ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது – நேர்காணல் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

உண்மையைக் கண்டறியச் சென்ற ஜேர்மானியக் குழுவினர் கூறுவது என்ன?

(கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகக் காத்திரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. பிரித்தானியா முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஜேர்மனி இணை அனுசரணை வழங்கியிருந்தது. இருந்த போதும் மேற்படி ஐநா தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இரு வாரங்களில் அதாவது 30-03-2021 அன்று கிட்டத் தட்ட 25 தமிழ், முஸ்லிம் அகதிகளை ஜேர்மனி நாடு கடத்தியது. இதனைத் தொடர்ந்து, பிரேமன் மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் ஜேர்மன் இனத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கொண்ட ஒரு குழு உண்மையைக் கண்டறியும் ஒரு பயணத்தை சிறீலங்காவில் மேற் கொண்டது. இந்தக் குழு மீண்டும் ஜேர்மனிக்குத் திரும்பிய போது மீண்டும் ஒரு நாடு கடத்தலுக்கு ஜேர்மன் அரசு தயாராகிக் கொண்டிருந்தது. நாடு கடத்தலுக்கு எதிராக 7-6-2021 இலிருந்து 9-6-2021 வரை பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு ஒழுங்கமைத்த ஆர்ப்பாட்டத்தை இக்குழுவினர் முன்னெடுத்து நடத்தினார்கள். அச்சமயத்தில் அவர்களுடன் ஒரு நேர்காணலை இலக்கு முன்னெடுத்தது. ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த நேர்காணலின் தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம்.)

IMG 20210608 WA0010 ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது - நேர்காணல் - மொழியாக்கம்: ஜெயந்திரன்கேள்வி – இலக்கு வாசகர்களுக்கு உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தைத் தரமுடியுமா?

பதில் – எனது பெயர் எலிசபெத் (Elizabeth) ஜேர்மனியில் உள்ள ஆஹ்ஹன் (Achen) நகரத்தில் வசித்து வருகிறேன். நான் இலத்தீன் அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறேன். முதற் தடவையாக 2019ம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ் மூலமாக சிறீலங்காவைப் பற்றியும் உங்கள் சமூகத்தைப் பற்றியும் அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நிகழ்வுகளில் பங்கு பற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிகின்ற வாய்ப்பு அப்போது தான் எனக்குக் கிடைத்தது. மீண்டும் இரண்டாவது தடவையாக சிறீலங்காவுக்குச் செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் மூலம் அந்த நாட்டை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. உண்மையில் யுத்தம் அங்கே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசின் பல்வேறு விதமான பொறிமுறைகளுக்கு ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை அங்கு என்னால் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எனது பெயர் லீசா (Lisa). நான் ஒரு மாணவி. பவேரியாவில் அபிவிருத்தி தொடர்பான கற்கை நெறிகளை மேற்கொண்டிருக்கிறேன். முன்னர் நான் பிரேமனில் (Bremen) தங்கியிருந்தேன். அங்கு தான் விராஜ் மென்டிஸ் இன் மனித உரிமை அமைப்புடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அங்கே ஒரு அரச சார்பற்ற அமைப்புடன் பல்வேறு அனுபவங்களைப் பெறும் நோக்குடன் சில காலம் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவர்கள் விராஜ்ஜைத் தொடர்பு கொண்டதன் விளைவாக உண்மையைக் கண்டறியும் இப்பயணக் குழுவில் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனது பெயர் ஜொனத்தன் (Jonathan) எனக்கு 22 வயது. ஆஸ்த்திரியாவிலும் (Austria) சல்ஸ்பேர்க் (Salzburg) நகரிலும் மெய்யியல், அரசியல், பொருளியல் போன்ற கற்கை நெறிகளை மேற்கொண்டு வருகிறேன். சிறீலங்கா சென்று சில நாட்களுக்கு முன்னர் தான் நாங்கள் நாடு திரும்பியிருந்தோம். இங்கு வந்ததும் இரண்டாவது தடவையாக தமிழ் அகதிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கடந்த புதன் கிழமை நாடு கடத்தல் தொடர்பான செய்தி எமக்குக் கிடைத்தது. மார்ச் மாதம் 30ம் திகதி நடைபெற்ற நாடு கடத்தல் நிகழ்வுக்குப் பின்னர் இங்குள்ள தமிழ் மக்கள் ஜேர்மனி அரசின் மீதும் ஜேர்மன் தூதரகங்கள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்தன. இவ்வளவு செயற்பாடுகளுக்குப் பின்னர் மீண்டும் நாளை இன்னும் ஒரு நாடு கடத்தல் நடைபெறுவதை அறிந்து நாங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தோம். தற்போது 16 தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தடுப்பு முகாமுக்கு முன்னர் நாங்கள் இருக்கிறோம். நாளைய தினம் இந்தத் தமிழ் அகதிகள் பிராங்பேட் (Frankfurt) விமான நிலையத்திலிருந்து சிறீலங்காவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

