பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி

சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு

பகுதி 1

சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி

இறுதிப் பகுதி

பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு: றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது. குளோபல் றைட்ஸ் கொம்பிளையன்ஸ் எல்எல்பி (Global Rights Compliance LLP) என்ற சட்ட நிறுவனத்தைச் சார்ந்த வெய்ன் ஜோடாஷ்  (Wayne Jordash) என்ற சட்டத்தரணி இந்த முயற்சியை பிரித்தானியத் தமிழர் சார்பில் முன்னெடுக்கிறார். இந்தச் சட்ட முன்னெடுப்பு தொடர்பாக வெய்ன் ஜோடாஷ் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த செவ்வியின் மொழியாக்கத்தின் இரண்டாவது  பகுதியை இங்கே தருகிறோம்

கேள்வி:
பாதிக்கப்பட்ட இந்த 200 தமிழர்களுக்காக நீங்கள் வாதிடுகிறீர்கள். ஆகவே இக்குற்றங்கள் தொடர்பான ஒரு விசாரணையை பன்னாட்டுக்குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர்கள் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

பதில்:
இது உண்மையில் ஒரு நல்ல கேள்வி. இதற்கு நேரடியாகப் பதிலிறுப்பது கடினம். உண்மையில் சிறீலங்கா அரசு குற்றங்கள் இழைத்ததற்கான சான்றுகள் நிறையவே இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கருத்தை நான் மிகவும் அரிதாகவே முன்வைப்பேன். சிறீலங்கா அரசு இதற்கான எதிர்வினையை எப்படி ஆற்றப்போகின்றது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்விடயத்தில் நாம் மிகவும் அவதானமாகத் தான் நகர வேண்டும். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இக்குற்றங்கள் தொடர்பாக பல பத்து ஆண்டுகளாக உலகம் பூராவும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் இருக்கின்றன.

சிறீலங்கா தொடர்பாக நீண்ட காலமாகவே பல நாடுகள் பல அறிக்கைகளைத் தயார் செய்து வந்திருக்கின்றன. உதாரணமாக சிறீலங்காவில் தமிழ் மக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்று ஐக்கிய இராச்சியம் பல தடவைகள் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட விடயங்கள் ஐக்கிய இராச்சியத்தின் நீதிமன்றங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு குற்றங்களை இழைத்திருக்கிறது என்பது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

ஆனால் இங்கே உள்ள மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் இக்குற்றங்கள் எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு? அதிபர் கோட்டாபய ராஜபக்ச இதற்குப் பொறுப்பா அல்லது அல்லது முன்னைய இராணுவத்தளபதியா என்ற கேள்விகளும் இருக்கின்றன. உண்மையில் கிடைத்திருக்கும் சான்றுகள் எல்லாம் அவர்களையே சுட்டிக்காட்டுகின்றன. இந்த சான்றுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிராகவே இருக்கின்றன. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக மட்டுமல்ல பல பத்து ஆண்டுகளாக இந்தக் குற்றங்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதை அனுமதிக்கின்றது. இலங்கை இராணுவமும் இலங்கை காவல்துறையும் இக்குற்றங்களுடன் தொடர்பு பட்டிருக்கின்றன.

இக்குற்றங்களுடன் இந்நிறுவனங்கள் தொடர்புபட்டிருப்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே தர்க்கவியல் ரீதியாக நோக்குவோமாக இருந்தால் இந்தத் தனிநபர்கள் இக்குற்றங்களுக்கு உண்மையில் பொறுப்பானவர்கள் என்று சொல்லலாம். உங்களது கேள்விக்கு உண்மையில் பதில் கூறுவதாயின், இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நடுவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பது, சாத்தியமாகும் என்றே நான் சொல்வேன்.

அந்த நேரத்தில் பாதுகாப்புச் செயலராகவும் தற்போதைய அதிபராகவும் இருக்கின்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், சிறிலங்கா புலானய்வுத்துறை மற்றும் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடுப்பதற்கான சான்றுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை சிறீலங்காவில் இழைக்கப்பட்டன. ஆனால் அவை இந்த நாட்டிலும் தொடர்கின்றன. பன்னாட்டுக்குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர்கள் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் உழைக்க வேண்டும். இது ஒரு உண்மை சார்ந்த விடயம் மட்டுமன்றி சட்ட நுணுக்கங்கள் சார்ந்த விடயமும் ஆகும்.

