வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை | மட்டு.நகரான்

387 Views

காயங்கள் ஆறாத இதயங்கள்மட்டு.நகரான்

காயங்கள் ஆறாத இதயங்கள்

வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலம் நிறைவுபெற்று 13வருடங்கள் கடந்து நிற்கின்றன. இந்த அவலங்களின் ஓசைகள் இன்றும் வடகிழக்கின் பல பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த அவலக்குரலை இன்றைய தமிழர் சமூகம் எவ்வாறு பார்க்கின்றது என்பது மிகவும் வேதனையான விடயமாகவே பார்க்கப்படவேண்டும். இந்த அவலங்கள் முறையான வகையில் இளம் சமூகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதா என்றால் அதுவும் இல்லையென்றே கூறவேண்டும்.

எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் அதேநேரம் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள அரசியல் சக்திகள் அதனை தமது அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்திவருவருவதும் கண்டறிந்த உண்மையாகும்.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமானது, பல சவால்கள் கொண்டது. அந்த சவால்கள் வெற்றி கொள்ளப்பட்டு தமது விடுதலையினை முன்கொண்டு செல்லும்போதே இந்த போராட்டம் வெற்றியென்ற பாதையினை தொடரும் நிலையேற்படும். வெறுமனே அந்த போராட்டத்தினை ஏட்டுச்சுரக்காய் நிலைக்கு கொண்டு செல்வோமானால், அதனால் எந்த வெற்றியையும் பெறமுடியாத நிலையே ஏற்படும்.

இவ்வாறான நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் ஏட்டுச் சுரக்காயாகயிருந்துவிடக் கூடாது. அதனை ஒரு உணர்வுரீதியான விடயமாக வடகிழக்கில் முன்நகர்த்துவதன் மூலமே எதிர்காலத்தில் தமிழர்களின் போராட்டம் எவ்வகையான போராட்டம் என்பதை இளம் தமிழ் சமூகமும் அறிந்து, அந்த போராட்டத்தினை முன்கொண்டு செல்லும் நிலையேற்படும்.

வடக்கினைப் பொறுத்தவரையில் இவ்வாறான நிலை ஓரளவு உள்ளபோதிலும், கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் இவ்வாறான உணர்வு ரீதியான முன்கொண்டு செல்லுதல் என்பது மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாக காணப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையும் முள்ளிவாய்க்கால் என்பதையும் தாண்டி கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  படுகொலைகள் ஏராளம். ஆனால் அவற்றினை நினைவுகூருவதினை வடகிழக்கு தமிழ் சமூகம் கடந்த காலத்திலிருந்து தவறியே வருகின்றது.

வடகிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில் கிழக்கு மாகாண தமிழர்களும் பல படுகொலைகளை சந்தித்துள்ளனர். இவ்வாறான படுகொலைகள் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் சாட்சியங்களாகவுள்ளன. ஆனால் அவற்றினை நாங்கள் முன்கொண்டு செல்வதற்கான தயக்கத்தினை காட்டிவரும் நிலையினையே இருந்து வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் எந்தளவுக்கு தமிழர்களின் மனங்களில் வடுக்களாகவுள்ளதோ அதேயளவு வடுக்களை  கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளும் சுமந்து நிற்கின்றன. இவ்வாறான படுகொலைகள் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே முடக்கப்படுகின்றது. இவை வடகிழக்கு தேசத்தில் சோகக்குரலாக ஒலிக்காத காரணத்தினாலேயே இன்று தமிழ் இளம் சமூகத்தின் மத்தியில் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுதிகள் தளர்வடைவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைகின்றது.

இவ்வாறான நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கஞ்சி வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கஞ்சி வாரத்தில் உப்பில்லா கஞ்சி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக முள்ளிவாய்க்கால் துயரங்கள் கொண்டு செல்லப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது. இம்முறை முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான களமாக இந்த கஞ்சி திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

மே 12ஆம் திகதி தொடக்கம் மே 18வரையில் இந்த கஞ்சிவாரம் முன்னெடுக்கப்படும். உண்மையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது வடகிழக்கில் செயற்படும் தமிழ் தேசிய சக்திகள் ஒன்றுபட்டு முன்னெடுக்கும்போதே அந்த போராட்டத்தினதும் வலியினதும் உண்மைத்துவம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படும்.

