தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (17) நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 15ஆம் திகதி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஊடாக பயணித்து மக்களின் அஞ்சலிக்காக சென்று, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நல்லூரை சென்றடையவுள்ளது.
இந்நிலையில், பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பவனி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்துள்ளதாகவும், திலீபன் உயிர்த் தியாகம் செய்த செப்டெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் பிரமாண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.



