சென்னையில் சராசரியை விட அதிக மழை – ஆராச்சியாளர்கள் தகவல்

ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 106 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்யும் இந்த கனமழை, சராசரியை விட 3,000 சதவீதத்திற்கும் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன்,

“வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது . ஜனவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை காலமும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை ஜனவரியில் தொடர்கிறது என்பதைதான் இந்த அதீத மழைப்பொழிவு உணர்த்துகிறது.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை அளவை ஒப்பிட்டு பார்த்தோம். 1915இல் சென்னை நகரத்தில் ஜனவரி மாதத்தில் 21.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது, 106 ஆண்டுகளுக்கு பின்னர், ஜனவரி மாதத்தில், சென்னை நகரத்தில், ஜனவரி மாதத்தில் இதுவரை 16.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பான சதவீதத்தை விட சென்னையில் 3,318 சதவீதம் அதிக மழை ஜனவரியில் பெய்துள்ளது,” என்றார்.