ஆய்வாளர் பற்றிமாகரன்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும் வாழ்தல் வேண்டும் என்பது 2009இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்ட மகிந்த சிந்தனை. பத்தாண்டுகளின் பின்னர் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என அவ்வழியைச் “சிறிலங்காவினர்க்கான அபிவிருத்திகள்” என்ற வார்த்தைஜாலங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான புது வழியாக கோத்தபாய சிந்தனை காட்ட முற்பட்டிருக்கிறது.
எப்பொழுதுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதுடன் இணைத்து, ஈழத்தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற தொன்மையும் தொடர்ச்சியுமான உரிமைகளை மறுத்து, சிறிலங்கா என்னும் நாட்டு அடையாளத்துடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மையினமாக அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்திச் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து அவற்றில் பங்கெடுக்க வரும் சர்வதேச அரசுக்களின் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் பெற்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மேல் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வது சிறிலங்கா அரசின் வழமையாகத் தொடர்கிறது.
இவ்வாறு தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil’s National Question)என்ற ஒன்றே இலங்கையில் இல்லை எல்லாமே அபிவிருத்திப் பிரச்சினையெனச் சிறிலங்கா உலகுக்குக் காட்ட முற்படும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்றால் (Tamil’s National Question) இதுதான் என உலகுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்து வந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தெளிவான அரசியல் சிந்தனைகள் நினைவுக்கு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நாளான டிசம்பர் 14ம் நாளன்று உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செய்வது தமிழர் சமுதாய வழமையாக உள்ளது.
இவ்வாண்டு அவரின் 15வது ஆண்டு நினைவேந்தல் காலமான டிசம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பது சாலப்பொருத்தமாக அமைகிறது.
“மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றார்கள்” (போரும் சமாதானமும் 647) என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் தெளிவாக உலகுக்கு மீளவும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறது.
சுயநிர்ணய உரிமை
அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்பொழுதும் மையப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அதிகாரத்தை மற்றைய மாநிலங்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியே தவிர இலங்கைத் தீவு போன்ற வரலாற்றில் இருதேசியங்களின் இறைமைகளை இறைமை இழப்பு ஏற்படாது பகிர்ந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் “பிரதேச சுயாட்சி” என்பதே தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுடைய தன்னாட்சி உரிமை இழப்பின்றி இறைமை பகிரப்படுவதற்கான நேர்மையான வழியாக அமையலாம்.
ஒரு அரசு தனது மக்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுதே அந்த அரசுக்கு பிரதேச ஒருமைப்பாடு உள்ளதென்பதையும் தனது மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் போது அந்த அரசு அந்த மக்கள் மீதான பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையைத் தானே இழந்து விடுகிறது என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கியூபெக் மாநிலத்தின் பிரிவினைப் பிரச்சினையை கனடிய உச்ச நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பின் பின்வரும் வாசகங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார் :-
‘தன்னாட்சி உரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது வளர்ந்து வரும் ஒரு கருத்துருவம். பரிணாமம் பெற்று வரும் ஒரு கோட்பாடு. சர்வதேசச் சட்டத்துறையில் புத்தாக்கம் பெற்று வரும் விதியாகவும், சர்வதேச மனிதஉரிமை நியமமாகவும் இது கொள்ளப்படுகிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, ஆரம்பத்தில் மேற்குலக வல்லரசுகளின் குடியேற்றத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1970ம் ஆண்டுக்குப் பின்பு இக்கோட்பாடு புத்தாக்கம் கண்டது. பிரத்தியோகமாகக் குடியேற்ற நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான தகைமையை நிர்ணயிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ‘அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச சட்டவிதிகள்’ என்ற புதிய பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
இப்பிரகடனத்தில் “சுயநிர்ணயமும் சம உரிமை விதிகளும்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட ஒரு விதி பின்வருமாறு உள்ளது:- “ஐநா சாசனத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க, எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியல் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமுக,கலாசார வளர்ச்சியைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்திற்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
“இப்போதுள்ள அரசுக்கள், கனடா உட்பட தமது பிரதேச ஒருமைப்பாட்டைப் பேண விழைவதற்கும், ஒரு ‘மக்கள்’ ஒரு சுயநிர்ணய உரிமையை முழுமையாகப்; பெற்றுக் கொள்ள முனைவதற்கும் இடையில் மத்தியில் முரண்பாடு எழுவதற்கு அவசியமில்லை. எவ்வித பாகுபாடுமின்றி முழு மக்களையும் அல்லது மக்கள் சமுகங்களையும் தனது ஆட்சி அமைப்பில் பிரதிநிதப்படுத்தி, உள்ளீட்டான ஆட்சி ஒழுங்கில் சுயநிர்ணயத்தின் விதிகளுக்கு ஒரு அரசு மதிப்பளிக்குமானால், சர்வதேச சட்டத்திற்கு அமைய தனது பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அந்த அரசுக்கு உரிமையுண்டு.
