனி அடையாளத்துடன் தம்மை தாமே ஆள வேண்டுமானால், தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையும், கூறுபடாத தமிழ்தேசிய சிந்தனையும் இருக்கும்போதே நாங்கள் இலக்கினை அடைய முடியும். வெறுமனே அரசியலுக்காக மட்டும் தமிழ் தேசியம் பேசி மக்களது வாக்குகளைப் பெற்று சுகபோகம் அனுபவிக்க முற்பட்டால் இந்த மண்ணில் மடிந்த அத்தனை ஆத்மாக்களும் இவர்களை சும்மா விடமாட்டாது.

Tamil News

2 COMMENTS

  1. […] கிழக்கில் கறுப்பு பொங்கல்: மட்டக்களப்பில் அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ‘கறுப்பு பொங்கல் விழா’ தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்  […]

Leave a Reply