நீதிபரிபாலனம் தொடர்பான தடைகளை எம்மால் கடக்க முடிந்தால், தற்போதைய அதிபரும் அப்போதைய பாதுகாப்புச் செயலருமாக இருந்த கோட்டாபயவுக்கு எதிராக ஒரு முழுமையான விசாரணையை வழக்குத் தொடருநர்கள் ஆரம்பிக்க வைக்க எமக்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன.

கேள்வி:
சிறீலங்கா அரசால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான சான்றுகள் மிக அதிமாகவே இருக்கிறது என்ற வசனத்தை மூன்று தடவைகள் நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அப்படிப் பார்க்கும் போது இந்த 200 தமிழர்கள் சார்பில் நீங்கள் எடுக்கின்ற இந்த சட்ட ரீதியான முயற்சியைத் தொடர்ந்து பன்னாட்டுக்குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குக்கு முந்திய அவையால் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு வழக்கை முன்னெடுப்பதற்கு கணிசமான அளவு வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:
அப்படியான ஒரு வழக்கைத் தொடர்வதற்கு கணிசமான அளவு வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால், மேற்படி குற்றங்கள் சிறீலங்காவில் இழைக்கப்பட்டதுடன் அவை ஐக்கிய இராச்சியத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாடு திரும்புவதற்கான உரிமை மறுக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று இதற்கு முன்னர் பதவி வகித்த பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின வழக்குத் தொடருநர் கூறியது போன்று, இந்த துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வெளியேறி இன்னொரு நாட்டுக்கு வந்து சேரும் போது இவ்வாறான குற்றங்கள் எல்லைகளைக் கடந்து அங்கும் தொடர்கின்றன என்பதாகும்.

பாதிக்கப்பட்டு ஐக்கிய இராச்சியத்துக்கு வந்திருக்கும் இந்தத் தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகமுடியாது, என்பதுடன் துன்புறுத்தல்களும் நாடுகடத்தல் செயற்பாடுகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. நாடு திரும்புவதற்கான உரிமை மறுக்கப்படல் என்று குற்றத்துக்குள் இது அடங்குகிறது. இந்தக் குற்றங்களை ஏற்கனவே இழைத்தவர்கள் மீண்டும் இந்தத் தமிழர்கள் நாடு திரும்புவதைத் தடுக்கின்ற விடயங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அதாவது இவர்களது துன்புறுத்தல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்று வாதிடக்கூடியதாக இருக்கும்.

கேள்வி:
சிறீலங்கா அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களை இனப்படுகொலையாகக் கருத முடியுமா?

பதில்:
இதுவும் ஒரு நல்ல கேள்வி தான். சிறீலங்கா பிரச்சினை தொடர்பாக அறியும் விடயத்தில் நான் ஆரம்ப கட்டத்திலே தான் இருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சிறீலங்கா விடயத்தை நான் படிக்கத் தொடங்கினேன். 2009 இல் சிறீலங்கா இராணுவம் போரை வெற்றி கொண்ட போது என்ன நடந்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அந்த நேரத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். அந்தப் பிரச்சினை இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்துக்கு உள்ளாகுபவர்களை சிறிலங்கா அரசு எவ்வளவு கொடூரமான முறையில் நடத்துகிறது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறேன்.

சிறீலங்கா அரசின் நோக்கம் என்ன என்பதையும் அறிந்திருக்கிறேன். ஒரு இனவழிப்புக் கொள்கையை சிறீலங்கா அரசு கைக்கொள்கிறது என்ற முடிவுக்கு நாங்கள் வரக்கூடியதாக இருக்கிறது. இனப்படுகொலைக் குற்றத்தை நிரூபிப்பதற்கு முழுமையாகவோ அன்றேல் பகுதியாகவே ஒரு இனத்தை அழிக்கும் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை நிரூபித்தாகவேண்டும். உண்மையில் அடைவதற்கு இது ஒரு மிகக் கடினமான இலக்கு என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று நான் சொல்கிறேன். ஏற்கனவே இருக்கின்ற ஆயிரக்கணக்கான அறிக்கைகளைப் படித்து, இந்த அறிக்கைகளிலுள்ள சான்றுகள் தொகுக்கப்பட வேண்டும்.

தமக்கான தாயகத்தை அமைக்கத் தமிழ் மக்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் சிறீலங்கா அரசு தகர்த்து வருகின்றது. ஆகவே அழிப்பதற்கான ஒரு நோக்கம் அங்கே இருக்கிறது என்பதை நிறுவ நான் முயற்சிக்கிறேன். உண்மையில் தமிழ் மக்களை முழுமையாகவும் பகுதியாகவும் அழிக்கும் நோக்கம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். எங்களிடத்தில் இருக்கும் சான்றுகள் அனைத்தையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகின்றது. சட்ட ரீதியாக இது மிகவும் நுணுக்கமான ஒரு விடயமாகும்.

