கிழக்கின் வறுமையும் இனமாற்றம் செய்யப்படும் பெண்களும்! க.மேனன் – மட்டக்களப்பு

672 Views

கிழக்கின் வறுமை

 க.மேனன் 

கிழக்கின் வறுமையும் இனமாற்றம் செய்யப்படும் பெண்களும்: கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலக்கு வார இதழில் நாங்கள் பல்வேறு விடயங்களை எழுதி வந்திருக்கின்றோம்.போருக்கு பின்னரான கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்துவருகின்றனர்.

கிழக்கு மாகாணம் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மத்தியில் காணப்படும் மாற்றாந்தாய் மனப்பாங்கு, அரசாங்கம் கிழக்கில் தமிழர்களை பிரித்தாளும் தந்திரங்கள் ஊடாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் என பல்வேறு காரணங்களால் கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் நிலையென்பது கவலைக்குரியதாகவே மாறிவருகின்றது.

யுத்த காலத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிர்வாகம் காரணமாக கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்தவரையில், முடிந்தளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையிலிருந்தது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்த களத்தில் போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவர்களினால் கட்டமைக்கப்பட்ட பல்வேறு துறைகள் ஊடாக தமிழர்கள் அன்றாடம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாணத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டன. அதன் காரணமாக கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் என்பது மாகாணத்திற்குள்ளேயே தீர்த்துவைக்கப்பட்ட அல்லது முடித்துவைக்கப்பட்டதாக இருந்தது.

போராட்டக் களத்தில் கிழக்கு மாகாண போராளிகள் அதிகளவில் தமது உயிர்களை தியாகம் செய்தபோது அந்த வேளையில் அவர்களது குடும்பங்களுக்கான உதவிகள் இந்த கட்டமைப்புகள் ஊடாக வழங்கப்பட்டதுடன், கிராமிய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தும் கூடிய கரிசனைகள் யுத்தகாலத்திலும் யுத்ததில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் யுத்ததிற்கு பின்னர் மேய்ப்பார் இல்லாத ஆடுகள் போன்று தமிழர்களின் நிலை கிழக்கில் காணப்படுகின்றது. எந்த கட்டமைப்பும் இல்லை, முறையான வாழ்வாதார செயற்பாட்டு திட்டங்களும் இல்லை. மாவீரர்களின் குடும்பங்களும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு நிலைமைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். அதன்போது பல்வேறு துயரமான மனதுக்கு கவலையளிக்கும் விடயங்கள் தெரியவந்து.

கிழக்கின் வறுமைஅம்பாறையின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் அர்ப்பணிப்புகளை செய்த கிராமம் ஒன்றில் முன்னாள் விடுதலைப்புலி பெண் போராளியொருவர் இஸ்லாமிய நபர் ஒருவரை மணந்த செய்தி மனதை பாதிப்பதாக அமைந்தது. அந்த செய்தியே இன்று இந்த கட்டுரையினை எழுதுவதற்கு என்னை தூண்டியது. குறித்த பெண் போராளிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் எனவும் குறித்த பெண்ணின் கணவர், முன்னாள் போராளியாகயிருந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போன நிலையில், குறித்த பெண் மிகவும் கஸ்ட நிலையிலிருந்ததாகவும், இந்த நிலையில் குறித்த இஸ்லாமிய நபர் குறித்த பெண்ணை மணக்கவும் பிள்ளைகளை பராமரிக்கவும் முன்வந்த காரணத்தினால் அவரை அந்த முன்னாள் போராளி மணந்து இனம் மாறிச் சென்றதாக தெரிவித்தார்.

இந்த நிலைமையை நாங்கள் வெளிக்கொணர வேண்டிய தேவை எமக்குள்ளது. இதுதான் இன்றைய கிழக்கு மாகாண நிலைமை. இந்த முன்னாள் போராளி மட்டும் அல்ல இன்று கிழக்கு மாகாணத்தில் அதிகளவான இனமாற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முக்கியமான காரணமாகயிருப்பது வறுமையாகும். வறுமை நிலையில் உள்ள பெண்கள் ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இனமாற்றும் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதல்

இவ்வாறான சம்பவங்கள் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற முன்னர் அதிகளவில் இருந்தபோதிலும், தாக்குதல் நடைபெற்ற பின்னர் குறைந்திருந்த நிலையில், இந்த கொரோனா தொற்று சூழல் காரணமாக மக்கள் மத்தியிலிருந்த வறுமை நிலைமையே இன்று தமிழர்களை இனமாற்று சூழலுக்குள் தள்ளும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக சர்வதேச ரீதியாக அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையான திட்டங்கள் இல்லாமல் பிள்ளையான், கருணா போன்றவர்களினால் தங்களது அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டதன் காரணமாக வறிய நிலையிலுள்ள மக்களுக்கான எந்தவித வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்தின்போது பல அழிவுகளை எதிர்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான எந்தவித விசேட திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், 90ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற தமிழர்கள் ஒழிப்பு செயற்பாடுகள், இனக்கலவரங்கள், யுத்தம் போன்றவை காரணமாக 25000க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன.

