ஏமாற்றும் தரப்புடன் தேங்கிவிடாது நாம் முன்னோக்கி நகர வேண்டும்- ஆய்வாளர் அருஸ்

WhatsApp Image 2023 04 05 at 9.30.21 PM ஏமாற்றும் தரப்புடன் தேங்கிவிடாது நாம் முன்னோக்கி நகர வேண்டும்- ஆய்வாளர் அருஸ்

ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்பதை மக்களுக்கு சொல்வதல்ல ஆசிரியர் தலையங்கம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்வதே நல்ல ஆசிரியர் தலையங்கம் இது 20 ஆவது நூற்றாண்டிள் ஊடக ஆசான் என போற்றப்படும் ஆர்தர் பிரிஸ்பன் கூறிய கருத்து.

அவரின் கருத்தை பிரதிபலிப்பதாகவே அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் வெளியீட்டு பிரிவினால் வார மலராக வெளியிடப்படும் இலக்கு மின்னிதழின் ஆசிரியர் தலையங்கங்கள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.

உலகின் இயக்கமும் மக்களின் நடவடிக்கைகளும் கால மாற்றத்துடன் மாறியே வருகின்றன. கடந்த 10 வருடங்களுக்கு முன்னைய நிலை இன்று இல்லை, கடந்த 10 வருடத்திற்கு முன்னர் இருந்த நிலை அதற்கு முன்னைய 10 வருடங்களில் இருந்ததில்லை.

இதனை தான் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் பற்றிக் றெய்டர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நவீன தாக்குதல் விமானங்களான எப்-15, 22 மற்றும் 35 ரக விமானங்களை ஆசிய பசுபிக் மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்திற்கு மாற்றுவதும், அதற்கு மாற்றீடாக பழைய ஏ-10 விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்துவதும், உலகின் மாற்றத்திற்கு ஏற்ப அமெரிக்காவின் மாற்றம் என தெரிவித்துள்ளார்.

உலக நகர்வுகளை கண்காணித்து அதனை எதிர்கொள்ளும் முகமாக தமது அரசுகளையும் மக்களையும் அதற்கு ஏற்ப தயார் படுத்துவது ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும் சிந்தனைபள்ளிகளின் பணியாக இருக்கும் போதும், அதனை மக்களிடம் கொண்டு செல்வதுடன், அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவதிலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.

ஒவ்வொரு நாடும் தனது பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை சரியாக அறிந்து அதற்கு ஏற்ப தனது கொள்கைகளை வகுப்பதால் தான் தமது இறைமையையும், மக்களின் பாதுகப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன.

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை இன்று அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து தனக்கான நிதியை பெற்றுக்கொண்டுள்ளது. அதற்காக அவர்கள் மேற்குலகத்தையும், சீனாவையும், இந்தியாவையும் தமது இராஜதந்திரத்தால் ஒரு அணியில் கொண்டுவந்துள்ளனர்.

அனைத்துலக நாணய நிதியம் 15 அம்ச நிபந்தனைகளை முன்வைத்த போதும் அதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பான எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கான நிபந்தனையாக தமிழ் இனத்தின் அரசியல் மற்றும் இறைமை தொடர்பில் அனைத்துலக நாணய நிதியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தளத்திலும் புலத்திலும் வைக்கப்பட்ட போதும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த 14 வருடங்களாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு பல தீர்மானங்களை கொண்டுவந்தபோதும் அதனை அவர்கள் நிறைவேற்றுவதில் அக்கறை காண்பிக்கவில்லை என்பது தான் யதார்த்தம்.

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் படுகொலை ஒன்று நிகழ்ந்தது தமிழீழத்தில் தான் அங்கு 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக பான் கீ மூன் அமைத்த தருஸ்மர் தலமையிலான ஆணைக்குழு தெரிவித்தது. ஆனால் இன்றுவரை அது தொடர்பில் ஐ.நாவோ இல்லை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றமோ நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை எனவே நடவடிக்கை தாமதிக்கலாம் என நாம் நம்பவைக்கப்படலாம் ஆனால் உண்மை அதுவல்ல.

ஏனெனில் கடந்த ஆண்டு ஆரம்பமாகிய உக்ரைன் போரில் 10,000 இற்கும் குறைவான மக்களே கொல்லப்பட்டதாக ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விரைந்து செயல்பட்டு ரஸ்ய அதிபர் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

ஆனால் ரஸ்யாவும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடு இல்லை என்பது தான் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது. ரஸ்ய அதிபர் தனது நாடுக்கு வந்தால் உடனடியாக கைது செய்யபோவதாக தெரிவித்துள்ளது ஜேர்மனி ஆனால் இலங்கையில் குற்றமிழைத்தவர்களை கண்டும் காணாமலும் விட்டுள்ளது அது.

இதன் மூலம் என்ன தெரிகின்றது? கடந்த 14 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தான் உண்மை. ஏமாற்றுவது அவர்களின் வழக்கம் ஆனால் அதனை நம்பியதும், எமது மக்களை நம்பவைத்ததும் எமது குற்றம்.

