தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்!

‘ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்’ எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஊடக அறிக்கையில்,

“சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படையில் இத்தருணத்திலாவது அவர்களை விடுவிக்க மனிதாபிமான முறையில் வலியுறுத்தும் வகையில் சர்வமத பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

சர்வமதத் தரப்பினரை இணைத்து மேற்கொள்ளப்படும் இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள் மற்று அரசியல் கைதிகளின் குடும்பத்தார் பங்குபற்றவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் வரும் 07.01.2021 அதாவது நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  தியாகி அறக்கட்டளை நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் தற்கால கொரோனா தடுப்பு சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மேற்குறித்த தரப்பினருடன் இச் சர்வமத  கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.