உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் 03.05.2021 “பொதுநன்மையைக் குறித்த தகவல்கள்” – இவ்வாண்டுக்கான மையக்கருப்பொருளாக அறிவிப்பு

நமக்கான சுதந்திரமான தேசியத் தகவல் பரிமாற்றத்தை நாமே உருவாக்கினாலே அது பொது நன்மை குறித்ததாகும்.

ஐக்கியநாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உடைய “உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்” இம்முறை 03.05.21(இன்று) இடம் பெறுகிறது. நமீபியாவின் வின்ட்கொக் நகரத்தில் உலகப் பத்திரிகைச் சுதந்திரம் குறித்த பிரகடனம் வெளியிடப்பெற்ற முப்பதாவது ஆண்டுப் பெருநினைவாக இம்முறை நமீபிய அரசாங்கம் உலக மாநாடு ஒன்றையும் ஏப்ரல் 29 முதல் மே 3 வரை நடத்தி, உலகப் பத்திரிகைத் தினத்திற்கு மதிப்பளித்துள்ளது.

இவ்வாண்டு பொது நன்மையைக் குறித்த தகவல்கள் வெளியாவதை உறுதிப்படுத்த மூன்று செயற்திட்டங்களை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.

  • செய்தி ஊடகத்தின் பொருளாதார ஆற்றலைப் பேணுதல்.
  • வலைத்தொடர்பு கம்பெனிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தலுக்கான பொறிமுறைகளை வலுப்படுத்துதல்.
  • ஊடகத்தினதும், தகவல் வழி அறிவூட்டலதும் ஆற்றல், மக்களை மதித்தலை விழுமியமாகக் கொண்டு, அவர்களை ஏற்கவைக்கக் கூடிய வகையில், அவர்களுடைய தேவையையும் பாதுகாப்பையும் கொண்டிருந்தாலே, ஊடகத்துறையால் பொதுநன்மை குறித்த தகவல்களை வெளியிட முடியும் என்பதை மலர்ச்சி அடையச் செய்வது.

இவற்றுடன் ஊடகக் கடமையில் உயிர் நீத்தவர்களது நினைவேந்தல்களைப் போற்றி அவர்களுடைய பொதுநன்மையைப் பேணிய பெரும்பணியைப் போற்றுதல் என்பது பழக்கப்படுத்தப்பட்டு, வழக்கப்படுத்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளும் உலகப்பத்திரிகைச் சுதந்திரத்தினத்தின் முக்கிய வேண்டுகோளாக அமைகிறது.

யுனெஸ்கோவின் இந்த நெறிப்படுத்தலின் வழி ஈழத்தமிழர்களுடைய பத்திரிகைச் சுதந்திரத்தை எடுத்து நோக்கின், அவர்களுடைய தேசியத் தலைமையின் கீழ் அவர்களுடைய நடைமுறை அரசு செயற்பட்ட மூன்று தசாப்தங்களிலும் இந்த நோக்குகளை அவர்களுடைய தேசியத் தலைமை கொண்டிருந்ததை ஈழத்தமிழர்கள் நன்கறிவர். இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து மக்களுக்குமான ஊடகமாக ஈழத்தமிழர்களின் ஊடகத் துறை விளங்க வேண்டும் என்னும் உறுதியிலேயே தேசியத் தலைவர் அவர்கள் பத்திரிகைகள் சென்றடைய இயலாத மக்களுக்கும் அலைவழி தகவல் அறிவூட்டல் வளர்க்கப்பட வேண்டும் என்னும் பெருநோக்கில் வானொலிச் சேவைகளைத் தொடங்கவும், தொலைக்காட்சி சேவைகளையும், சமுகவலைத்தள உறவாடல்களையும் வளர்க்க வலியுறுத்தினார். தாயகத்தில் இவற்றை உறுதியான முறையில் வளர்க்கவும் இயன்றதெல்லாம் செய்தார்.

கேர்ணல் கிட்டு அவர்களும் இலண்டனில் அவர் வாழ்ந்த காலத்தில் ஈழத்தமிழ் மக்களின் பொதுக் கருத்துக்கோளத்திற்கான கட்டமைப்பாக ஊடகம் உடனடியாக வளர்க்கப்பட வேண்டுமெனக் களத்தில் பத்திரிகையையும் எரிமலை, சுதந்திரப் பறவைகள், போன்ற மாத இதழ்களையும் பருவ இதழ்களையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் கொண்டு உருவாக்கச் செய்தார். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிதியீட்டம் செய்த புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அளப்பரிய பங்களிப்புகளே, ஈழத்தமிழ் மக்களுக்கான பலம்பொருந்திய மின்னியல் உலகம் கட்டமைக்கப்பட்டு, ஈழத்தமிழர்களின் பொதுநன்மை குறித்த தகவல்களால் உலகுக்கு ஈழத்தமிழர்கள் குறித்த வெளிப்படைகள் அறிவூட்டப்பட்டதும் அல்லாமல், ஈழத் தமிழர்களின் உலகளாவிய பொதுக்கருத்துக்கோளம் பெருவளர்ச்சி பெறவும் செய்தது.

இதனால் உலகத் தமிழர்களின் தேசிய ஊடகப் பலத்தை உடைப்பதற்கான பலம் பொருந்திய செயற்பாடுகளை சிறீலங்கா அரசு காலத்துக்குக் காலம் செய்து வந்தமையின் உச்சியாகப் பாரிசில் ஊடகப்போராளி கஜன் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது வரலாறு. அத்துடன் ஈழத்தமிழ்த் தேசிய ஊடகத்தினை வர்த்தக ஊடகங்களாக மாற்றும் முயற்சியையும் காலத்துக்குக் காலம் சிறீலங்கா தொடர்ந்து செய்து வந்தது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு மூலமாக ஈழத்தமிழ்மக்களின் நடைமுறை அரசை ஆக்கிரமிப்புச் செய்து அவர்களின் தாயகங்களை தனது படைபல ஆட்சிக்குட்படுத்தியுள்ள சிறீலங்கா அதன் பின்னர் தனது ஆயுதமுனையில் மக்களின் அரசியல் பணிவைப் பெறுவதையும் தனது இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் மூவகை அனைத்துலகக் குற்றச்செயல்களும் குறித்த தகவல்கள் உலகை வந்தடைவதைத் தாமதப்படுத்தவும் கூடுமானால் தடுக்கவும் ஈழத் தமிழர்களின் தேசிய ஊடகப்பலத்தைச் சிதறடிப்பது என்னும் மனித உரிமை மீறல் செயற்திட்டத்தைத் தனது அரசாங்கத்தின் அரசியற் செயற்திட்டமாகவே முன்னெடுத்து, ஈழமக்களின் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல உலகின் பத்திரிகைச் சுதந்திரத்திற்கே மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தி வருவதை 2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிய மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் “சிறீலங்கா : ‘அரசியல் பழிவாங்கல்களை மறுக்கிறது – அரசாங்கம்  இன்றைய சிறீலங்கா அதிபர் உள்ளடங்கலாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட சகபாடிகளின் குற்ற முழுமைகளை மறைத்து அவர்கள் மேல் நீதியை நிலைநாட்ட வழக்குத் தொடரும் முறைமைகளில் இருந்து காப்பாற்றுகிறது” என்ற  கவனப்படுத்தல் செய்தி கூட உறுதியாக்கி வருகிறது.

2021 மார்ச் 25ஆம் திகதிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் “சிறிலங்கா : நீதியை முன்னெடுப்பதற்கான ஐ.நாவின் முக்கிய தீர்வு முறைமை – கவனத்தில் கொண்டு அரசாங்கம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்புபவர்களைப் பழிவாங்குகிறது” என்ற கவனப்படுத்தல் செய்தியில், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் உருவாக்க முயலும் சிறீலங்காவின் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனிதஉரிமை வன்முறைகள் என்பன குறித்த தரவுகளையும் தகவல்களையும் மக்கள் அளிப்பதைத் தடுக்கும் வகையில் மக்களைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழுவொன்றை உருவாக்கச் சிறீலங்கா சட்டவரைவைத் தயாரித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டித்து, ஐக்கியநாடுகள் சபை நீதியை மறுத்து அட்டூழியங்கள் செய்பவர்கள் மேல் தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அச்சப்படுத்தல் மூலமும், மிரட்டல் மூலமும் மனித உரிமைகள் குறித்த உண்மைகளை வெளிவராது தடுக்கும் சிறீலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளாகிய ஐரோப்பிய ஒன்றியமும் சிறீலங்காவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளரான ஐக்கிய இராச்சிய அரசும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தினை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில் சிறீலங்காவில் மனித உரிமைகள் சீர்பெற தங்களுடைய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் ஈழத்தமிழ் மக்களின் பொது நன்மைகள் குறித்த தகவல்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேசிய ஊடகத்தின் தேவையின் அவசியம் உணரப்படுகிறது. எனவே புலம்பதிந்த ஈழத்தமிழர்கள் தங்களுக்கான தேசிய ஊடகத்தை உருவாக்கல், அதற்கான நிதியீட்டங்களைச் செய்தல், மக்களை மதித்து அவர்களுடைய தேவைகளையும், பாதுகாப்பையும் வெளிப்படையாக்கல், ஈழத்தமிழ் பத்திரிகைச் சுதந்திரத்திற்காக உயிரிழந்த ஊடகவியலாளர்கள் நினைவேந்தல் களைப் போற்றுதல் என்னும் யுனெஸ்கோ காட்டிய நெறிமுறைகள் மூலம் தங்களுக்கான தேசிய ஊடகத்தைக் காலதாமதமின்றி கட்யெழுப்புதல் என்பது ஈழத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்கான உடனடித்தேவை என்பதை மனதிருத்திச் செயற்பட வேண்டிய காலமிது.

– ஆசிரியர், ஊடகவியலாளர், ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் –