எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை – விரிவுரையாளர் ராஜ்குமார்

583 Views

சரியான பார்வை இல்லை

விரிவுரையாளர் ராஜ்குமார்

சரியான பார்வை இல்லை

எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை: பிரித்தானியாவில் சமீபத்தில் ஒரு பேசுபொருளாக இருப்பது. தமிழர் மரபுரிமைத் திங்கள். லண்டனில் முன்மொழியப்பட்ட விடயத்தை எல்லோரும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து பெருமைப்பட்ட விடயத்தை நாங்களும் அறிந்திருக்கின்றோம். இது தொடர்பாக விரிவான தெளிவான விளக்கத்தை பெறுவதற்காக விரிவுரையாளர் ராஜ்குமார் அவர்களை செவ்வி கண்டிருந்தோம்.

கேள்வி:
இந்த முயற்சி எப்போது ஆரம்பமானது? இதற்கு அரச ஆணை கிடைக்கவில்லை. இப்போது முன்மொழியப்பட்டிருக்கிறது. நடைமுறைக்கு என்னும் கொண்டு வரவில்லை. முதலில் தமிழர் மரபுரிமை திங்கள் என்றால் என்ன என்பதனை தெளிவு படுத்துங்கள்.?

பதில்:
தமிழ் மரபு மாதம் அல்லது மரபுரிமை மாதம் அல்லது மரபுரிமைத் திங்கள் என்று அழைக்கப்படும் மாதம் என்பதன் கருப்பொருள் முக்கியமாக பல அறிஞர்களால் பல மாதங்களாக விவாதிக்கப்பட்டாலும் கனேடிய மக்களுக்காக அதாவது புலம்பெயர் தேசங்களிலே முதன்முறை முன்னெடுத்து அதனை சரியான முறையிலே வடிவமைத்து நிறுவனமயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கனடாவில் ஆரம்பத்தில் ஒவ்வொரு மாநகர ஆட்சிகளிலும், அதன் பின் பிராந்தியத்திலும் தேசிய அளவிலே ஒரு பிரகடனமாக தமிழ் மரபுரிமை மாதமாக தைமாதம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனை சுருக்கமாக ஓப்பீட்டளவில் விளங்கப்படுத்துவதாக இருந்தால், அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் கறுப்பின மக்களின் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகின்றது.

சரியான பார்வை இல்லைஅதனை கொண்டு வருவதற்கான முழுமையான காரணம். காலங்காலமாக காலனித்துவ காலங்களில் அல்லது அதற்கு முன் அடிமை மக்களாக பிரித்தானியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்களின் வரலாறு அவர்கள் எவ்வாறான பங்களிப்பை இந்த நாடுகளிற்கும், இந்த உலகத்திற்கும் தமது பங்களிப்பை செய்து வருகிறார்கள் அதனை கொண்டாடுவதற்கான ஒரு மாதமாகவும் அதேநேரம் இன்னும் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை சக மக்களுக்கு தெரியப்படுத்தி அல்லது அவர்களுக்கான ஒரு அறிவூட்டலை ஏற்படுத்தும் மாதமாக இருக்கின்றது.

இதேபோல் தான் கடந்த தசாப்தங்களில்  உலகப் பரப்பெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்கள் வெறுமனே ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல காலனித்துவ காலத்தில் வலுக் கட்டாயமாக இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கூட மக்களை காலனித்துவ நாடுகளாக முக்கியமாக பிரித்தானியா அந்த மக்களை வலுக்கட்டாயமாக கட்டாய தொழில் அமர்த்தல் அதாவது பெருந்தோட்ட தொழில்களுக்கு கட்டாய தொழில் அமர்த்தல். உலகமெங்கும் எடுத்து சென்றிருந்தார்கள். அதிலே தென்னாபிரிக்கா, மலேசியா மொறிசஸ் தீவுகள் மற்றும் தென்னிந்திய தீவுகள் எல்லாம் எடுத்து சென்றிருந்தார்கள்.

மக்கள் உலக பரப்பெங்கும் கடந்த நூறு வருடங்களில் பரந்து வாழும் தமிழ் மக்கள் அவர்களின் மரபு, அவர்களின் வரலாறு, பண்பாடு, பண்டிகைகள், மொழி இந்த விடயங்களை கொண்டாடுவதற்கும், சிறப்பிப்பதற்கும் அரச ஆணையுடன் தொடர்ந்து ஒவ்வொரு வருடங்களும் இதனை நினைவு கூருவதற்கும் கொண்டாடுவதற்கும் அரச ஆணையுடன் கட்டமைக்கப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு பிரகடனமே இது.

