அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார போருக்கு ஜி-20 மாநாட்டிலும் தீர்வு இல்லை

யப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி தற்போது இடம்பெற்றுவரும் வர்த்தகப்போருக்கு தீர்வைக்காண்பார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே உள்ளதாக யப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பல நாடுகளின் தலைவர்களிடம் நம்பிக்கையான சமிக்கைகள் காணப்பட்டாலும் இரு தரப்பும் அதிக தூரத்தில் உள்ளதாக வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் இன்று (29) அமெரிக்கா மற்றும் சீனா அதிபர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதால், பலத்த எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களின் வரியை அமெரிக்க அதிபர் இரு மடங்காக அதிகரித்துள்ளார். மேலும் இறக்குமதி செய்யப்படும் 325 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு வரியை அதிகரிக்கப்போவதாக மிரட்டி வருகின்றார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த பொருட்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. செல்லிடத் தொலைபேசிகள், கணணிகள் மற்றும் ஆடை வகைகள் அதில் அடங்குகின்றது.

சீனாவும் 60 மில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரியவகை உலோகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு சீனா முடிவெடுத்துள்ளது. இலத்திரனியல் சாதனங்களின் தயாரிப்புக்கு இந்த உலோகங்கள் அவசியமானது.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் போரினால் உலகின் பொருளாதரம் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கலாம் என அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்ரின் லாகார்ட் தெரிவித்துள்ளார்.

உலகின் மொத்த உற்பத்தியின் அளவு 2020 ஆம் ஆண்டு 0.5 விகிதத்தால் வீழ்ச்சியடையும் என இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஐ.எம்.எஃப் தெரிவித்திருந்தது.