எனது பெயர் மாசெல் (Marcel). எனக்கு 23 வயது. நான் பிரேமன் நகரில் ஒரு மாணவனாக இருக்கிறேன். நான் சமூகவியலைக் கற்று விட்டு லீசாவைப் போல நானும் பிரேமனில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இணைந்திருந்தேன். அவ்வாறு தான் விராஜ் மென்டிஸ் உடனான தொடர்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் சிறீலங்காவுக்குச் சென்று வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜொனத்தன் கூறியதைப் போன்று கடந்த புதன் கிழமை தான் இந்தச் செய்தி எமக்குக் கிடைத்தது. சிறீலங்காப் பயணத்துக்குப் பின்னர் அதிக அவகாசம் எங்களுக்கு இருக்கவில்லை. சிறீலங்காவில் நாங்கள் திரட்டிய தகவல்களை எப்படிப் பயன்படுத்துவது என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். ஆனால் இந்த நாடு கடத்தலின் காரணமாக அந்தத் திட்டங்கள் அனைத்தையும் தற்போதைக்கு நிறுத்தி வைத்து விட்டு, நாடு கடத்தலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக போட்ஸ்ஹைமுக்கு (Pforzheim) வரவேண்டியிருந்தது. இது உண்மையில் மனதுக்குக் கஸ்ரமாகத் தான் இருக்கிறது.

51a36b1a 9edb 40af 8740 6c6d6ac33aee 1 ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது - நேர்காணல் - மொழியாக்கம்: ஜெயந்திரன்

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது - நேர்காணல் - மொழியாக்கம்: ஜெயந்திரன்

கேள்வி – முதலில் உண்மையைக் கண்டறியும் இப்பயணத்தை சிறீலங்காவுக்கு மேற்கொண்டதற்காக அனைத்துத் தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்பட்ட பின்னர் சிறீலங்காவுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

பதில் – எலிசபெத்: என்னைப் பொறுத்த வரையில் ஜேர்மன் அரசு மார்ச் மாதம் 30ம் திகதி சில மனிதர்களை நாடு கடத்தியது என்பதை நான் அறிந்த போது வெட்கமும் வேதனையும் அடைந்தேன். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் ஜேர்மன் அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தில் ஒப்பமிட்டிருந்தது. சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் குற்றவாளிகள் அங்கு எந்தவித தண்டனையையும் அனுபவிப்பதில்லை என்றும் தமிழ் மக்களுக்கான நீதி நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அந்தத தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஜேர்மன் அரசின் இந்த முரண்பாடான செயற்பாட்டை என்னால் முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பது போன்று இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது ஏராளமான மனிதர்களைக் கொலை செய்வதற்காக ஜேர்மன் அரசு பல்வேறு முகாம்களுக்கு அனுப்பியிருந்தது. இந்த அனுபவத்தை ஒரு ஜேர்மானியப் பிரசை என்ற வகையில் என்னால் மறக்க முடியாது. சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதையும் சிறீலங்கா சனநாயகத்துக்கு விரோதமாக நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டும் தமிழ் அகதிகளைச் சிறீலங்காவுக்கு நாடு கடத்திய ஜேர்மானிய அரசின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜொனத்தன்: மேற் குறிப்பிட்ட ஐநா தீர்மானத்தில் ஜேர்மனி ஒப்பமிட்டது மட்டுமன்றி, பிரித்தானியாவுடன் இணைந்து அக்குறிப்பிட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. உண்மையில் பிரித்தானியாவும் ஜேர்மனியும் இணைந்தே இந்தத் தீர்மானத்தை எழுதியிருந்தன. மற்றைய நாடுகள் அதில் ஒப்பமிட்டிருந்தன.

