முல்லைத்தீவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : – பொதுமக்கள் விசனம்

356 Views

முல்லைத்தீவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

முல்லைத்தீவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தொடர்பாக முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற பொதுமக்களுக்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டால் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த சில நாட்களாக காலை 09.00 மணி முதல் இடம்பெறும் என சுகாதார பிரிவினரால்  ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணி கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக முள்ளியவளை மத்தி, முள்ளியவளை தெற்கு பகுதியில் வசிக்கும் மக்களை இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ள தவறாது கலந்து கொள்ளுமாறு  அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தடுப்பூசியை பெற்றுகொள்ள கடந்த சில நாட்களாக  சென்றபோது 110 நபர்களுடைய பெயர் மட்டுமே வந்துள்ளது என கூறி  100க்கு மேற்பட்டவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சிலர் வேறு தடுப்பூசி வழங்கும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி அட்டையினை காண்பித்து சிரமமின்றி  இரண்டாவது தடுப்பூசியை பெறுக்கொண்டுள்ளனர்.  எனவே சுகாதார திணைக்களத்தினர் திட்டமிடாமல் தடுப்பூசிக்காக மக்களை ஒன்றுதிரட்டி  பின்னர் தடுப்பூசியினை வழங்காது திருப்பியனுப்பியமை புதிய கொரோனா கொத்தணி உருவாக காரணமாக அமைந்திருக்கும்  எனவும் மக்களை சுகாதார பிரிவினர் ஏமாற்றியதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply