தமிழரின் அடையாளமே முள்ளிவாய்க்கால் : மட்டு.நகரான்

முள்ளிவாய்க்கால் என்பது தமிழர்களின் அடையாளம்.இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஒரு இன அழிப்பின் நினைவகம்.இதன்காரணமாகவே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த நினைவேந்தல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகவும் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளை நினைவூட்டும் நிகழ்வாகவும் இருந்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மே 18 என்பது ஆறாத வடுவை ஏற்படுத்திய ஒரு கருப்பு தினம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதன் நினைவாக இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த நினைவேந் தல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான நிகழ்வு என்ற நிலையைக் கடந்து, தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவையும் நீதிக்கான தேடலையும் வெளிப்படுத்தும் ஒரு பொதுக் குறியீடாக மாறியுள்ளது.
முள்ளிவாய்க்கால் என்பது வடகிழக்கு இணைந் ததாகவும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.உணர்வுபூர்வமான இந்த நிகழ்வு பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டாலும் இந்த நினைவேந்தல் என்பது வடகிழக்கு மக்களின் தமது உரிமை போராட்டத்தின் மீள்பார்வையினை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருந்துவருகின்றது.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு சிறிய கிராமத்தின் பெயர் மட்டுமல்ல் அது தமிழினத்தின் மீதான உச்சக்கட்ட அடக்குமுறையின் சாட்சி.வடக்கு – கிழக்கு இணைந்த தாயகப் பகுதிகளில் மாவட்டம்,மாகாணம் பாராமல் மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர்.
புலம்பெயர் தேசங்களில் லண்டன் முதல் கனடா வரை, சுவிட்சர்லாந்து முதல் ஆவுஸ்திரேலியா வரை பரவி வாழும் மில்லியன் கணக்கான தமிழர்கள் இந் நாளில் ஒன்றுகூடித் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களும் இதனைத் தங்கள் சொந்தத் துயராகக் கருதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு காலத்திற்கும் காலம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கிழக்கில் படு கொலைகள் நடைபெற்ற இடங்களில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றது.முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்;டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழத்திற்குமான நினைவேந் தலாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. இதன்காரணமாகவே இந்த நிகழ்வினை உணர்வுபூர்வமான நிகழ்வு கொள்ளப் படுகின்றது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல் அவர்கள் மட்டக் களப்பு, வன்னி, திருகோணமலை மற்றும் மலையகம் எனத் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்து வப்படுத்தியவர்கள். விடுதலைப் போராட்டத்தின் இறுதி முனை என்பது முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது என்பதால், தமிழீழப் போராட் டத்திற்காகத் தியாகம் செய்த அனைத்து மாவீரர் களையும், மக்களையும் நினைவுகூரும் புள்ளியாக இது அமைகின்றது.இலங்கை அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு அரசியல் ஆயுத மாக இந்நாள் பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறும் அழுவதற்கும், பூத் தூவுவதற்குமான சடங்கு அல்ல. அது ஒரு அரசியல் பிரகடனம். கொல்லப்பட்ட மக்களுக்குச் சர்வதேச ரீதியிலான நீதி வேண்டும் என்பதையும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையும் இது உலகிற்கு உரக்கச் சொல்கிறது ஒரு பிரகடன வலியுறுத்தல் நாள் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த தினத்தினை வடகிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு நினைவேந்தல் நிகழ்வாக மட்டும் கொள்ளாமல் ஒரு தமிழ் தேசிய எழுச்சியையும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் மாற்றும் வகையிலான நினைவேந்தல்களாக மாற்றவேண்டும்.
இன்று வெறுமனே வெனர்களை கட்டி கஞ்சி வழங் கும் ஒரு நிகழ்வாக மட்டும் நடாத்திச்செல்லாமல் அதனை எமது இளஞ்சமூகம் அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக ஏற்பாடுசெய்யப்படுகின்றது.தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய அரசியல் விழிப்புணர்வின் தொடக்கம். வடக்கு மாகாணத்தில் இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்தாலும், அதன் தாக்கம் மற்றும் இழப்புகள் கிழக்கு மாகாணத்தை ஆழமாகப் பாதித்துள்ளன. இன்று, கிழக்கு மாகாணத்தில் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறும் துக்க நிகழ்வாக மட்டுமன்றி, வடக்கு – கிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றும் ஒரு வலிமையான குறியீடாக மாறியுள்ளதாக இந்த நிகழ்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக் களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு வடிவங்களில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முக்கியமாக மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் மக்கள் திரண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். தேவாலயங்களிலும் கோயில் களிலும் விசேட ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.மதகுருமார்களும் இளைஞர்களும் தாமாக முன்வந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வினை அஞ் சலிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் போரின் போது மக்கள் பசியால் வாடியபோது குடித்த ‘உப்புநீர்க் கஞ்சி’யை நினைவுகூரும் வகையில், கிழக்கு மாகாணமெங்கும் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்படுவது ஒரு மரபாகவே மாறியுள்ளது. இது அந்த வலியை இளைய தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கருவியாக உள்ளது.இதனை உணர்வுரீதியாக நோக்கும் நிலைமை என்பது அதிகரித்த நிலைமையினை காணமுடிகின்றது.
இதேபோன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் முன் னின்று உழைக்கின்றனர்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் பொலிஸாரின் கடுமையான அழுத்தம் அடக்குமுறையின் கீழ் முள்ளிவாய்க்கால் நினை வேந்தலை அனுஸ்டித்தனர்.இந்தமுறையும் அதனை உணர்வுரீதியாக அனுஸ்டிக்கும் வகையிலான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நினைவேந்தல் மூலம், “வடக்கும் கிழக்கும் பிரிக்க முடியாத ஒரு தேசம்” என்ற செய்தியை கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்திற்குச் சொல்லி வருகின்றனர்.வடக்குடன் ஒப்பிடுகையில் கிழக்கில் நிலவும் அதிகப்படியான கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுகின்றனர்.கிழக்கில் கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்திய ஒட்டுக்குழுக்களும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் நிலைமை யினையும் நாங்கள் காணமுடிகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறும் நினைவேந்தலாக பார்க்கப்படவில்லை.வடகிழக்கில் ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு இனஅழிப்பின் தினமாகவே பார்க்கப்படுகின்றது.இந்த நாளில் தங்களின் இழப்புக்கான நீதிகிடைக்கவேண்டும்,இந்த மண்ணில் ஏற்பட்ட இழப்புகள் என்பது எங்களது சுயநிர்ணயத்திற்கான எங்களது கோரிக்கைகளினால் எங்கள்மீது திணிக்கப் பட்ட அடக்குமுறை என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வடகிழக்கு மாகாணத்தில் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஈழத்தமிழி னத்தின் அழிவின் சாட்சி மட்டுமல்ல் அது மீட்சியின் அடையாளமும் கூட. பிரித்தாளும் தந்திரங்களுக்கு இடமளிக்காமல், வடக்கு – கிழக்கு எனத் தமிழர்கள் ஓரணியில் நின்று நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு தளமாக இந்நாள் அமைகின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சியும், ஏற்றப்படும் சுடர்களும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை வேட்கை இன்னும் அணையவில்லை என்ப தையே உறுதிப்படுத்துகின்றன.இந்த வேட்கை எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும்.
வடகிழக்கில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்த நிகழ்வுகளை தங்களது வாக்குச்சேகரிக்கும் இயந்திரங் களாக மட்டும் பயன்படுத்தாமல் இந்த நிகழ்வுகள் தமிழ் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வழிவகைளை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்நாளில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையாகும்.