முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர்காத்த மருத்துவம் :  தீபச்செல்வன்

ஈழத் தமிழினம் இந்தப் பூமி உள்ளவரை மறக்க முடியாதவொரு, கொடு நினைவாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிலைத்துவிட்டது. உயிர்காக்கும் உலகு என இன்றைய உலகின் மருத்துவமும் அதனையொட்டிய அறிவியலும் உரையாடப்படும் காலத்தில் எங்கள் உயிர்கள் கொத்துக் கொத்தாக திருகப்பட்ட கொடிய யுகத்தை நாம் எதிர்கொண்டோம்.
இலங்கைத் தீவின் பூர்வீக்க் குடிகளாக, சிங்களப் பேரினவாத அரசிடம் இறைமைய ஆட்சியை இழந்தவர்களாக, அதனை மீட்டெடுக்க மாபெரும் தியாகங்க ளைச் செய்து போராடிய வேளையில் உலகின் அத்தனை வல்லமை அரசுகளையும் கொண்டு ஒரு மாபெரும் உன்னத விடுதலை இயக்கத்தை அழிப்பதற்காக ஈழத் தமிழினத்தை படுகொலை செய்யத் துணிந்த சமயத்தில் இந்த நூற்றாண் டின் மாபெரும் இனப்படுகொலையை ஶ்ரீலங்கா அரசு எம்மீது நிகழ்த்தியது.
ஶ்ரீலங்காவும் மருந்துத்தடையும்
ஈழத்தில் பிரித்தானிய அரசின் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முதலே இனவழிப்பு நடைபெற்று வருகின்ற நிலையில், மருத்துவத் துறை சார்ந்து இனப்பாரபட்சத்தை ஈழத் தமிழினம் எதிர்கொண்டது. அத்துடன் ஶ்ரீலங்கா அரசின் கீழ் வாழ முடியாது என்று இழந்த இறைமைய மீட்க ஈழத் தமிழினம் தனிநாடு கோரிய போராட்டத்தை ஆரம் பித்த வேளையில், மருத்துவத் தடைகளை ஶ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள்மீது விதித்து அதனையும் ஒரு ஒடுக்கு முறையாகக் கையாண்டது.  தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நிழல் அரசாங்கம் நடைமுறைக்கு வந்த காலத்தில் ஶ்ரீலங்கா அரச படைகள் வான்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் திட்டமிட்ட இனப்படு கொலைகள் வாயிலாக பாரிய இனவழிப்புக்களை தமிழர் தேசமெங்கும் செய்து வந்தது.
போராளிகளின் அரச பகுதியில் காயப்பட்ட மக்கள் மருத்துவமின்றி உயிரிழக்கக் கூடாது என்பதை உணர்ந்த தமிழீழத் தேசியத் தலைமை  தமிழீழ மருத்துவத்துறையைக் கட்டி எழுப்பியது. இதனால் பல போராளி மருத்துவர்கள் தமிழீழத்தில் உருவானார்கள். போராளிகளின் திலீபன் மருத்துவமனை போன்றவை மக்களுக்கு உயிர்காக்கும் பணிகளைச் செய்தன. பொருளாதாரத்தைப் போல மருத்து வத்திலும் தற்சார்ப்பு மற்றும் சுயாதீன நிலையில் தமிழீழ மருத்துவத் துறை வளர்ச்சி பெற்றிருந்தமை வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல்கள் ஆகும்.
தமிழீழ மருத்துவத்துறை
இந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழினம் பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டவேளையில், தமிழீழ மருத்துவதுறையும் அப்போதைய தமிழர் பிரதேச பொது மருத்துவமனை மருத்துவர்களும் ஆற்றிய பணி உலகின் மனிதாபிமானம் மிக்க மகத்துவமான பணியாகப் பார்க்கப்படுகிறது. மனித வரலாற்றின் மிகக் கொடூரமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் குறுகிய நிலப்பரப்பிற்குள் தஞ்சமடைந்த நிலையில், இடைவிடாத குண்டுவீச்சுகள், உணவுத் தட்டுப்பாடு, மருந்து பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பற்ற வாழ்வால் மரணப் பெரு அபாயம் மிகுந்தது.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழீழ விடுத லைப் புலிகளின் மருத்துவத் துறை மிகவும் குறைந்த வளங்களுடனும் இடையறாத தாக்குதல்களுக்கிடையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தது. அப்போது புதுமாத்தளன், வள்ளிபுனம், முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மனைகள்  வழியாக சேவை ஆற்றியன. சண்டையில் காயப்பட்ட போராளிகளுக்கான மருத்துவச் சேவைகளை ஆற்றியதுடன், காயப்பட்ட பொதுமக்களின் உயிர்களை காக்கும் பணியிலும் தமிழீழ மருத்துவத்துறை தன்னுடைய இறுதிக் கணம்வரை செயலாற்றியது.
