தமிழினப் படுகொலை: 17 ஆண்டுகள் கடந்தும் தமிழ்த்தேசிய கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை – பா.அரியநேத்திரன்

அன்று 2009, மே, 18 இன்று 2026, மே,18,ல், முள்ளிவாய்க் கால் இன அழிப்பு நடந்து்17,ஆண்டுகள் கடந்துள்ளன. ஈழத்தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய கட்சிகள் பல உரு வாகியுள்ளன, உருமாறியுமுள்ளன. இன்னும் சில கட்சிகள் வடகிழக்கில் உருவாகப்பட உள்ளன எத்தனை கட்சிகள் உருவாகியும் எந்த நன்மைகளும் தமிழர்களுக்கு இதுவரை இல்லை என்பதே கசப்பான உண்மை.
விடுதலைப்புலிகள் இருக்கும் வரை அவர்களு டைய கண்டிப்பாலும், ஆலோசனைகளாலும், வழிகாட்டுதலா லும், உத்தரவுகளாலும் நல்லவர்களாக நடித்து வலம் வந்த தமிழ்தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டணி முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர் தாமே தமிழர்களை மீட்கவந்த மீட்பர்கள் என கூறி சிதறி பல பெயர்களில் கட்சிகளை உருவாக்கியது மட்டுமே வரலாறு வேறு எந்த ஆக்கபூர்வமான விடயங்களும் அவர்களால் நடைபெறவில்லை.
2001 அக்டோபர்20 ல் விடுதலைப்புலிகளின் வேண்டுகோளால் உருவாகிய தமிழ்த்தேசிய கூட்ட மைப்பு 2010, பெப்ரவரி,10, வரையும் எந்த ஒரு கருத்து வேறுபா டும், முரண்பாடும் இன்றி இயங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப் பானது.
முரண்பாடுகளையும், ஒற்றுமை சிதறடிக்கப்பட்டும் தேர்தல் அரசியலை மட்டும் மையப்படுத்தி பதவிக்காகவும், கதிரைக்காகவும் அரசியல் செய்யும் நிலைமையே 17, ஆண்டுகளாக இன்றுவரை தொடர்கிறது.
2010, பெப்ரவரி,10, தொடக்கம் கடந்த 2025, மே,06, ம் திகதி உள்ளுராட்சி சபை தேர்தல் வரை பல தமிழ்தேசிய கட்சிக ளும், பல தலைவர்களும், பல கொள்கைகளையும் கூறி பெயரளவில் உள்ளனரே அன்றி செயல் வடிவில் எந்த கட்சிகளும் இல்லை. உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தை கூட ஒற்றுமையாக செய்ய இவர்களால் முடியவி ல்லை.
வடக்கு கிழக்கில் உள்ள முக்கிய தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் கூட்டணிகள், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காகவும், பிராந்திய சுயாட்சிக்காகவும் போராடி வருவதாக வெளியுலகில் காட்டப்பட்டாலும் சுயநல அரசியல்வாதிகளாகவே சகல தமிழ்தேசிய கட்சிகளும் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாக இயங்கியகட்சிகள் சிதறுண்டு மேலும் பல கட்சிகள் புதிதாக முளைத்துள்ளன. இதுவரை 13, கட்சிகள் தேர்தல் திணைக் களத்தில் பதிந்தும், பதியப்படாமலும் உள்ளன.
பல கட்சிகள் கூட்டணிகளாகச் செயல்படுகின்றன. தற் போது 2026 நிலவரப்படி தமிழ்தேசிய கட்சிகளின் விவரங்கள் பின்வருமாறு:
01).இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK)
வடகிழக்கின் மிகப் பழமையான மற்றும் பெரிய தமிழ்த் தேசியக் கட்சியாகக் கருதப்படுகிறது. இந்தக்கட்சியானது கடந்த 2024, ஜனவரி,21, ம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவு என்று மில்லாத வகையில் வாக்கெடுப்பு மூலமாக இடம்பெற்று அதில் சிவஞானம் சிறிதரன் தலைவராக தெரிவாகி அவரை எதிர்த்து போட்டியிட்ட மதியாபரணம் சுமந்திரன் தோல்வியை தழுவிய பின்னர் அதனூடாக 2024, ஜனவரி,27, ல் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனு க்கு வழங்கவிடாமல் தடுத்தமையால் அதில் ஏற்பட்ட முரண்பாட்டால் 17, வது தேசிய மகாநாடு நடத்த முடியாமல் போனதுடன் தமிழரசுக்கட்சி இரண்டு அணியாக சிதறி, 2024, பெப்ரவரிமாதம் திருகோணமலை, மற்றும் யாழ்ப் பாணம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏறக்குறைய இரண்டுவருடங்களாக நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தர பாராளுமன்றக்குழு தலைவர் பதவிகள் இன்றி பதில் பதவிகளுடன் இரண்டு அணியாக இரண்டுவருடங்களுக்கு மேலாக தமிழரசுக்கட்சி இயங்குவதை காணலாம்.
