முற்றாக முடங்கியது பிரித்தானியா – மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கும் திட்டம் இன்று (23) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

உணவுப் பொருட்கள் கொள்வனவு, மருத்துவத் தேவை, அதியாவசிய வேலை என்பவற்றை தவிர மக்கள் வெளியில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அஞ்சல் அலுவலகம், வங்கிகள் மற்றும் மருத்துவ மனைகள் தவிர்ந்த ஏனையவற்றை மூடுமாறு பிரித்தானியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது பிரித்தானியா காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானியா பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளர்.

கடந்த வாரம் பிரதமர் வெளியிட்ட ஆலோசனையை மக்கள் பின்பற்றவில்லை என்பதுடன், பூங்கா, கடற்கரை மற்றும் கடைகளில் அதிகளவு மக்கள் கூடியது பிரித்தானியா அரசை கடும் சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

இன்று வரை பிரித்தானியாவில் 335 பேர் கொரோனா வைரஸ் நோயினால் இறந்துள்ளதுடன், ஏறத்தாள 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.