மாகாண சபை தேர்தல்: பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றத் தவறுவது ஏன்!

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத் தேவை என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பிரதித் தலைவரும் பேராசிரியருமான ரொஹான் சமரஜீவ  தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்:

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்து எமது அமைப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போதே இத்தேர்தல்களை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

பழைய தேர்தல் முறையின் கீழ் ஒருமுறை மட்டும் இத்தேர்தலை நடத்துவதற்கான யோசனையை முன்வைத்தோம். அதற்கு அனுமதி அளிக்கும் சட்டம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தினால் தெளிவுபடுத்தப்பட்டு, தற்போதுள்ள பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் சட்டப் பின்னணிகளும் உள்ள சூழலில் இதனைச் செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அரசியல் யாப்பை எமக்குத் தேவையான பகுதிக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, ஏனைய பகுதிகளைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் அர்த்தமற்ற செயலாகும். மாகாண சபைகள் நிறுவப்பட வேண்டும் என்பதும், மாகாண சபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் என்பதும் தற்போதைய எமது அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் யாப்பை முன்மாதிரியாகக் கொண்டே இம்முறை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் காண்கின்றோம்.
மாகாண சபைகள் இயங்காத காரணத்தினால் குடிநீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களின் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. மாகாண சபை முறைமை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கு பொருத்தமான தீர்வு அல்ல என்று அரசாங்கம் நினைத்தால், அவர்கள் ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வரட்டும். ஆனால், அதுவரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புக்கு மதிப்பளித்து அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

அரசாங்கம் தேர்தலை நடத்த நினைத்தால் அதற்குத் தேவையான அனைத்துச் சூழல்களும் இன்று ஆளும் தரப்பிடம் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அவர்களிடம் உள்ளது. ஆனால், ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது அது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒரு சிலரின் ரகசியக் குழுவினால் இது செய்யப்படக் கூடாது.

பாராளுமன்றத்தில் உள்ள மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பங்களிப்புடன் இந்த அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.