கிழக்கின் வறுமைகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், கைவிட்டு எண்ணக் கூடிய வகை யிலேயே பெண்களின் உற்பத்தி தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான செயற்பாடுகள் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களாகவே இருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே பெண்கள் வெளியில் சென்று தமக்கான தேவையினையும் குடும்பத்தின் தேவையினையும் பூர்த்தி செய்யவேண்டிய தேவையுள்ளதன் காரணமாக தொழில்தேடி மாற்று இனங்களிடம் செல்லும் நிலை அதிகளவில் கிழக்கில் உள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மாற்று இனங்களினது பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் தமிழ் பெண்கள் அதிகளவில் கடமையாற்றும் நிலையே உள்ளது. ஒரு இனத்திற்காக ஆயுதம் தாங்கி போராடிய பெண்கள் கூட தனது குடும்ப சுமையினை சுமப்பதற்காக மாற்று இனங்களின் காலடியில் கிடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையினை காணமுடிந்து.

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கி போராடிய போதும் தமிழ் சமூகத்தின் தேவையினையும், நிலையினையும் கருத்தில் கொண்டு பொருண்மியம் உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கி, அதற்கான இயங்கு நிலையினைக் கொடுத்த பின்பே போராட்டங்களை தீவிரப்படுத்தியிருந்தனர். ஆனால் தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் இன்று தமிழர்களின் பொருண்மியம், அவர்களின் வாழ்வாதாரம் குறித்து எந்தவித அக்கறையும் அற்ற நிலையில் வெறும் தாம் சார்ந்த அரசியல் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் நிலையினை நாங்கள் உணரமுடிகின்றது.

கிழக்கின் வறுமைகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், தமிழ் தேசிய அரசியல் என்பது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியலாக இல்லாமல், தமது சுய தேவையினை நோக்கிய அரசியலாகவே இருந்து வருகின்றது. கடந்த நல்லாட்சிக் காலத்தில் முட்டுக் கொடுத்த காலப்பகுதியில் கூட தமிழர் பகுதிகளில் ஒரு தொழிற்சாலையினைக்கூட அமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையேயிருந்தது.

இன்றுகூட கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினை குறித்து எந்தவிதமான தகவல்களும்பெ ற்றுக்கொள்ள முடியாது. அவர்களிடம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற வகையான திட்டங்களும் இல்லை. வெறுமனே தமிழ் தேசியம் என்ற தாரக மந்திரத்தினை மட்டும் கொண்டு இவர்கள் தங்களது அரசியலை முன்னெடுத்து தமது கஜானாவினை பாதுகாக்கும் வழிவகைகளையே முன்னெடுக்கின்றனர். இவ்வாறான காரணங்களும் கிழக்கில் தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்கள் வெறுப்பை ஏற்படுத்துவதற்கு காரணங்களாக அமைகின்றன.

கிழக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில் உள்ளவர்களோ, வறிய நிலையில் உள்ள பெண்களோ தமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கான எந்தவொரு தொழிற்சாலைகளும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. தமிழர்களின் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பெண்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதற்கான தொழில் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மீண்டும் தமிழ் மக்களிடமே விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். இன்று மாற்று இனங்களின் கடைகளுக்கு தொழிலுக்கு செல்லும் பெண்கள் ஆசைவார்த்தை கூறப்பட்டு இனமாற்றம் செய்யப்படுவது என்பது தமிழ் பெண்கள் மத்தியில் உள்ள வறுமை நிலைமையே காரணமாக அமைகின்றது. இந்த நிலைமைக்கு நாங்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையிலுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் அனைத்து வளங்களும் கொண்ட மாகாணம். இங்குள்ள வளங்கள் அடையாளப்படுத்தப்பட்டு கிராமங்கள் தோறும் இல்லாவிட்டாலும் பிரதேச செயலகங்கள் தோறும் இரண்டு தொழிற்சாலைகளை அமைக்கும்போது மக்களின் வறுமை நிலையும் நீங்கும் தமிழர்களின் பொருளாதாரமும் அதிகரிக்கும் தமிழர்களுக்கான முதலீகளை செய்வதற்கான சந்தர்ப்பமும் அமையும். இதனை உரியவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad கிழக்கின் வறுமையும் இனமாற்றம் செய்யப்படும் பெண்களும்! க.மேனன் - மட்டக்களப்பு

2 COMMENTS

  1. […] கிழக்கின் வறுமையும் இனமாற்றம் செய்யப்படும் பெண்களும்! க.மேனன் -மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலக்கு வார இதழில் நாங்கள் பல்வேறு  […]

Leave a Reply