‘நாங்கள் மிருகங்கள் அல்ல’: அகதிகளை அணுகும் முறையை அவுஸ்திரேலியா மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை 

தஞ்சக்கோரிக்கையாளர்களை அணுகும் முறையினை மாற்ற வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகள் அவுஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, நவுரு தீவுகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட அகதிகளின் அனுபவங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், நவுரு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய பெண் அகதியான சோன்யா அந்த அனுபவம் பயங்கரமானது என்கிறார்.

“நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ள வேண்டும் என முகாம் அதிகாரிகள் விரும்பினர். எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் மிருகங்கள் அல்ல, மனிதர்கள்,” என சோன்யா கூறியிருக்கிறார்.

மேலும், “நாங்கள் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் என்பதால் குடிவரவு அதிகாரிகள் நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கே திரும்பிச் செல்ல சொன்னார்கள்,” என சோன்யா குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றின் கறுப்பு பக்கங்களை அகதிகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது எனக் கூறுகிறார் வழக்கறிஞர் ஜெனிபர் கனிஸ்.

“உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை, இனவாதம், பாகுபாடு, தன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட தடுப்பு முகாம் வாழ்க்கையின் பயங்கரத்தை அகதிகளின் வாக்குமூலங்கள் எடுத்துக் காட்டுகிறது,” என வழக்கறிஞர் ஜெனிபர் கூறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக தங்குவதற்கான உரிமை வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதே சமயம், முந்தைய அரசாங்கத்தின் இணைப்பு விசாக்கள் அல்லது காலாவதியான விசாக்கள் தொடர்பான அதிவேக பரிசீலனையில் நிராகரிக்கப்பட்ட 12 ஆயிரம் அகதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளும் இந்த நிராகரிப்பு பட்டியலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply