குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது – சத்தியா சிவராமன் – தமிழில் ஜெயந்திரன்

சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன் இல்லாது மூச்சு விட முடியாது வேதனைப்பட்டு வீதிகளில் மக்கள் இறப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. வேண்டிய சிகிச்சையைப் பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின்றித் தவிக்கும் மக்களின் ஓலத்தையும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. அதே நேரத்தில் எரியூட்டப்படும் சிதைகளிலிருந்து தொடர்ச்சியாக மேலெழும்பும் கடும் புகையையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஏப்பிரல் மாதத்தின் நடுப்பகுதியின் பின்னர் இந்தியாவின் தலைநகரிலிருந்து உலகம் பூராவும் ஒளிபரப்பப்படும் காட்சிகள் இதயத்தை நொருக்கக்கூடியதாகவும் பேரழிவைச் சுட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. வட இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. ஒட்சிசன் வாயு நிறுத்தப்படுவதன் காரணத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களில் ஒரு தொகுதி அப்படியே இறந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

நாட்டின் கணிசமான பிரதேசங்களில் ஏற்கனவே வலுவற்றதாகவும், வளப் பற்றாக்குறையைக் கொண்டதாகவும் விளங்கிய சுகாதாரத்துறையை, கோவிட்-19 இன் இரண்டாவது இந்திய அலை முழுமையாக நிலைகுலைய வைத்திருக்கிறது. ஏப்பிரல் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாளில் மட்டும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தைத் தாண்டி வரலாறு படைத்திருக்கிறது. நாளாந்தம் ஏற்படும் சாவுகளின் எண்ணிக்கை 3645 என்ற இலக்கைத் தொட்டிருக்கிறது. இந்த நோய்ப்பரம்பல் ஏற்பட்ட காலத்திலிருந்து ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கையானவர்கள் இறந்ததை இந்த எண்ணிக்கை குறித்துக்காட்டுகின்றது.

இந்தியா முழுவதுமாக நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 மில்லியன்களைத் தற்போது தொட்டு விட்டது. அத்தோடு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்த எண்ணிக்கை கூட குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகவே பலர் கருதுகின்றனர்.

இந்தியாவில் உண்மையில் நடந்தது என்ன? உலகிலேயே இரண்டாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்டதும் விண்வெளி, அணுச்சக்தி, நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்தல் போன்ற விடயங்களில் வல்லரசாகவும், உலகின் ஐந்தாவது பொருண்மிய வல்லாண்மையையும் கொண்ட இந்தியாவால், மிகவும் அடிப்படைத் தேவையான ஒட்சிசனை மூச்சுவிட முடியாமற் தவித்த மக்களுக்கு வழங்க முடியாமற் போனதற்கான காரணம் என்ன?

நிலைமை இவ்வளவு மோசமானதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆணவம், செயற்றிறன் அற்றதன்மை, சீராக இயங்காத அரச நிறுவனங்கள், முதுகெலும்பற்ற ஊடகத்துறை, நாட்டின் முன்னுரிமைகள் அனைத்தையும் தாண்டித் தமது பிரதம மந்திரியான நரேந்திர மோடியின் விம்பத்தை மட்டும் முன்னிறுத்துகின்ற இந்து தேசியவாத அரசின் பைத்தியகாரத்தன்மை வாய்ந்த செயற்பாடுகள் போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.

இந்த நிலைமையை நேர்மையான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது, கோவிட்-19 இன் முதலாவது அலையின் உச்ச எண்ணிக்கையின் மூன்று மடங்குகளுக்கு மேலாக தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்ததன் காரணத்தால் முழுக் கட்டமைப்பும் நிலைகுலைந்திருக்கிறது. இந்தியாவின் பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் மின்னல் வேகத்தில் பரவுகின்ற மிகவும் இலகுவாகத் தொற்றக்கூடிய பி.1.617 என்ற பெயரைக் கொண்ட  திரிபடைந்த வைரசே இதற்கெல்லாம் காரணம் என எண்ணப்படுகிறது,

அதே நேரம் 2020ம் ஆண்டில், டெல்லி, மும்பாய் போன்ற பெருநகரங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்ததன் காரணத்தால் சில நாட்களில் நோயாளர்களுக்குப் போதிய படுக்கை வசதிகள் இல்லாமற் போனது உண்மை தான். ஆனால் அப்படியான நேரங்களிலும் கூட நோயாளரின் உயிர் காப்புக்குத் தேவையான ஒட்சிசனுக்கு எந்தவித பற்றாக்குறையும் இருக்கவில்லை. ஏப்பிரல் மாதத்தின் முதல் வாரத்தில், நோய்த்தொற்றுக்கு உள்ளான மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் மருத்துவ ஒட்சிசனின் மொத்தத் தேவை 3,842 தொன்களிலிருந்து 6,875 தொன்களாக அதிகரித்தது.

தற்போது முழு இந்தியாவுக்கும் தேவையான திரவ ஒட்சிசன் மூன்று மடங்கு அதிகமாகக் கையிருப்பில் இருக்கும் போது, சரியான திட்டமிடல் இல்லாமற் போனதும், தேவையான ஒட்சிசனைக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கு செயற்றிறன்மிக்க போக்குவரத்து மற்றும் விநியோக வசதிகள் இல்லாமற் போனதும் பெரு நகரங்களில் போதிய மீள்நிரப்பும் வசதிகள் இல்லாமற் போனதுமே உண்மையான பிரச்சினையாகும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒட்சிசனின் பெரும் பகுதி அந்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நாட்டின் மேற்கு மற்றும் வட பிராந்தியங்களிலே தான் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

சான்றுகளுக்கு முன்னுரிமை கொடுக்காது, அரசியல் தேவைகளையும் கருத்தியல் கொள்கைகளையும் மட்டும் முன்னிறுத்தி, அவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளுகின்ற பிரதம அமைச்சரான மோடியின் இக்குணவியல்பே கொள்கை வகுப்பு சரியான திசையில் மேற்கொள்ளப்படாததற்கான காரணமாகும்.

af indiacoviddeath 2604 குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது - சத்தியா சிவராமன் - தமிழில் ஜெயந்திரன்

சுயாதீனமாக முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களை வெறுப்பவராகவே 2014ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து மோடி இருந்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்குப் பதிலாக கட்சியில் அதிக பற்றுள்ளவர்களையும் குறிப்பிட்ட துறைகளில் போதிய பின்னணி இல்லாதவர்களையுமே அவர் பொறுப்புகளில் நியமித்து வந்திருக்கிறார்.

எடுத்துக்காட்டாக, கடந்த வருடம் நவம்பர் மாதம், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின் ஊடாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒட்சிசன் பற்றாக்குறை தொடர்பாக ஒரு கவனயீர்ப்பைச் செய்திருந்தார்கள். “முகக்கவசத்தின்  ஊடாகச் செலுத்தப்படும் ஒட்சிசன் உருளைகளுக்கான தேவையைத் தற்போதைய நோய்ப்பரம்பல் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதும் சில மருத்துவமனைகளில் ஒட்சிசன் உருளைகள் முற்றாகவே இல்லாமலிருப்பதும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.”

துருக்கிய அதிபர் எர்டோகான், பிரேசில் அதிபர் பொல்சொனாறோ, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்றவர்களின் வரிசையில் நரேந்திர மோடியும் ‘சக்திமிக்கவர்’ என்று கூறி அவரது குணஇயல்புகள் தொடர்பாகத் தம்பட்டம் அடிப்பதில் முனைப்பாக இருந்த இந்திய அரசு, புத்திசாலித்தனமான இந்த அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. கோவிட்-19 இன் முதலாவது அலை இயற்கையாகவே தணிந்த போது, டென்மார்க்கின் அரசர் கனியூட், வடகொரிய அதிபர் கிங் யொங் உன் போன்றவர்களுடன் தங்கள் ‘மாண்புமிக்க தலைவரை’ ஒப்பிடுவதற்குத் அவர்கள் தவறவில்லை.

 “முழு உலகிலுமே இந்தியாவே கொரோனாவினால் மிக அதிகமாகப் பாதிக்கப்படப்போகிறது எனச் சொல்லப்பட்டது. இந்தியாவைக் கொரோனா சுனாமி போலத் தாக்கும் என்றும் சொல்லப்பட்டது. எழுநூறு, எண்ணூறு மில்லியன்களுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவார்கள் என்றும் இரண்டு மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது” என்று உலக நிபுணர்களின் கருத்துகளைக் கேலி செய்து சுவிற்சர்லாந்து டேவிஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருண்மிய அவையில் இவ்வாண்டு ஜனவரி 28ம் திகதி ஆற்றிய உரையில் மோடி தெரிவித்திருந்தார். ‘கொரோணாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி மனித குலத்தையே பேரழிவிலிருந்து இந்தியா காப்பாற்றிவிட்டது’ என்றும் அவர் தம்பட்டம் அடித்தார்.

Patient get Oxygen at Indirapuram Gurdwara PTI Photo குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது - சத்தியா சிவராமன் - தமிழில் ஜெயந்திரன்

இந்திய நாட்டின் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் மேலோங்கியிருக்கும் முக்கிய அரசியல் ஆளுமைகளை நேர்மையின்றிப் புகழ்ந்துதள்ளும் இயல்பும் அரசியல் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவர்கள் அங்கு இல்லாதிருப்பதும் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. நாடு பூராவும் அடிமட்டங்களில் உள்ள தரவுகளைச் ஒழுங்குக்கிரமமாகச் சேகரித்து அத்தரவுகளின் துணையோடு ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்கத் தவறியிருப்பது துறைசார் நிபுணத்துவம் இல்லாதிருப்பதற்கான ஒரு வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் தரவுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கும் தகவல்கள் உண்மைத்தன்மையுடன் கையாளப்படாததற்கும் எடுத்துக்காட்டுகள் நிறையவே உண்டு. இவ்வாறாகப் பார்க்கும் போது இரண்டாவது அலை இந்திய நாட்டை ஒரு சுனாமியின் வேகத்தோடு தாக்கிய போது, சுகாதாரச் சேவையின் உயர்மட்டங்களில் இருந்தவர்களுக்கு நிலைமையை எப்படிக் கையாள்வது என்ற எந்தத் தெளிவும் இருக்கவில்லை.

கோவிட்-19 நோய்ப்பரம்பல் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது, 2020 மார்ச் மாதம் 24ம் திகதி, அரசு அவசர அவசரமாக ஒரு நாடளாவிய ஒரு முடக்கத்தை அறிவித்து, வெறும் நான்கு மணித்தியால அவகாசத்தில் அதனை அமுல்நடத்தியதிலிருந்து, அரசு தவறான அணுகுமுறை ஒன்றைக் கையாள்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களைப் பின்தொடரவும், அவர்களை இனங்காணவும் நோயாளர்களை உரிய முறையில் பராமரிக்கவும், சுகாதாரப் பணியாளர்களுக்குப் வேண்டிய பயிற்சியை அளிக்கவும் பாதுகாப்பு உடைகள், ஒட்சிசன் என்பவை போதியளவு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது, 1.3 பில்லியன் மக்களது இயல்பு வாழ்க்கையை இந்த முடக்கம் திடீரென நிறுத்தி வைத்தது.

இந்த முடக்கத்தின் காரணமாக மில்லியன் கணக்கிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த ஒரு தொழிலோ, அரச ஆதரவோ இன்றி, தாம் தொழில்புரிந்த நகரங்களில் முடங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டது மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்து தமது சொந்தக் கிராமங்களில் பாதுகாப்புத் தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பலர் தாம் பயணஞ் செய்த வீதிகளில் பசியாலும், தாகத்தாலும், விரைந்து சென்ற வாகனங்களால் மோதப்பட்டும் இறந்தார்கள்.

பிரதேச ரீதியாக சுகாதாரத்துக்குப் பொறுப்பான பெருமளவிலான உட் கட்டமைப்புகளையும் செயற்பாடுகளையும் பெருமளவில் கொண்டிருக்கின்ற மாநிலங்களுடன் எந்தவித கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளாது, இந்த முடக்கம் அமுல்நடத்தப்பட்டது. திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவின் காரணமாக ஒரு குழுவாக இணைந்து செயற்படுவதற்குப் பதிலாக தேவையற்ற முரண்பாடுகள் அதிகாரிகள் நடுவில் தோற்றம் பெற்றன.

கோவிட்-19 நோய்ப்பரம்பல் தொடர்பாக 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே வெற்றியடைந்து விட்டோம் என்றவொரு மனப்பான்மை மேலோங்கியிருந்ததோடு, பொருண்மிய முயற்சிகளைத் தொடங்குவதில் விவேகமற்ற அவசரம் காண்பிக்கப்பட்டது மட்டுமன்றி நாடு தழுவிய வகையில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடைகளும் தளர்த்தப்பட்டன. இங்கே வகுக்கப்பட்ட கொள்கை கடந்த வருடத்தில் அமுல்நடத்தப்பட்ட மிகக்கடுமையான முடக்கத்தில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து திருமணங்கள், கொண்டாட்டங்கள், சமய ஒன்றுகூடல்கள், கேளிக்கை நிகழ்வுகள் என எல்லாச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கும் அளவுக்கு நேரெதிராக மாற்றமடைந்தது.

modi 1 குறுகிய தன்னலம்மிக்க தேடல் இந்தியக் கோவிட் பேரழிவைத் தோற்றுவித்திருக்கிறது - சத்தியா சிவராமன் - தமிழில் ஜெயந்திரன்

இவ்வளவுக்கும் நடுவில், நாலு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் தேர்தலை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் நிலை உருவாகியது. புதுடெல்லியில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொட்ட அதே நேரம், ஏப்பிரல் 17ஆம் திகதி மோடி எந்தவொரு முகக்கவசமும் அணியாது, மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கூட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து “இன்று எத்திசையிலும் பிரமாண்டமான மக்கள் கூட்டத்தை நான் பார்க்கிறேன்… முதல் தடவையாக இப்படிப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்று கூறி தனது பிரமிப்பு உணர்வை வெளியிட்டார்.

பின்னர் ஏப்பிரல் மாதத்தின் கடைசி வாரத்தில், கோவிட்-19 நோய்ப்பரம்பல் காலத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டதோடு இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் “உங்கள் அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருந்தார்கள்.

தமது அடிப்படைவாத இந்துக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் கும்பமேளா நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி கொடுத்ததே இவை எல்லாவற்றிலும் மிக மோசமான நடவடிக்கையாகும். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்த ஒன்றுகூடல் சோதிடர்களின் அறிவுரையைத் தொடர்ந்து ஒரு வருடம் முன்னதாகவே கூட்டப்பட்டது. இதனால், 90 இலட்சம் சமயப்பக்தி நிறைந்த இந்து மக்கள் வட இந்திய நகரமான ஹரித்வாரில் புனித கங்கை ஆற்றில் மூழ்கி எழுந்தார்கள். இவ்வாறாக, வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு தொற்றுநொய் மிகப் பெரிய அளவில் பரவுவதற்கு வழிசமைக்கப்பட்டது.

கோவிட்-19 நோய்ப்பரம்பலுடன் போராடிக் கொண்டிருந்த உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும் போது, ‘தடுப்பூசியை உற்பத்தி செய்த உலகின் மிகப்பெரிய நாடு’ என்ற தகைமையை இந்தியா கொண்டிருந்தது. தமது அரசியல் எதிரிகளைத் தோற்கடிப்பதற்கான ஒரு உத்தியாக தடுப்பூசி போடும் செயற்பாட்டை உபயோகித்த காரணத்தினாலும் தமது தலைவர் மோடியின் விம்பத்தை ஊதிப்பெருப்பிப்பதற்காகப் இதனைப் பயன்படுத்தியதன் காரணத்தினாலும் இந்த சாதக தன்மையைக்கூட இந்திய அரசு வீணாக்கியிருக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் இந்தியா தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 பேரழிவுக்குப் பின்வருமாறு விளக்கம் கொடுக்கலாம். இந்திய அரசு தனது சொந்த இலக்குகளை அடைய தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகளின் விளைவே இந்தப் பேரழிவாகும். சைற்றோக்கீன் புயலைப் போன்றே கோவிட்-19 இன் மிகப் பயங்கரமான இயல்பு என்னவென்றால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியே உடலுக்கு எதிராகத் திரும்புவதாகும். நாடு ஓர் பெரிய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் மோடி அரசின் நடத்தைகளும் இப்பேரிடருக்குக் காரணமாக அமைந்துவிட்டன.