கேள்வி – அப்படியென்றால் குறிப்பிட்ட ஐநா தீர்மானத்தை வடிவமைப்பதில் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்தது என்பது உங்கள் கருத்து. மேலும் சிறீலங்காவுக்கான உண்மை நிலைமையைக் கண்டறியும் பயணத்தை நீங்கள் முன்னெடுத்த போது அங்கு நீங்கள் கண்டறிந்தது என்ன?

பதில் – மாசெல்: உண்மையில் அது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு பயணமாகத் தான் இருந்தது. விடுதலையைக் களிப்பதற்கு மிகவும் உகந்த ஓர் அழகிய நாடாக சிறீலங்காவை ஜேர்மானிய மக்கள் கருதுகிறார்கள். அதனை நான் ஆட்சேபிக்க வில்லை. ஆனால் இனவழிப்பு அங்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இனவழிப்பு மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் உன்னிப்பாக அவதானித்து, தனிப்பட்ட விதமாக மக்களை அணுகி உரையாடும் போது தான் உண்மையில் தற்போது அங்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதாவது வெளியில் சிறீலங்கா ஒரு சனநாயக நாடு என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் சனநாயகம் அங்கு எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை எங்களால் உய்த்துணர முடிந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்வது எம்மிலே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

லீசா: உண்மையில் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்பட்டமை தான் எமது பயணத்துக்கான மூலகாரணியாக அமைந்தது. பலரை அங்கு நாங்கள் சந்தித்து தனிப்பட்ட விதத்தில் உரையாடினோம். சமூகத்தில் பல மட்டங்களைச் சேர்ந்த பல்வேறு விதமான 30 பேரை நாங்கள் நேர்காணல் செய்தோம். போகப் போக எமது உரையாடல்கள் பலவிடயங்களை உள்ளடக்குகின்ற மிகவும் பரந்த உரையாடல்களாகத் தோற்றம் பெற்றன. நாடு கடத்தலைப் பற்றி மட்டுமன்றி பல தனிப்பட்ட விடயங்களை அவர்கள் அந்த நேர்காணலிலே எமக்கு வெளிப்படுத்தினார்கள். உண்மையில் வெளிப்படையாகப் பேச முடியாதவாறு அவர்கள் குரல்கள் அமைதியாக்கப் பட்டிருக்கின்றன. காவல் துறையினர் அடிக்கடி தமது வீட்டுக்கு வந்து தம்மை விசாரிப்பதாகவும் குறிப்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (TID)  புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்  (CID) என்று காவல் துறையைச் சேர்ந்த பலரும் தமது வீடுகளுக்கு வந்து தமது குடும்பத்தவர்களை விசாரிப்பதாகவும் தங்களை ஒளிப்படம் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இப்படிப்பட்ட கதைகளை ஆரம்பத்தில் நான் கேட்ட போது இவை ஒருசிலரின் தனிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்றே நான் முதலில் நினைத்தேன். போகப் போகத் தான் இவை மக்களின் தனிப்பட்ட அனுபவங்கள் அல்ல. இவை ஒரு கட்டமைப்பு ரீதியானவை என்ற உண்மையை நான் உணர்ந்து கொண்டேன். இரண்டு வாரங்களாக அங்கு தங்கியிருந்த நாங்கள், 30 தனிநபர்களுடன் நேர்காணலை மேற்கொண்டோம். இவை தனிப்பட்ட அனுபவங்கள் அல்ல என்பதைப் படிப்படியாக நாங்கள் புரிந்து கொண்டோம்.

