13 இன் எதிர்காலம் என்ன? | அகிலன்

13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம்அகிலன்

இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி பலமாக எழுப்பப்பட்டிருக்கின்றது.

13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தன. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்கு எதிரான பேரணி ஒன்றை யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்தியது.

இவ்வாறு 13 க்கு ஆதரவாகவும், எதிராகவும் கோசங்கள் தமிழர் தாயகத்தில் எழுப்பப்பட, புதிதாக வரப்போகும் அரசியலமைப்பில் 13 இல் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணாமலாக்கப்பட்டு விடலாம் என்ற தகவலும் இப்போது கசிந்திருக்கின்றது.

13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம்1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில், மாகாண சபைகளை உருவாக்குவதற்காக இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13 திருத்தம்தான் இன்று சர்ச்சைக்குள்ளாகி யிருக்கின்றது.

மாகாண சபைகள் முழுமையான தீர்வல்ல என்பது தமிழ்க் கட்சிகளின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்றபோதிலும், அரசியலமைப்பில் இருக்கக்கூடிய இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதன் மூலம், தமிழ் மக்களுடைய தற்போதைய இருப்புக்களையாவது பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் உருவானதுதான் இந்தியப் பிரதமர் மோடிக்கான கடிதம்.

13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம்இந்தக் கடிதம் தமிழ்க்கட்சிகளை இன்று இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ள கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி இதற்கு எதிரான நிலைப்பாட்டில் மக்களை அணிதிரட்டத் தொடங்கியுள்ளது.

ரெலோ முன்னெடுத்த இந்த நகர்வு, 13 என்பதை முன்னிலைப்படுத்தி, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட, இறுதியில் அதனையும் தாண்டி தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை என்பதை முன்னிலைப்படுத்தியதாகவே இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் இறுதி வடிவம் அமைந்திருந்தது.

இறுதியாக 7 தமிழ்க் கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதத்தின் உள்ளடக்கத்தில் 13 குறித்து எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. பதிலாக சுயநிர்ணய உரிமை உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாகவே அந்த கடிதம் அமைந்திருந்தது.

ஆனால், கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய போராட்டம் 13 இற்கு எதிரான ஒன்றாகவே இருந்தது. தமிழ் மக்களுடைய உரிமைகளை 13 இற்குள் புதைப்பதற்கு தமிழ்க் கட்சிகள் சில முயற்சிக்கின்றன என சவப்பெட்டியுடன் இந்தப் போராட்டம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

download 2 1 13 இன் எதிர்காலம் என்ன? | அகிலன்கஜேந்திரகுமார் அணியினரைப் பொறுத்தவரையில், அவர்களுடைய அரசியல் என்பது எப்போதுமே தமது கொள்கைகளின் அடிப்படையிலானதாக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியலைத்தான் அவர்கள் எப்போதும் முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த தேர்தல்களில் அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுக்கொடுத்ததில் பெரும்பங்கு வகித்தது கூட்டமைப்புக்கு எதிரான அல்லது அதிருப்தியாளர்களின் வாக்குகள்தான்.

இப்போதும் அதே பாணியில் அவர்கள் சவப்பெட்டியுடன் பேரணியை நடத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 இற்கு புதைகுழி தோண்டி தயாராக வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன்தான் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரசியலமைப்பை உருவாக்குவதற்காக குழு ஒன்றையும் அவர் அமைத்திருந்தார். அந்தக் குழு பலரிடமும் ஆலோசனைகளைக் கேட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான அந்தக் குழு தனது யோசனைகளை இப்போது பூர்த்தி செய்தி இறுதி அறிக்கையை அடுத்த சில தினங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவிருக்கிறது.

இந்த அறிக்கையின் உள்ளடக்கம் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் செய்தி ஒன்றை திவயின வெளியிட்டி ருக்கின்றது.

அதன்படி, புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் இருக்கப்போவதில்லை. இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது ராஜபக்சக்களுக்கு சிரமமானதாக இருக்கப்போவதில்லை.

அதேவேளையில், போரில் வென்றதைப்போல மாகாண சபைகளுக்கு சமாதி கட்டியதை தமது அடுத்த தேர்தல் வெற்றிக்கான முதலீடாக அவர்கள் பயன் படுத்தலாம். தென்னிலங்கை அரசியலில் நிலை இது.!

மாகாண சபைகள் தேவையில்லை என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிலைப்பாடாக பல சந்தர்ப்பங்களில் வெளிவந்திருக்கின்றது. இந்தியாவை அல்லது சர்வதேசத்தை சமாளிப்பதற்காக மாகாண சபைகளை புதிய அரசியலமைப்பில் வழங்க அவர் முன்வந்தாலும்கூட, முக்கியமான அதிகாரங்கள் அகற்றப்பட்ட ஒன்றாகத்தான் அது இருக்கும்.

13 ஆவது திருத்தத்தின் எதிர்காலம்இலங்கை – இந்திய உடன்படிக்கை ராஜிவ் காந்திக்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் கைச்சாத்தான போது பிரதமராக இருந்த பிரேமதாச அதனை கடுமையாக எதிர்த்தார். அந்த பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாசதான் இன்று எதிர்க்கட்சித் தலைவர். மாகாண சபைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு குறித்து அவர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார் என்பது எதிர்வுகூறக் கூடியதல்ல.

வடக்கு கிழக்கில் அரசியல் செய்பவர்கள் இதனைப் புரிந்துகொண்டுள்ளார்களா?

Tamil News