போரை நிறுத்த சீனா உதவவேண்டும் – செலன்ஸ்கி

ரஸ்யாவுடன் உள்ள தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஸ்யா மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை நிறுத்த சீனா முன்வரவேண்டும் என உக்ரைனின் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தென்சீன மொனிங் போஸ்ட் என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்கணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

நான் சீனா அதிபர் சி ஜின்பிங் உடன் நேரிடையாக பேசுவதற்கு ஆவலாக உள்ளேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் நான் அவருடன் நேரிடையாக பேசியிருந்தேன். அதன் பின்னர் பேசவில்லை.

அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த போரை நிறுத்த சீனா எங்களுக்கு உதவவேண்டும் என நான் கோரிக்கை விடுக்கவுள்ளேன். ரஸ்யாவுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி இந்த போரை நிறுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் சிறப்பு படை நடவடிக்கையை இதுவரையில் சீனா கண்டனம் செய்யவில்லை என்பதுடன், மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகளையும் அது புறந்தள்ளியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.