அங்கு இது மிகவும் ஆழப் புரையோடியிருக்கும் கட்டமைப்பு ரீதியிலான ஒரு விடயமாகும். அத்தோடு அரச கட்டமைப்பின் ஒவ்வொரு படிநிலையிலும் இதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. கட்டமைப்பு ரீதியிலான இனவழிப்பு அங்கு தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருப்பதையே இது கோடிட்டுக் காட்டுகின்றது. இனவழிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அங்கு மக்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அரச கட்டமைப்புகளில் இது ஆழமாகப் புரையோடிப் போயிருக்கிறது. அனைத்தும் அங்கு இராணுவ மயமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த நாடு கடத்தல்களுக்கு அப்பால் இனவழிப்பு அங்கு எல்லாக் கட்டமைப்புகளிலும் பரந்து விரிந்து எல்லா மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது.

ஜொனத்தன்: “சிறீலங்காவில் போர் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் சனநாயக ரீதியாக மக்களால் தேர்வுசெய்ய்பட்ட ஒரு அரசு அங்கு இருப்பதாகவும் நாடு கடத்தப்படுபவர்களுக்கு அங்கு எந்த விதமான பிரச்சினையும் இருக்காது” என்று கூறியே ஜேர்மானிய அரசு நாடுகடத்தலைச் சட்டபூர்வமாக்கியிருந்தது.

MUSG5717 1 ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது - நேர்காணல் - மொழியாக்கம்: ஜெயந்திரன்

இப்படியான ஒரு முற்றிலும் தவறான முடிவுக்கு ஜேர்மானிய அரசு எப்படி வந்தது என்பதை என்னால் கொஞ்சம் கூடப்புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கு ஒரு சில மக்களைச் சந்தித்து உரையாடும் போதே அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதை ஒருவரால் நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐநா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி, அதிலே ஒப்பமிட்ட ஜேர்மானிய அரசினால் எப்படித் தமிழ் அகதிகளை நாடுகடத்த முடிந்தது. சிறீலங்காவில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன என்பது இரகசியமான ஒரு விடயமல்ல. இலங்கை அரசு அந்த நாட்டில் அமுலாக்கும் சட்டங்களைப் பார்க்கும் போது இது வெளிப்படையாகத் தெரிகிறது. அங்கு இப்படிப்பட்ட மோசமான நிலைமை இருக்கும் போது தமிழ் அகதிகளை சிறீலங்காவுக்கு நாடுகடத்தும் ஜேர்மானிய அரசின் இந்த முற்றும் தவறான நடவடிக்கை எனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

கேள்வி – அங்கு மூவின மக்களையும் சந்தித்து அங்குள்ள சூழ்நிலை தொடர்பாக உரையாடியதாகச் சொன்னீர்கள். உண்மையைக் கண்டறியும் அந்தப் பயணத்தில் நீங்கள் மேற்கொண்ட அந்த உரையாடல்களின் பின்னர் தமிழ் அகதிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் தீர்மானம் தொடர்பாக எப்படிப்பட்ட முடிவுக்கு வருகிறீர்கள்?

பதில் – எலிசபெத்: அங்குள்ள மக்களைச் சந்தித்ததன் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு இல்லாது ஒழிப்பதற்கு ஓர் உளவியல் யுத்தம் அங்கு முன்னெடுக்கப் பட்டு வருவதாகவே நான் கருதுகிறேன். ஒரு வகையில் தமிழ் மக்களை நாடு கடத்துவது மிகக் கவலைக் குரியதும் மிகவும் ஆபத்தானதுமான விடயமுமாகும். அதே நேரத்தில் அங்குள்ள சில சிவில் சமூக அமைப்புகள் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற் கொண்டு மாகாணங்களுக்கு சமஷ்டி அமைப்பிலான ஒரு தீர்வை முன்னெடுப்பது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது பற்றியும் அறியக் கூடியதாக இருந்தது. அரசியல் ரீதியாக அது ஒரு மிகச் சிறப்பான விடயமாகும். இத்திட்டங்கள் முன்னெடுக்கப் படுமானால் குறிப்பாகத் தமிழர் உரிமைகள் பேணப்படுமானால் இந்தப் பாரிய பண்பாட்டையும் தமிழ் மொழி பற்றிய அறிவையும் மீன்பிடி மற்றும் ஏனைய தொழில்கள் தொடர்பாக மக்களிடம் இருக்கின்ற அறிவையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

லீஸா: என்னைப் பொறுத்த வரையில் என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது இருக்கின்றது. சிறீலங்காப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நாங்கள் நாடு திரும்பினோம். என்னால் தற்போது எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது இருக்கிறது. ஏனென்றால் எங்கள் அனுபவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இப்போது நடப்பவற்றைப் பாருங்கள். நாடு கடத்தலைத் தடுப்பதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் இங்கே ஜேர்மனியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு எதிரிலே இப்போது நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம். அகதிகளுக்கு இது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஜேர்மனியில் இது தான் நடக்கிறது.  இது தான் இந்த நாட்டின் சட்டம். இப்படிப்பட்ட நிலைமைகள் தான் அகதிச்சட்டம் தொடர்பாக டென்மார்க்கிலும் இருக்கின்றன. இதைத் தான் நான் கருதுகிறேன்.

ஏராளமான விடயங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற படியால் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியாதிருக்கின்றது. எலிசபெத் கூறியது போன்று அங்குள்ள அந்த மக்களுடன் நாங்கள் மேற்கொண்ட உரையாடல்கள் எமக்கு இனந்தெரியாத ஏதோ ஒரு சக்தியைத் தந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு முடிவுக்குத் தான் என்னால் வரக் கூடியதாக இருக்கிறது. அந்த மக்களின் நாளாந்த வாழ்க்கையை எங்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பலவிதமான ஆபத்துகள் நாளாந்தம் காத்துக் கிடக்கின்றன. தங்களது உரிமைகளுக்காக, உயர்வான நோக்கங்களுக்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அந்த இயல்பு எங்கள் உள்ளங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமது நாளாந்த வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் அந்த மக்கள் எமக்குக் கொடுத்த அந்த ஆற்றல் தான் சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சூழல் தொடர்பாக இங்கு ஜேர்மானிய மக்கள் நடுவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பலவிதமான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கத் தேவையான ஆன்ம பலத்தை எமக்குத் தருகிறது.

கேள்வி – போட்ஸ்ஹைமில் (Pforzheim) நேற்று மாலையிலிருந்து நீங்கள் எதனைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன? இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதனைச் சாதிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள்?

பதில் – ஜொனத்தன்: நாளை மேற்கொள்ளப்பட இருக்கும் நாடு கடத்தல் தொடர்பான செய்தி கடந்த புதன் கிழமையே எங்களுக்குக் கிடைத்தது. இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்ததும் என்ன செய்யலாம் என நாங்கள் சிந்தித்தோம். ஜேர்மனியின் சில மாநிலங்களில் உள்ள நாடு கடத்தப்படும் அகதிகள் தங்க வைக்கப்படும் தடுப்பு முகாம்களில் ஏற்கனவே சில தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதே நேரத்தில் இந்த நகரத்திலே தான் மிக அதிகமான அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. இங்கே 16 அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று நேற்று நாங்கள் அறிந்து கொண்டோம். எனவே தான் இந்த தடுப்பு முகாமுக்கு முன்னே ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள நாங்கள் முடிவுசெய்து நேற்று மாலை அதனை ஆரம்பித்தோம். அதே நேரம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் எங்களையும் எங்களது ஆர்ப்பாட்டத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது என்பது மட்டுமன்றி அவர்களும் அங்கிருந்து குரலெழுப்பினார்கள். அந்த விடயம் எங்கள் உள்ளத்தைத் தொடுவதாக அமைந்திருந்தது.

கேள்வி – தடுப்பு முகாமில் இருந்த அகதிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்?