கேள்வி:
பங்களாதேஷ் நாட்டில் வாழுகின்ற றோகிங்யா அகதிகள் சார்பாக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வழக்குடன் நீங்கள் தொடர்புபட்டிருப்பதாக அறிகிறோம். ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கின்ற தமிழ் அகதிகள் தொடர்பான வழக்கை முன்னெடுக்க அந்த அனுபவம் ஏதாவது வகையில் உங்களுக்கு உதவியிருக்கிறதா?

பதில்:
மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. பன்னாட்டளவில் இழைக்கப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக எமது சட்ட நிறுவனம் ஏற்கனவே சட்ட முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறது. றோகிங்யா அகதிகள் விடயத்தில் நாம் ஈடுபட்ட போது அவர்களுக்கான தீர்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை நாம் உணர்ந்தோம். அவர்களது பிரச்சினை தொடர்பாக சட்ட நுணுக்கங்களோடு மட்டும் நாங்கள் நிற்கவில்லை. றோகிங்யா மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான பொறுப்புக் கூறலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகளை நாம் எடுத்தோம். தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது, அவர்கள் முற்றிலும்  வேறுபட்டவர்கள்.

ஆனால் அதேவேளையில் ஒரு சில ஒற்றுமைகளையும் நான் பார்க்கிறேன். தமிழ் மக்களது அரசியல் நடவடிக்கைகளை நசுக்க முயல்கின்ற ஒரு மோசமான அரசைப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. அதே வேளையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு சில தெரிவுகள் மட்டும் இருப்பதையும் எங்களால் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பன்னாட்டுச் சமூகம் இவ்விடயங்கள் தொடர்பாக அதிகம் கதைத்தாலும் உருப்படியான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. றோகிங்யா மக்களது விடயத்திலும் இதே நிலை தான் இருந்தது. தற்போது கம்பியா நாடு மியான்மாருக்கு எதிராக பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

ஆகவே கடுமையான பரப்புரையைத் தொடர்ந்தும் குற்றங்களை மையப்படுத்திய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் வாய்ப்புகளுக்கும் தீர்வுகளுக்கும் பொறிமுறை களுக்குமான கதவுகள் திறக்கின்றன. தமிழ் மக்களுக்கும் இது நடைபெற வேண்டும் என நான் ஆசிக்கின்றேன். றோகிங்யா விடயத்தை நோக்கும் போது குற்றங்களின் சட்ட நுணுக்கங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குற்றங்கள் எங்கே தொடங்கப்பட்டன. பின்னர் அவை எங்கே தொடர்கின்றன என்பது நோக்கப்படவேண்டும். மியான்மார் விடயத்தில் பயன்படுத்தப்படும் நீதிபரிபாலன நடைமுறை தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வாய்ப்பு உள்ளது. வழக்குக்கு முந்திய அவை (Pre-Trial Chamber) தமிழ் மக்கள் தொடர்பாக இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மக்கள் தொடர்பான வழக்கை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மிக அதிகமான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அப்படியான வாய்ப்புகள் நிச்சயமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் றோம் சாசனத்தில் ஒப்பமிட்ட ஒரு நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும். இவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழலை சிறீலங்கா அரசே உருவாக்கியது. அதனாலே தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனவே அவர்களது நாடுகடத்தல் அவர்கள் தற்போது இருக்கின்ற நாட்டிலும் தொடர்கிறது.

எனவே றோம் சாசனத்தில் ஒப்பமிட்ட ஒரு நாட்டில் அவர்கள் வாழும் பட்சத்தில், அவர்கள் அது தொடர்பாக வாதிடலாம். மேலும் துன்புறுத்தல்கள் தொடர்பாகவும் நாடு திரும்புவதற்கான உரிமை மறுக்கப்படுவது தொடர்பாகவும் இதே நிலை தான் இருக்கிறது. இவ்வாறான துன்புறுத்தல்களை அனுபவித்தவர்கள் றோம் சாசனத்தில் ஒப்பமிட்ட ஒரு நாட்டில் வாழும் பட்சத்தில் இதே அணுகுமுறையைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அகதிகளுடனும் நாம் தொடர்பு கொள்ள இருக்கிறோம். அவர்களும் இதே நிலையில் இருந்தால் இவ்வாறான குற்றங்கள் தொடர்கின்றன என்று நாங்கள் வாதிடலாம்.

 

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு - சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி