திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைந்துள்ள வளாகத்தை வர்த்தக ரீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்குள்ள 29 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச போட்டி கேள்வி கோருவதற்கு டிரின்கோ பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள 61 எண்ணெய்த் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு வாய்ப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான டிரின்கோ பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 51 சதவீத பங்குகளையும், இந்தியாவின் லங்கா ஐ. ஓ.சி. 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 99 எண்ணெய் தாங்கிகளில் 61 தாங்கிகள் கூட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் இருவழி எரிசக்தி விநியோகத்துக்கான பல்நோக்கு குழாய் இணைப்பு திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருகோணமலை பெற்றோலிய மையத் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் இந்தியாவும் அடையாளம் கண்டுள்ளன.
இந்நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரும் அறிவிப்பு ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான முதலீட்டு அழைப்புக்கு அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், இறுதி தீர்மானத்திற்காக மீண்டும் பேச்சுவார்த்தைக் (CANC ) குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
திருகோணமலை, இந்தியா – இலங்கை எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தின் அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் 2002 – 2004 காலப்பகுதியில், இலங்கையில் எரிபொருள் விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளில் இந்திய எண்ணெய் நிறுவனம் பங்கேற்பதற்கான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என இலங்கை அரசாங்கம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.