பிரகடனத்தை தொடர்ந்து அதாவது தமிழ் மக்களின் வருங்கால சந்ததிகள் மட்டுமல்ல சக இனத்தவர்களும், சக மக்களும் எம்முடைய இனம், கலை, பண்பாடு விழுமியங்களை அறியக்கூடியதாக இருக்கும். இதுதான் அடிப்படையான காரணம். ஆனால் இது தூர நோக்கம் கொண்ட செயற்பாடு. இந்த விடயத்தை சிலர் சிந்திப்பது போல் ஒரு பிரகடனத்தோடு அல்லது இரண்டு மூன்று செயற்பாடுகளோடு முடிந்துவிடப் போவதில்லை. இது நீண்ட தூர செயற்பாடாக செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு நடந்த கூட்டங்களும் நாங்கள் எப்படி ஒழுங்குபடுத்தினோம்  என்பது தொடர்பாக பேசினீர்கள். உண்மையிலே இந்த இடத்திலே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான விடயம்.

2019 ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தலின் பின் 2020 ஆம் ஆண்டு முதல் சொரஸ்ரியன் நிலையத்தில் நடாத்திய அறிமுக விழாவிற்கு ஐஎஸ்ரி குழுமத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதாவது பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னெடுப்பிலும், ஆதரவிலும்  அந்த நிகழ்வு தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு அதாவது பல பகுதிகளில் இருந்தும் அல்லது பல அமைப்புகளில் இருந்த மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆரம்ப நிகழ்வு  அதற்கு ஐஎஸ்ரி குழுமத்தின் ஆதரவு என்பது மிக முக்கியமாக இருந்தது.

அதேபோல் ஏனைய ஊடகங்கள் ஐபிசி தமிழ், ஆதவன் போன்ற ஊடகங்களின் ஆதரவும் அனுசரணையும் அங்கு இருந்தது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆனால் சரீர உதவிகளை செய்வதற்கு நான் இன்னும் பலருக்கு கடமைப்பட்டு இருக்கின்றோம். தமிழ் மக்கள் கடமைப்பட்டு இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களுடைய ஒரு நிகழ்வாக அல்லது தமிழ் மக்கள் சேர்ந்து செய்ய வேண்டிய அமைப்புக்களை கடந்து அரசியலை கடந்து அதாவது கட்சி அரசியல்களை கடந்து ஒரு நிலையான இருப்பிற்கும் அடையாளத்திற்கும் செய்யப்பட வேண்டிய விடயமாக தான் இங்கே முன்னெடுக்கப்பட்டது.

கேள்வி:
தமிழர் மரபுரிமை திங்கள் முக்கியமான மாதமாக அவர்களுடைய வாழ்க்கையில் பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தியிருப்பீர்கள் இது தொடர்பாக ஆராய்ந்திருப்பீர்கள் என்ன நடந்திருப்பது என்பது தொடர்பாக கூறுங்கள்?

பதில்:
இந்த செயற்பாடுகளின் அடிப்படையில் அரச ஆணையை பெறுவதாக இருந்தால் அது தேசிய அளவில் வருவதாக இருந்தால் மாநகராட்சி மன்றங்களில் உருவாக்கப்பட வேண்டும். அதன்பின் பிராந்திய அளவிலே உருவாக்கப்பட்டு தேசிய அளவிலே வரவேண்டும் என்பது கட்டம் கட்டமான செயற்பாடு.

சரியான பார்வை இல்லைலண்டன் பெரும்பாக்க பகுதிக்கான மாநகராட்சி மையத்தில் ஒரு தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார்கள். அத் தீர்மானத்தில் முக்கியமாக அதாவது லண்டனில் இருக்கும் தமிழ் மக்கள் அல்லது தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியிலே தை மாதத்தை தங்களுடைய மரபுரிமை மாதமாக கொண்டாடுவதை தங்களது கவனத்திலெடுத்து அச் செயற்பாடுகளை நடவடிக்கை குழுவாக ஊக்குவிக்க வேண்டும்.

அல்லது முறைப்படி நடாத்துவதற்கு அதனை ஆதரவு வழங்குவதற்கு லண்டன் மேயர் மற்றும் லண்டனில் இருக்கின்ற 32 சபை ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அந்த உறுப்பினர்கள் எல்லோரும் வைத்திருந்தார்கள்.

