யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது – ஜெயசேகரம்

யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பான மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே மக்கள் வீணாக குழப்பங்கள் அடைய வேண்டாம். மேலும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் காலையில் எடுக்கப்பட்டவுடனேயே அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூட வேண்டாம். குடும்பத்தில் இருந்து ஒருவர் வீதம் வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். அத்துடன் வர்த்தக நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தை பேணிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக மக்கள் பொருட்களை வாங்கும் போது நெருக்கமாக நிற்காது இடைவெளி விட்டு நில்லுங்கள். தேவையான பொருட்கள் தாரளமாக இருப்பதால் மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம்.

யாழ்ப்பான வர்த்தகர்கள் கொழும்புக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வர அவர்களுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரவூர்த்திகளுக்கு பாஸ் நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள் தேவையான பொருட்களை எடுத்து வருகின்றனர். மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கதில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.