02).தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF)
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, இது தமிழ்த்தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகித்த கட்சி முள்ளிவாய்க்காலில் விடுத லைப்புலிகளின் மௌனத்துடன் 2010, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி எனும் பெயரில் தேர்தல்களை சந்திக்கும் கட்சியாக உள்ளது.
03).ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA)
சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்), தர்மலிங்கம் சித் தார்த்தன் (PLOTE), செல்வம் அடைக்கலநாதன் (TELO) போன்றோர் இந்த மூன்று கட்சிகளும் தமிழ்தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகித்த நிலையில் 2023, உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாட்டால் விலகி புளட்டின் பங்காளிக்கட்சியான ஜனநாய தமிழ் தேசிய கூட்டணி எனும் குத்துவிளக்கு சின்னத்தை கொண்ட கட்சியில் இணைந்து பின்னர் 2024, செப்டம்பர்,21, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பா.அரியநேத்திரன் எடுத்த சங்கு சின்னத்தை ஏற்கனவே இருந்த குத்துவிளக்கு சின்னத்தை நீக்கி சங்கு சின்னத்துடன் தற்போது இயங்கும் கூட்டணி.
04). தமிழர் விடுதலை கூட்ணி (TULF)
ஆனந்தசங்கரியை பொதுச்செயலாளராக கொண்ட இந்த கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்காதபோதும் 2013, வணமாகாண சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்ட மைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகாத நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்கும் கட்சி.
05).தமிழ் மக்கள் கூட்டணி (TPA)
இது சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் 2018 இல் தொடங் கப்பட்ட கட்சி. 2013, வடமாகாண முதலமைச்சராக தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு முதலமைச்சராகிய இவர் பின்னர் 2018, ல் தனிக்கட்சியாக தமிழ் மக்கள் கூட்டணி எனும்பெயரில் ஆரம்பித்த கட்சி.
06.)தமிழ் தேசிய கட்சி(TNP)
சட்டத்தரணி ஶ்ரீகாந்தா, மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரால் 2023, ல் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ரெலோ கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த வர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்பட்டு பின்னர் தனிக்கட்சியாக தமிழ்தேசிய கட்சி உருவாக்கியுள்ளனர்.
07)ஈழத்தமிழர் சுயேட்சைக்கழகம்
வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சஜிதரனால் 2018ல் ஆரம்பிக்கப்பட்டது. இவரும் கடந்த 2013, வடமாகாணத்தில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மூலமாக வெற்றியீட்டியதுடன் மாகாணசபை அமைச்சராகவும் செயல்பட்டவர் 2018, ல் புதிய கட்சியாக ஈழத்தமிழர் சுயேட்சைக்கழகம் எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.
08)தமிழ்த்தேசிய பசுமை இயக்கம்
வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கர நேசனால் ஆரம்பிக்கப்படது. இவரும் 2013, வடமாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் வெற்றிபெற்று மாகாணசபை அமைச்சராக செயல்பட்டவர் 2013,ல் தமிழ் தேசிய பசுமை இயக்கம் எனும்பெயரில் இயங்கி வருகிறார்.
09).ஜனநாய தமிழரசுக்கட்சி
இலங்கை தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளை தலைவராக இருந்த சட்டத்தரணி கே வி தவராசா,திருமதி சசிகலா ரவிராஜ் ஆகியோரால் 2024, ல் ஜனநாயக தமிழரசுக்கட்சி எனும்பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
10).ஜனநாயக போராளிகள் கட்சி
2020, ல் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், என முன்னாள் போராளிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்சியின் முதலாவது தேசிய மகாநாடு 2022. டிசம்பர்,17, ல் நடாத்தப்பட்டது.
11). யாழில் 2024, ல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு.
மொத்தமாக இதுவரை 13, கட்சிகள் தமிழ்த்தேசியக் கட்சிக ளாக பெயரளவில் தற்போது உள்ளது.
இந்த 13, கட்சிகளும் கடந்த 17, வருடங்களில் எதனை சாதித்துள்ளது என்றால் எதுவுமே இல்லை. கடந்த 2024, நவம்பர், 14, ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் இந்த 13, கட்சிகள் இருந்தும் தென்பகுதியில் உள்ள ஜனாதிபதி அநுரா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 12, ஆசனங்களை பெற்றுள்ளது எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் வடகிழக்கில் கூடிய ஆசனங்களை பெறவில்லை. இலங்கை தமிழ் அரசுக்கட்சியால் 08, ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்தது.
அதுபோல் ஜனநாக தமிழ்தேசிய கூட்டணி, மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலா ஒரு ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்தது. போர் 2009,மே,18, ல் மௌனிக்கப்பட்டு 2026, மே,18, ல் 17, வருடங்கள் கடந்தும் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் இளைஞர்கள் தமிழ்தேசிய சிந்தனையில் இருந்து விலகிச்செல்வதை காணமுடிகிறது, இதற்கான அடிப்படை காரணம் அனைத்து தமிழ்தேசிய கட்சிகளில் உள்ளவர்கள் மக்களை தேசமாக கட்டி எழுப்பக்கூடிய எந்த ஒரு செயல்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை, கட்சிகளுக்கு அப்பால் சிவில் சமூகமும் தமிழ் மக்களை தமிழ்தேசிய சிந்தனையை வளர்க்கும் விதமாக செயல்படக்கூடிய திட்டங்களை முன்னெடுக்கவில்லை அப்படியான இனப் பற்றுள்ள சிவில் அமைப்புக்களை தமிழ்தேசியம் சேர்ந்த செயல்பாடுகளில் இயங்கவிடாமல் சில தமிழ்தேசிய கட்சிகள் தடுக்கும் நோக்கில் விமர்சனங்களை முன்வைத்த வரலாறுகளையும் கடந்த காலங்களில் காணமுடிந்தது.
இதற்கு நல்ல உதாரணம் 2024, செப்டம்பர்,21, ல் நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவில் சமூகம் மூலமாக உருவாகி அதற்கான வேலைத்திட்டங்கள் பிரசாரங்களை முன்னெடுத்த போது அவர்களை அரசியல் செய்ய விடாமல் தமிழரசுக்கட்சி பதில் பொதுச்செயலாளர் பொது வெளிகளில் பேசிய சந்தர் பங்களும் உண்டு.
தற்போது 17, வருடங்கள் ஆயுதப்போர் முடிந்த நிலை யில்தான் 16, வருடங்களாக எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்த வடகிழக்கு கத்தோலிக்க ஆயர்கள். தமிழ் சட்டத்தரணிகள் என இரண்டு முற்போக்கு சிந்தனை உள்ள குழுக்கள் தமிழ்தேசிய அரசியல் கட்சிகளை ஒற்றுமை படுத்தி ஒரு அரசியல் திட்டவரைவை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதுவும் காலம் கடந்த ஒரு செயலாக இருந்தாலும் காலத்தின் தேவை என்பது மட்டும் உண்மை.
தமிழ்தேசிய கட்சிகள் கடந்த 17, வருடங்கள் போர் நிறைவடைந்த நிலையில் எதனை சாதித்துள்ளனர் என்பதை ஒவ்வொரு கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் தமது மனச்சாட்சியை தொட்டுப்பார்த்து முள்ளிவாய்க்கால் 17, வது ஆண்டு நிகழ்வில் சுடர் ஏற்றுவதே நல்லது. அடுத்த 2027, மே,18, ல் 18, வது ஆண்டுக்கு இடையில் தமிழ்தேசிய கட்சிகள் ஓரணியில் அணிதிரள்வதே உயிர் நீத்தவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.
அதேவேளை மாகாணசபைத் தேர்தல் இடம் பெறுமானால் தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமையாக ஒரு கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தாவிடின் மீண்டும் வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் உண்டு.