இதை தான் யுத்த காலத்திலே எல்லோரும் ஏற்று கொண்டிருந்தார்கள். இந்த அடிப்படையிலே இது ஒரு முன்மொழிவாக லண்டனில் வந்திருக்கின்றது. இந்த முன்மொழிவில் தான் செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால் இந்த முன்மொழிவை வைத்து கொண்டு லண்டன் மேஜரும் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில் இருக்கின்ற மாநகராட்சிகளும் என்ன விதமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் இந்த மரபுரிமை மாதத்திற்து தாங்கள் வழங்கலாம் என்பது தான் அடிப்படையாக இருக்கின்றது.

கேள்வி:
இப்போது நீங்கள் கூறியது போன்று கட்டம் கட்டமாக அரச ஆணை பெற்ற பின்பு ஒரு அங்கிகாரம் கொடுப்பார்கள். கொடுத்தால் தமிழர் மரபுரிமை திங்கள் என்று பிரகடனப்படுத்த கூடிய நிலை இருக்கிறதா?

பதில்:
அவர்கள் அங்கீகாரம் கொடுக்கிறார்களோ இல்லையோ தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டு வரும்பொழுது, அது ஒரு பாரிய விடயமாக பார்க்கப்படுகின்றது. அது தான் உண்மையிலே நடந்தது. ஏனென்றால் தமிழ் மக்கள் கொண்டாடி கொண்டு வரும்போது அவர்களின் ஆணை ஏன் தேவைப்படுகிறது என்று பார்த்தால் நிறுவனமயப் படுத்தப்பட்டு, அரச மயப்படுத்தப் பட்டு தமிழ் அடையாளம், தமிழ் மொழி, பண்பாடு போன்ற இந்த ஆட்சி மையங்களுக்குள்  கொண்டு செல்வதற்கு தான் அவர்களுடைய ஆணை தேவைப்பட்டது.

கேள்வி:
தமிழர் மரபுரிமை திங்கள்
தூர நோக்கு பார்வையில் தான் நடத்த வேண்டும் என்று கூறினீர்கள். அங்கிகாரம் கிடைத்தால் இதிலிருந்து தமிழ் மக்கள் எதனை சாதிக்கலாம்.?

பதில்:
பல மட்டங்களில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். வாழ்த்து செய்தியான அங்கீகாரத்தில் இருந்து நாங்கள் நீண்ட நாட்களாக பிரேரணைகள் என்ற விடயங்களில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் வெறுமனே வாழ்த்துகின்ற ஒரு பிரேரணைக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சாதாரணமாக மக்களிடம் விளக்குவதாக இருந்தால் தமிழ் மக்களின் சிறப்பான மாதமாக தமிழ் மரபுரிமை மாதம் என்று நாங்கள் பிரகடனப்படுத்தும் போது இதனை பற்றிய புரிதல் தமிழ் மக்களுக்கு, இளையவர்களுக்கு, அடுத்த சந்ததியினருக்கு இருக்க வேண்டும்.

ஏனென்றால் மிகவும் வருத்தமான ஒரு விடயம். நான் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டு காலமாக விரிவுரையாளராக இருக்கின்றேன். எமது பல்கலைக்கழகத்திலும் லண்டனில் இருக்கின்ற பல்கலைக்கழகத்திலும் பல தமிழ் மாணவர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தமிழ் பாடசாலைக்கு செல்வதனால் ஓரளவு தமிழ் பேசக் கூடியதாக இருந்தாலும் அதில் ஆழமாக எங்களுடைய பண்பாடு, அடையாளம் பற்றிய புரிதல் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இதனை ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு சீக்கிய இனத்தவருக்கும், இளைய தலைமுறைக்கும் அல்லது பாலஸ்தீனத்தில் இருந்து வந்த இளைய தலைமுறைக்கும் அல்லது யூத இனத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையையும் ஒப்பீட்டு நோக்கினால் எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை என்றே கூற வேண்டும். இது உண்மையில் வருத்தத்திற்குரிய விடயம். இந்த உரையாடலுக்கூடாக தான் சில மாற்றங்களை கொண்டு வர முடியும்.

