இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்படுத்துவதற்கான இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம். இதற்கு பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடல்சார் சட்ட விரோத நடவடிக்கைகளில் இந்து சமுத்திரம் பிரதான இடத்தை வகிப்பதாக தெரியவந்துள்ளது. ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவை இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினருடன் இணைந்து விசேட சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன இந்து சமுத்திரத்தில் நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நூற்றுக்கு 100 வீதம் வெற்றியளிக்காது. இதனை எம்மால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். அதற்கமைய இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பில் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.