புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? – அகிலன்
புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, எதிர்வரும் 15 ஆம் திகதி புதுடில்லியில் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இந்தத் தகவலை கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். வெறுமனே ஒரு தூதுவர் பதவியேற்பது என்பதைவிட, மிலிந்த மொரகொடவின் பதவியேற்பு முக்கியமானதாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதனால்தான் அவரது பதவியேற்பு பெருமளவு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகவும் இடம்பெறுகின்றது.
புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த? முதலாவதாக, வெறுமனே ஒரு தூதுவர் என்பதை விட, அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒது தூதுவராக மிலிந்த மொரகொட புதுடில்லி செல்லப் போகின்றார். பொதுவாக – தூதுவர்கள் முடிவுகளை எடுக்கும் போது, வெளிவிவகார அமைச்சரை, அல்லது அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய அனுமதியுடனேயே தீர்மானங்களை எடுக்க முடியும். ஆனால், மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள ஒரு தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதால், முக்கியமான விடயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டவராக இருப்பார். அதனால் உடனடி முடிவுகளை அவர் எடுக்க முடியும். ஜனாதிபதிக்கு மட்டும்தான் அவர் பதில் கூற வேண்டியிருக்கும்.
இரண்டாவதாக, இராஜதந்திர – அரசியல் மட்டத்தில் என்னதான் சொல்லப்பட்டாலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் பாரிய நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கின்றது. சீனாவின் அதிகரித்த பிரசன்னம் இதற்கு முதலாவது காரணம். ஏற்கனவே உடன்படிக்கை கையொப்பமாகிய பின்னரும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் முடிவை இறுதி வேளையில் இலங்கை அரசாங்கம் மாற்றிக் கொண்டது புதுடில்லிக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. புதுடில்லியைச் சமாதானப்படுத்தும் உபாயமாக மேற்கு முனையத்தைத் தருகின்றோம் என்ற கொழும்பின் நிலைப்பாடும் புதுடில்லிக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தியாவைத் திருப்திப்படுத்த மிலிந்தவிடம் உள்ள உபாயம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.
மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டது ஏன்?
மிலிந்த மொரகொடவை புதுடில்லிக்கான தூதுவராக – அதுவும் அமைச்சரவை அந்தஸ்துடன் அனுப்பி வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்தமைக்கு சில விஷேட காரணங்கள் உள்ளன.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்பு மிலிந்த மொரகொட வுக்கு வழங்கப் பட்டிருந்தது. முதலாவது, அமெரிக்காவுடன் அவருக்கிருந்த நெருக்கமான உறவுகளைப் பயன்படுத்தி அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் உதவிகளை – ஆதரவைப் பெறுவது. இரண்டாவது, விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களிலும் மிலிந்த மொரகொட முக்கியமான பங்கை வகித்திருந்தார். இந்த இரண்டு விடயங்களிலும் தன்னுடைய இராஜதந்திரத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த வகையில், புதுடில்லியை வசப்படுத்துவதற்குப் பொருத்தமான ஒருவராக மிலிந்த மொரகொட செயற்படுவார் என கோட்டாபய கணித்திருக்கலாம். அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருவரால்தான் இந்தியை வசப்படுத்த முடியும் எனவும் அவர் நினைத்திருக்கலாம்.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களிலும் மிலிந்த மொரகொட முக்கியமான பங்கை வகித்திருந்தார்
ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட வெறுமனே தூதுவராக அனுப்பி வைப்பது அவரது அந்தஸ்தை குறைப்பதாகி விடும் என்ற நிலையில் தான், அமைச்சரவை அந்தஸ்துடனான தூதுவராக அவர் நியமிக்கப் பட்டிருக்கின்றார். அமைச்சரவை அந்தஸ்துடனான தூதுவர் ஒருவர் நியமிக்கப்படுவது இலங்கையைப் பொறுத்த வரையில் இதுதான் முதல் முறையாகும்.
புதுடில்லியில் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்னான்டோவின் பதவிக் காலம் 2020 ஜனவரி மாதத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. 2020 ஆகஸ்ட்டில் மிலிந்த மொரகொட அந்தப் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக அமைச்சரவை அந்தஸ்துடன் மிலிந்த மொரகொடவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குறித்த பாராளுமன்றக் குழு கடந்த செப்ரெம் பரிலேயே அனுமதியை வழங்கி யிருந்தது. அதே வேளையில் அமைச்சரவை அந்தஸ் துடனான உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவை நியமிப்பதை இந்தியா நிராகரித்திருப்பதாக வெளியான செய்திகளை இந்தியா மறுத்திருந்தது. அதற்கான அங்கீகாரத்தை கடந்த நவம்பரிலேயே புதுடில்லி வழங்கியிருந்தது.
பெயர் குறிப்பிடப்பட்டு ஒரு வருடம் தாமதித்தே அந்தப் பதவியை மிலிந்த மொரகொட பொறுப்பேற்கப் போகின்றார். கொரோனாதான் இந்தத் தாமதத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.
கொழும்பின் உபாயம்?
புதிய திருப்பதை ஏற்படுத்துவாரா மிலிந்த?சீனாவிடம் என்னதான் உதவிகளைப் பெறக் கூடியதாக இருந்தாலும், இந்தியாவுடனான உறவுகளை சுமுகமாக வைத்திருக்கவில்லை என்றால், பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது கொழும்புக்குத் தெரியும். 1980 களிலிருந்தே இது குறித்த அனுபவம் இலங்கைக்கு இருக்கின்றது. அதேவேளையில், ஜெனிவா போன்ற சர்வதேச களங்களில் உருவாகும் நெருக்கடிகளின் போதும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குத் தேவையாக இருக்கின்றது. மேற்கு நாடுகளும் இலங்கை குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னதாக இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதில் அதிகளவுக்கு அக்கறை காட்டுகின்றன.
கொழும்பின் உபாயம் இந்தப் பின்னணியில் தான், சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற இந்தியாவுக்கு அதிருப்திளிக்கக் கூடிய செயற்பாடுகளை செய்துகொண்டிரு க்கும் அதேவேளையில், டில்லியைச் சமாதா னப்படுத்தும் இராஜதந்திர நகர்வுகளையும் கொழும்பு முடுக்கி விட்டுள்ளது.
புதுடில்லி செல்லும் மொரகொட வெறுங்கையுடன் செல்லவில்லை. இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பிப்பதற்கான திட்டம் ஒன்றுடன்தான் அவர் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றாரென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, இந்தியாவுடனான இலங்கையின் வர்த்தகம், முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், மத ரீதியான பரிமாற்றத் திட்டங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்ட திட்டம் ஒன்றுடன் மிலிந்த மொரகொட புதுடில்லி செல்லவிருக்கிறார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனிவா போன்ற சர்வதேச களங்களில் உருவாகும் நெருக்கடிகளின் போதும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குத் தேவையாக இருக்கின்றது.
இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்ட ஆவணத்தை மிலிந்த மொரகொட தலைமையிலான விஷேட குழு ஒன்று தயாரித்திருக்கின்றது. இந்தியா வுக்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகர் நிலுக்கா கடுறுகமுவ, புதுடில்லி, சென்னை, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள இலங்கைப் பிரதி உயர் ஸ்தானிகராலய இராஜதந்திரிகளைக் கொண்ட குழுவே இந்த திட்ட ஆவணத்தைத் தயாரித்திருக்கின்றது.