ஆழமான அறிவூட்டல் செய்யாமல் வெறுமனே தமிழ் அடையாளம், தமிழ் மரபு மாதம் என்ற விடயத்தை பிரகடனப்படுத்தும் போது அவர்களோடு இருக்கின்ற சக மாணவர்களுக்கு வருகின்ற கேள்விகளுக்கு  எங்கள் அடையாளம் என்ன, பண்பாடு என்ன, விழுமியங்கள் என்ன என்று விளங்கப்படுத்த முடியாது இருந்தால் இக்காட்டான நிலையில் இருக்கும். ஏனென்றால் சரியாக புரியாத ஒரு அடையாளத்தை கொண்டாடுகின்றீர்கள் என்று மற்றையவர் நகைப்பிற்கு இடமாகவும் மாறக்கூடாது.

ஆகவே நான் தூரநோக்கு என்று கூறியது தொடர்ச்சியாக இதன் பண்பாட்டு விழுமியங்கள், அறிவூட்டல்கள் போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் இளையோர் மத்தியிலும் செய்து கொண்டு அந்தநேரத்தில் தேசிய அளவிலான ஒரு பிரகடனத்தை கொண்டு வரும்போது தான் இன்னும் வலுவாக அவர்களும் வலுவாக இன்னும் முன்னின்று இதற்கான அரச ஆணை மட்டுமல்ல இதற்கான ஒரு பட்ஜெட் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதற்காக நிதி இருக்க வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளிலே இவர்கள் ஈடுபடுவார்கள்.

கேள்வி:
அரச ஆணை பெறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:
அரச ஆணையை எடுப்பதென்பது பெரிய விடயமல்ல. தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஒரு பிரேரணையை பெறுவதென்பது நடக்கவே நடக்காது. அது புவிசார் அரசியல், பொருளாதார அவ்வாறு பல விடயங்கள். ஆனால் தமிழ் மக்களை வாழ்த்துவதற்கான பிரேரணை என்றால் எல்லோரும் செய்வார்கள். அது ஒரு பிரச்சினையான விடயமல்ல.

ஆனால் அந்த பிரேரணை எங்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் அது ஒரு ஆழமான பிரேரணையாகத்தான் உருவாக வேண்டும். அவ்வாறு ஆழமான பிரேரணையை உருவாக்கி அதனை தேசிய அளவில் வடிவமைத்து கொண்டு வருவதென்பது இரண்டு மூன்று ஆண்டுகள் எடுக்கும். ஏனென்றால் வெறுமனே பாராளுமன்றத்தில் பிரதமர் அதனை அறிவித்தால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றில்லை.

தேசிய அளவிலான ஒரு பிரகடனத்தை கொண்டு வருவதற்கான செயற்பாடு என்பது முக்கிய இரண்டு அல்லது மூன்று கட்சி கூட்டங்களில் அவர்களுடைய தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும். அரசியல் வாக்குறுதிகளிலும், அவர்களுடைய கொள்கைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் இடம்பெற வைக்க வேண்டும்.

எங்கெங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க கடிதம் ஒன்றை அனுப்பி அதனூடாக ஒரு மாற்றம் வந்து அதற்கான ஒரு பிரேரணை வரும்போது அதற்கான அழுத்தமும் , ஆழமும் பலமாக இருக்கும்.

அதைவிடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுடைய வாக்கை பெறுவதற்கான ஒரு அறிவித்தலாக மாற்றுமாறு இருந்தால் அது இருக்காது. நான் நினைக்கிறேன் எனது அனுபவத்தின்படி அடுத்த தேர்தலிற்கு முன் நிச்சயமாக இதனை நடைமுறைப்படுத்த கூடியதாக இருக்கும் என்று.

நிதி உதவி என்பது வெறுமனே அமைப்புக்களுக்கான நிதி உதவி மட்டுமல்ல. கலை, பண்பாடு, விழுமியங்களை கொண்டு வருவதற்கான ஆய்வுகளுக்கான நிதி உதவி உதாரணத்திற்கு தமிழ் அடையாளம் என்று வரும்போது எங்களது உணவு பழக்கவழக்கங்கள், சித்த மருத்துவம் இதற்கான ஆய்வுகள் இதனை எப்படி இங்கே, சீன மருத்துவம் போன்று இங்கே பாவனையில் இருக்கின்றது. அதற்கான நிதி உதவிகள் என்னும் வழங்கப்படவில்லை.

இவ்வாறாக வருகின்ற வாழ்த்து பிரேரணைகளை நாங்கள் வரவேற்க வேண்டும். முக்கியமாக அதனை செயற்படுத்த வேண்டும். ஆனால் நாங்கள் அதனை கடந்து செயற்பட வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கின்றேன்.

 

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை - விரிவுரையாளர் ராஜ்குமார்

1 COMMENT

Leave a Reply