இன்று தமிழ் தேசிய பரப்பில் தமிழர்களின் போராட்டங்களும் கடந்த கால காயங்களும் தமிழினம் எதிர்கொண்ட படுகொலைகள் உட்பட இழப்புகள் தொடர்பிலும் அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட சமூகம் மட்டுமே போராடிவரும் நிலையினை காணமுடிகின்றது. குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இந்த போராட்டங்களில் அதிகளவில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் தமிழ் தேசியம் சார்ந்தவர்கள் இணைந்து செயலாற்றும் போதே இவ்வாறான போராட்டங்கள் இன்று இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் நிலையினை எடுத்துச்செல்லும் நிலையேற்படும். மட்டக்களப்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வின்போது பல சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியூடாக முள்ளிவாய்க்கால் தொடர்பிலான கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அவற்றினை கேட்டு கண்கலங்கி கஞ்சியை வாங்கி அருந்திச்சென்ற நிலையினையும் ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த எங்களால் காணமுடிந்தது.

இவ்வாறான  செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படும்போதே அவை உணர்வுபூர்வமான விடயமாக அனைத்து மக்களினாலும் பார்க்கப்படும் நிலையேற்படுவதுடன் தமிழர்களின் உண்மையான வலியையும் வேதனைகளையும் கடந்தகால இழப்புகளையும் புரிந்துகொள்ளும் நிலைமையினை ஏற்படுத்தமுடியும்.

தமிழ் மக்களின் சாபம் இன்று சிங்கள ஆட்சியாளர்களை ஆட்டிப்படைத்தாலும் இதே சாபம் இன்று தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கும் உள்ளது என்பதை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் பெற்று தனித்துவமான  இனமாக வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் கொண்ட இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அனைத்து அடிப்படைகளும் கொண்ட இனமாக தமிழ் இனம் உள்ளது என்பதை இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் ஏற்றுக்கொள்ளவதற்கான அல்லது சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக்கொள்வதற்கான நிர்ப்பந்தங்களையும் நியாயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டியவர்கள் அதனை முறையாக இந்தவேளையில் முன்கொண்டு செல்லவேண்டும்.

இன்று சிங்கள மக்கள் இந்த நாட்டினை மீட்க ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதற்கான ஆதரவு தளங்கள் பல்வேறு வழிகளிலும் வழங்கப்பட்டதன் காரணமாக அந்த போராட்டம் வெற்றிபெறும் நிலையினை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சாத்வீக போராட்டம் என்பது அனைத்து தரப்பினராலும் இணைந்து முன்னெடுக்கும்போதே அந்த போராட்டம் வீரியம் மிகுந்ததாக காணப்படும்.

ஆனால் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வெறுமனே பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக அந்த போராட்டத்தினை ஏனையவர்கள் கண்டுகொள்வது குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவோர் கூட அதனை கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவினை நாங்கள் உணர்வுடன் கொண்டாடுகின்றபோது அதன் வலிகளையும் வேதனைகைளயும் நாங்கள் மட்டும் எமது உள்ளக்கிடங்கில் கொண்டிருக்கின்றோம் என்றால் அதன் வேதனைகள் ஏன் தமிழ் தேசிய பரப்பில் உணர்வெழுச்சியாக வெளிக்கிளம்பவில்லையென்பதை நாங்கள் அனைவரும் ஒரு தடைவ மீட்டிப்பார்க்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு வைத்துக்கொண்டாலும் தமிழ் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்கள் தங்களது நிகழ்ச்சி திட்டங்களை எவ்வாறு முன்கொண்டு சென்றாலும் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட இன அழிப்பு உட்பட அனைத்து தமிழின விரோத செயற்பாடுகளினையும் நினைவு கூரும்போது அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும்போதே தமிழர்களின் இந்த போராட்டம் உண்மையான வெற்றிப்பாதையினை ஏற்படுத்தி முன்கொண்டுசெல்லப்படும்.

இதனை உணர்ந்து எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களாக இருக்கட்டும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளாக இருக்கட்டும் அனைத்து வலிகளையும் தமிழ் தேசிய பரப்பில் உள்ளர்கள் இணைந்து முன்கொண்டு செல்லும்போது தமிழ் தேசிய சுதந்திரத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய ஆத்மாக்கம் நம்முடன் இணைந்து பயணித்து எமக்கான விடுதலைக்கு உறுதுணையாக நிற்கும் நிலையேற்படும்.

Tamil News

1 COMMENT

  1. […] காயங்கள் ஆறாத இதயங்கள்: வலிகள் சுமந்த இதயங்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை.முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலம் நிறைவுபெற்று 13வருடங்கள் கடந்து நிற்கின்றனமேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-182-may-15/  […]

Leave a Reply