பதில் – எலிசபெத்: “எங்களை நாடு கடத்த வேண்டாம்”  “எங்களை நாடுகடத்த வேண்டாம்” என்று அவர்கள் குரலெழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஜொனத்தன்: ஆர்ப்பாட்டத்தின் போது சிறீலங்காவில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக எங்கள் கருத்துகளை கூடியிருந்தவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். அகதிகளுக்கென ஜேர்மனியிலுள்ள ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் எம்மோடு இணைந்து கொண்டார்கள். ஆவ்கான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் இன்று ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்துத் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் மேற்கொள்கிறோம். நாங்கள் தற்போது தடுப்பு முகாமிலிருந்து 150 – 200 மீற்றர்   தூரத்திலிருக்கும் இந்தப் பூங்காவில் இருக்கின்றோம். இங்கே நாங்கள் ஒருசிலர் கூடியிருக்கின்றோம். நாடு கடத்தல் தொடர்பாக நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று ஏனையோருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்த மக்கள் சிறீலங்காவில் எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பது தொடர்பாக நாங்கள் உரையாட விரும்புகின்றோம். ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட நாங்கள் அழைப்பு விடுத்திருக்கிறோம். திட்டமிட்டபடியே நாடு கடத்தல் செயற்பாடு நடைபெறும் என்று பிராங்பேட் (Frankfurt) விமான நிலையத்திலிருந்து தற்போது எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆம், இந்த அகதிகள் நாளை நாடு கடத்தப் படுவார்கள்.

கேள்வி – நீங்கள் கூறுவது போன்று நாடுகடத்தல் நாளை நடைபெறலாம். சிறீலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக மிகவும் காத்திரமான தகவல்களை அங்கே நீங்கள் திரட்டியிருக்கிறீர்கள். உண்மையைக் கண்டறியும் உங்கள் பயணத்தினூடாக நீங்கள் திரட்டிய அந்தத் தகவல்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அரசியல்வாதிகளுடனும் ஜேர்மானிய மக்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்களைக் கொண்டு எதிர் காலத்தில் எப்படிப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகிறீர்கள்?

BN MB461 2ra2d M 20160112121214 1 ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது - நேர்காணல் - மொழியாக்கம்: ஜெயந்திரன்

பதில் – மாசெல்: ஆம். நேற்றைய நாள் நிகழ்வுகள் பற்றி நான் கொஞ்சம் உரையாட விரும்புகின்றேன். நேற்றைய எங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் எங்களைப் பார்த்து ‘உங்களுக்கு நன்றி’ என்று சொன்னார்கள். உண்மையில் எதற்காக எங்களுக்கு அவர்கள் நன்றி சொல்கிறார்கள்? ஒரு வேளை எங்கள் ஆர்ப்பாட்டத்தால் எந்த நன்மையும் வரப் போவதில்லை. அது எனக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே நாங்கள் சேகரித்த விடயங்களை எங்களால் முடிந்தவரை அதிகமாகப் பரப்ப வேண்டும். கட்சிகளையும் தாபனங்களையும் அமைப்புகளையும் சமூகங்களையும் பன்னாட்டு அமைப்புகளையும் நாம் அணுக வேண்டும். நாங்கள் அனுபவித்த அனுபவங்களையும் நாங்கள் கண்டறிந்த விடயங்களையும் எல்லா இடமும் பரப்பி தமிழரின் உரிமைகளுக்காக மிகவும் பரந்த அளவில் ஜேர்மானிய சமூகம் போராடும் ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். இது தான் நாங்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய செயற்பாடு என நான் நினைக்கிறேன்.