ஒரு அரசின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஒரு அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.எனவே இந்த விளக்கத்தின் மூலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் மேலான தனது அடக்கு முறைகளால் தமிழர் தாயகப் பகுதிகளில் தானாகவே தனது பிரதேச ஒருமைப்பாட்டை இழந்து விட்டது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.
ஒருதலைபட்சமான பிரிவினையைப் பிரகடனம் செய்யும் பிரத்தியோகச் சூழ்நிலை பற்றிய கனடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: –
அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை இரு வகுப்பினரான மக்களுக்கு (குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு அல்லது அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள மக்களுக்கு) உரித்தாகும். ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்குக் குடியேற்ற நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு என்பது இப்பொழுது விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகி விட்டது. குடியேற்றத்திற்கு வெளியான சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு மக்கள் சமுகம் அந்நிய அடக்கு முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டல் முறைக்கும் ஆளாகும் பொழுது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.
ஒருதலைபட்சமான பிரவினைக்கு சுயநிர்ணய உரிமையைப் பாவிக்கும் மூன்றாவது சூழ்நிலை பற்றியும் சில மதிப்புரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த மூன்றாவது சூழ்நிலை குறித்துப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், ஒரு மக்கள் சமுகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள முறையில் அடைவதற்குத் தடையேற்படுமானால், இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.” என்கிறது.
எனவே ஒரு அரசு தனது மக்களின் சமமான உரிமைகளையும் உள்ளக சுயநிர்ணய உரிமையையும் தனது அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே நிறைவு செய்யாவிட்டால் அந்த மக்கள் இயல்பாகவே வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க உரிமையுடையவர்கள்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவற்றைத் தெளிவுபடுத்தியது பிரிவினையைத் தூண்டவல்ல அரசின் கடமையையும் மக்களின் உர்pமையையும் இருதரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவே. இதனை உறுதி செய்யக் கூடிய முறையிலேயே 2003ம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார் :-
“தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடின்றி, சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இனஅடையாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமதுமக்களின் அரசியல் அபிலாசை, உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது” என்பது தேசியத் தலைவரின் கருத்து. தமிழ் மக்களின் பிரதேச சுயாட்சி என்றால் என்ன என்பதை இதில் மிக அழகாக எடுத்துரைத்தார்.
தமிழ் மக்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை தேசியத் தலைவர் அவ்வுரையில் வலியுறுத்தி வேண்டினார். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்று விடவில்லை.
ஐ.நா பிரகடனத்தில் அரசுக்களின் கடப்பாட்டு விதியாக நெறிக்கப்பட்டிருக்கும், “சம உரிமைகளையும் சுயநிர்ணயத்தையும், பௌத்த சிங்கள பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் சிங்கள அரசு தமிழர்களுக்கு வழங்கி விடப்போவதில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவேதான் அவர் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்வது பற்றி ஒரு கண்டிப்பான எச்சரிக்கையை விடுத்தார்.
எமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, பிரதேச தன்னாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்து பிரிந்து சென்று தனியரசை அமைக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதே அவ் எச்சரிக்கை.
இந்த எச்சரிக்கை பிரிவினைக் கோரிக்கை அல்ல. உண்மையை உலகுக்குத் தெளிவுபுடுத்திய மொழி. ஆயுதங்கள் மௌனித்துள்ள இன்றைய சூழ்நிலையில் தேசியத் தலைவர் அவர்களதும் தேசத்தின் குரலினதும் இணைந்த இக்கருத்துக்கள் பிரதேச சுயாட்சி மூலமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை உருவாக்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும் உலகுக்கும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன என்பதை ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து சனநாயக வழியில் பாதுகாப்பான அமைதியான வாழ்வை எமது தாயக உடன்பிறப்புக்கள் காண ஓரே அணியில் திரண்டு நின்று உதவுவதே பாலா அண்ணன் என்ற அன்புருவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.