சாட்சியமான மருத்துவர்கள்
ஒரு பக்கத்தில் உணவுத் தடையை விதித்த நிலையில், மருத்துவத் தடையையும் ஈழ மக்கள்மீது ஏற்படுத்தி இனப்படுகொலை செய்வதில் ஶ்ரீலங்கா அரசு தெளிவாக இருந்தது. இந்தச்  சூழலில் மருத்துவம் என்பது ஒரு சேவையாக மட்டும் இல்லாமல் உயிர் காக்கும் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அந் நாட்களில் பணியாற்றிய மருத்துவர்களில் முக்கியமாக நினைவுகூரப்படுபவர்கள் மருத்துவர் வரதராஜா வரதராஜன், மருத்துவர் சத்திய மூர்த்தி, மருத்துவர் சண்முகராஜா, மருத்துவர் இளஞ் செழியன் முதலியோர். இவர்கள் மருத்துவப் பணி ஆற்றியதுடன் உலகின் கவனத்திற்கு வன்னியில் நடந்த மனிதப்படுகொலை குறித்து எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் இனப்படுகொலையின் சாட்சியாகவும் இவர்கள் கருதப்படுகின்றனர்.
குண்டு மழையின் மத்தியில் உயிர் வாழ்தலுக்கான நிச்சயமின்மையுடன் அடிப்படை மருத்துவ வசதிகளே இல்லாத சூழலில் இனப்படுகொலைப் போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சையளித்தார்கள். போரின் துவக்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை, பின்னர் தர்மபுரம், உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு மற்றும் இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு மருத்துவமனைகள் இடம்பெயர்ந்தன. ஒவ்வொரு இடம்பெயர்வும் ஒரு மருத்துவ அமைப்பின் முற்றுப்புள்ளியாக இருந்தது. மருத்துவ உபகரணங்கள் முழுமையாக எடுத்துச் செல்ல முடியாத நிலை. சில சமயங்களில் மரத்தடியில், சில சமயங்களில் கூடாரங்களுக்குள், சில சமயங்களில் பள்ளிக் கட்டிடங்களுக் குள் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனைமீது தாக்குதல்கள்
புதுக்குடியிருப்பு மருத்துவமனைமீதான மிக கொடிய தாக்குதல் உலகளாவிய கவனத்தை ஈர்த்து, ஶ்ரீலங்கா அரசின் நேயமற்ற கொடிய போரை இந்த உலகிற்கு அம்பலப்படுத்தியது. அங்கு தஞ்சமடைந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் முதலான மக்கள் மிகப் பெரும் உயிரிழப்பு, காயங்களுக்கு உள்ளானார்கள். மருத்துவமனை மீது கொடிய தாக்குதல்கள் நடந்தமையை அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் பின்னர் சாட்சியமளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் இரத்தம் கலந்த மண், உடைந்த சிகிச்சை மேசைகள், காயமடைந்த குழந்தைகளின் அழுகுரல்கள் என அன்றைய இனப்படுகொலையின் காட்சிகள் காணோளி களாக வெளியாகின. இன்றும் அவை இணையத்தில் காணக்கிடைக்கும் சாட்சியங்களாகவும் உள்ளன.
முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் என்றே சொல்ல முடியாத திறந்தவெளி மருத்துவ நிலமாக மாறியது. கடற்கரை மணற்பரப்பில் தோண்டப்பட்ட குழிகளே அவசர சிகிச்சை அறைகளாக மாறின. அறுவை சிகிச்சைகள் மயக்கமருந்து இன்றி நடத்தப்பட்டன. மருந்துகள் இல்லா ததால் காயமடைந்தவர்களுக்கு வலிநிவாரண மருந்து கூட வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. வெறும் உடைக ளின் துணிகள் கிழித்து கட்டுப் பொருள்களாக பயன்படுத்தப் பட்டன. இரத்த வங்கிகள் இல்லை. சில நேரங்களில் உறவினர்களிடமிருந்து நேரடியாக இரத்தம் எடுத்து உயிர் காப்பாற்ற முயன்ற நிகழ்வுகளும் நடந்தேறின. ஒரு நவீன யுகத்தில் இப்படியெல்லாம் மருத்துவம் இடம்பெற்றது என்பது வெளி உலகத்தினரால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் மாபெரும் இனப்படுகொலைக் களத்தில் இப்படித் தான் மருத்துவத்துறை இயங்கியது.
மருத்துவப் பேரவலம்
அந்நாட்களில் எங்கள் மக்கள் அனுபவித்த வேதனைகள் இன்னமும் பேசிமுடிக்க முடியாத கதைகளாக உள்ளன. ஷெல் தாக்குதல்களில் கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட குழந்தைகள் நூற்றுக்கணக்கில் வந்த காட்சிகளும் தாயின் உடலின் அருகில் உயிருடன் கிடந்த குழந்தைகள் இருந்த காட்சிகளும் பெற்றோரை இழந்த சிறுவர்கள் மருத்துவமனை தரையில் அழுதுகொண்டிருந்த காட்சிக ளும் பல குடும்பங்கள் ஒரே நாளில் அழிந்துபோன காட்சிகளும் ஈழ மக்களின் வரலாற்றிலும் நினைவுகள் கண்களிலிருந்தும் ஒருபோதும் நீங்காதவை.
இதைவிட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தொற்று நோய்களும் அப் போது பரவின. இன்னொரு பக்கத்தில் சுத்தமான குடிநீர் இல்லாததால் நோய்கள் வேகமாகப் பரவின. அதற்குள் கர்ப்பிணி பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பாதுகாப்பான பிரசவ வசதிகள் இல்லாமல் பலர் மணற்குழிகளில் குழந்தைகளை பெற்றெடுத்தனர். சில குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே குண்டு வீச்சில் உயிரிழந்தனர். மருத்துவர்களும் தாதியர்களும் அழுதபடியே பணியாற்றிய மாபெரும் அவலம் முள்ளிவாய்க் கால் மண்ணின் இன்னமும் புதைந்துள்ளது.
உயிர்காக்கும் உன்னதப் பணி
போரில் காயமடைந்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் வழியாக உயிர்தப்புகிற நம்பிக்கையு டன் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறினர். ஆனால் அனைவரையும் காப்பாற்ற இயலாமல் போனது. பலர் சிகிச்சைக்காக கப்பலில் செல்வதற்கென காத்திருந்தபடியே உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்தேறின. இறந்தவர்களை அடக்கம் செய்ய நேரமோ இடமோ இருக்கவில்லை. பலர் மருத்துவமனை அருகே புதைக்கப்பட்டனர். சில உடல்கள் புதைக்கவும் இயலாமல் கிடந்தன. உயிரோடு இருந்தவர்கள் கூட மரணத்தின் நடுவே வாழ வேண்டிய துயரம் ஏற்பட்டது. ஈழ இனப்படுகொலைக் களத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும் போராளிகளைப் போலவே உயிர்காக்கும் உன்னதப் பணியினை ஆற்றினார்கள்.
பின்னர் உயிர் தப்பிய மருத்துவர்கள் வெளியுலகிற்கு அளித்த சாட்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கைகள், மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள் ஆகியவை மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்ட மனிதாபிமான பேரழிவை பதிவு செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகளும் அக்கால மருத்துவ நெருக்கடிகளைப் பற்றி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டன. உண்மையில், இலங்கையில் ஶ்ரீலங்கா அரசு ஈழ மண்ணில் நிகழ்த்தியது தமிழ் இனப்படுகொலை என்பதை மேற்கண்ட அறிக்கைகளைப் படித்தாலே இந்த உலக நாடுகளால் புரிந்துகொள்ளமுடியும்.