ஜொனத்தன்: அதே நேரத்தில் நாங்கள் இதனையும் குறிப்பிட விரும்புகின்றோம். நாங்கள் சிறீலங்காவில் சேகரித்த தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. எம்மிடமுள்ள தகவல்களை நாங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இவ்விடயம் தொடர்பாக ஒரு விளம்பரக் காணொளியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் அங்கேயுள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக நாங்கள் சில தகவல்களைச் சேகரித்திருக்கிறோம். அங்கே மூவின மக்களையும் நாங்கள் சந்தித்தோம். அவர்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் ஓரளவு அறிந்திருக்கின்றோம். அங்குள்ள நிலைமைகளை அறிய ஆவலாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் எங்களை அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அப்படி அவர்கள் எங்களை அழைக்கும் பட்சத்தில் நாங்கள் அவர்களைச் சந்தித்து எங்களிடம் உள்ள விடயங்களை தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்கு நாங்கள் காண்பிக்கலாம். அவர்களுக்கு அவற்றை கொடுக்க மாட்டோம். ஆனால் அவற்றைக் காண்பிப்போம். இதன் மூலம் சிறீலங்காவில் வாழும் மக்களின் நிலைமை தொடர்பாக நேரடியான தகவல்களை அவர்கள் பெற முடியும்.

அரசியல்வாதிகளையும் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சிகளை எடுத்து வருகிறோம். அகதிகளை நாடு கடத்துவதா இல்லையா? என்பதை இறுதியில் இந்த அரசியல்வாதிகளே தீர்மானிக்கிறார்கள். இந்த நாடு கடத்தல் –  இது உண்மையில் மிகவும் ஒரு மோசமான விடயம். நாங்கள் ஆரம்பத்தில் கூறியது போன்று சிறீலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜேர்மானிய மக்களுக்கு எதுவும்  தெரியாது. இங்கு யாரும் அதைப் பற்றிப் பேசுவதுவதுமில்லை. சிறீலங்காவின் உண்மையான நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துவதே எங்களது முக்கிய நோக்கமாகும். நாடு கடத்தல் ஒரு நல்ல விடயமே அல்ல. ஆனால் இப்படிப்பட்ட நாடு கடத்தல்கள் நடைபெறும் போது இந்த விடயங்களை மக்கள் அறிய வருகிறார்கள். உண்மையில் நாடு கடத்தல் மிகவும் ஒரு மோசமான விடயம். ஆனால்  இவ்வாறு நாங்கள் இந்த விடயங்களைத் தொடர்பு படுத்த முடியும். இவை தான் எங்களது எதிர் காலத் திட்டங்கள் என நாங்கள் நினைக்கிறோம்.

எலிசபெத்: நாளை நடைபெற இருக்கின்ற நாடுகடத்தல் கடைசியானதாக இருக்காது என்று நாங்கள் அஞ்சுகின்றோம். ஒரு சில நேரங்களில் இன்னொரு நாடு கடத்தலையும் அரசு திட்டமிட்டிருக்கலாம். எனவே எங்கள் நாடு எவ்வாறு சனநாயகத்துக்கு விரோதமாகத் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

லீசா: நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது எங்கள் உள்ளத்தைத் தொடக் கூடிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. தற்போது அயர்லாந்தில் வதிகின்ற சிறீலங்காவைச் சொந்த இடமாகக் கொண்ட பேராசிரியர் ஜூட் லால் அலைபேசி ஊடாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேசினார். “தமிழ் மக்களை நாடு கடத்துகின்ற செயற்பாடு – இது தனியே தமிழ் மக்களுடைய பிரச்சினை மட்டுமன்று. இது சிறீலங்காவில் வாழும் மக்களுடைய பிரச்சினை மட்டுமன்று. உண்மையில் இது ஜேர்மனியில் வாழுகின்ற எல்லாப் பிரசைகளினதும் பிரச்சினையாகும். ஏனென்றால் உங்களது சனநாயகத்தின் தற்போதைய நிலைமையைப் பாருங்கள். இது முற்று முழுதாக சனநாய விரோத செயற்பாடு ஆகும். எல்லா மக்களுடைய அரசியல் உரிமைகளுக்காகவும் தான் அங்கே நீங்கள் கூடியிருக்கிறீர்கள். உங்கள் நாட்டில் நிலைமை இப்போது மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. அதனாலே தான் நீங்கள் அங்கு குழுமியிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வன்முறையான சட்டங்களுக்கு எதிராக நீங்கள் மீண்டும் மீண்டும் போராட முன்வர வேண்டும்” என்று அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.