இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘யுவான் வாங் 5’ என்பது, சீன விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலாகும். இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது.

2007ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும் பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது, அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தலாகும் என இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையிலேயே, சீன அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தும் வரை அந்த கண்காணிப்பு கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நன்றி- பிபிசி தமிழ்