ஒரு முனைவாக்கம் கொண்ட உலக ஒழுங்கில் நாம் நம்பிய தரப்பு போலியானது என்பதை 14 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் எமக்கு சொல்லியே சென்றுள்ளன. ஆனால் இன்று அந்த ஒழுங்கு சிதறிவருகின்றது.

பல் முனைவாக்கம் கொண்ட ஒரு உலகம் தோற்றம் பெறுகின்றது. இந்த மாற்றத்தை தான் கடந்த 100 வருடங்களில் காணவில்லை என்கிறார் சீனா அதிபர். இந்த ஒழுங்கு நிரந்தரமானது என்பதுடன் அதற்காக இணைந்து பணியாற்றபோவதாக தெரிவித்துள்ளது சீனாவும், ரஸ்யாவும்.

அது மட்டுமல்லாது உலகில் சமாதானத்தை ஏற்படுத்த இணைந்து செயற்படப்போவதாகவும் தெரிவித்துள்ளன இரு நாடுகளும், தமது சொற்களை செயலிலும் காண்பித்துள்ளனர் அவர்கள்.

பரம எதிரிகளாக இருந்த சவுதி அரேபியாவும் ஈரானும் கூட்டு சேர்ந்துள்ளன. தற்போது சவுதியும் சிரியாவும் கூட்டுச்சேரும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் பின்னனியில் நிற்கின்றனது சீனா. அரபு நாடுகளை அவர்கள் ஒருங்கிணைக்க, ஆபிரிக்க நாடுகளை ரஸ்யா ஒருங்கிணைக்கின்றது.

அமெரிக்காவின் ஆருயிர் நண்பனாக இருந்த சவுதி காலத்தின் தேவை மற்றும் உலகில் எற்படும் மாற்றங்களை உணர்ந்து தனது மக்களின் நலன் கருதி இடமாறி வருகின்றது. இதனை தான் அமெரிக்க ஜெனரலின் கருத்தும் பிரதிபலிக்கின்றது.

பூகோள அரசியல் வியூகங்களில் ஒரு நாட்டை தம்வசப்படுத்த முடியவில்லை எனில் அந்த நாட்டில் உள்ள இறைமையுள்ள இனங்களின் இறைமையை கையில் எடுப்பதும் அதனை அங்கீகரிப்பதும் தான் உலக வரலாற்றில் நாம் கண்டது.

பங்களாதேசத்தில் இந்தியா செய்ததும், ரஸ்யாவுக்கு சார்பான யூகோஸ்லாவாக்கியா என்ற பெரும் தேசத்தில் வாழ்ந்த பல இனங்களின் இறைமைய கையில் எடுத்து பல நாடுகளை உருவாக்கிய மேற்குலகத்தின் செயற்பாடுகளும்,

தற்போது உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் வாழும் மக்களின் இறைமையை பாதுகாக்க ரஸ்யா களமிறங்கியதும் அதன் வெளிப்பாடுகள் தான்.

அதாவது ஒரு இனத்தின் இறைமைய அந்த இனம் உலகில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும், அதற்கான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளாமல் இருப்பதும் தான் எமக்கான கதவுகளை திறக்கும். எமது இறுதி இலக்கு தொடர்பில் நாம் உறுதியாக இருப்போமானால் நாம் எந்த தீர்வு தொடர்பிலும் யாருடனும் பேசலாம், அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் தொடர்பில் பரிசீலிக்கலாம்.

ஆனால் அதனை எமக்கு சாதகமாக மாற்றவேண்டுமெனில் தற்கால உலக ஒழுங்கை புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஏமாற்றப்படுவது எமக்கு புரிய வேண்டும். தொடர்ந்து ஏமாறுவதை நாம் தவிர்க்க வேண்டும்.

எம்மை பொறுத்த வரையில் இந்த உலகில் யாரும் எதிரிகள் இல்லை. எல்லா நாடுகளும் எமக்கு எதிராக செயற்பட்டவர்களே. சிலர் நேரிடையாக எம்மை அழித்தனர், சிலர் மறைமுகமாக எம்மை அழித்தனர் அவ்வளவு தான். சிலர் நம்பவைத்து ஏமாற்றினார்கள், சிலர் ஆரம்பம் முதலே எம்மை அணுகவில்லை அது தான் வேறுபாடு.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானம் முன்வைக்கப்படும் போது சிலர் தமது நாட்டு நலனுக்கான அந்த தீர்மானத்தை முன்வைக்கிறனர், சிலர் அதனை தமது நாட்டின் நலனக்காக எதிர்க்கின்றனர், சிலர் தமது நாட்டின் நலனுக்காக நடுநிலைமை வகிப்பதாக கூறுகின்றனர்.

ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணா கூறியது தான் இப்போது நினைவில் வருகின்றது. அதாவது உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது இல்லை என்பது தான் அதன் பொருள். அதாவது இங்கு எல்லோரும் தமது நலன்களை முன்நிறுத்தி எம்மை பயன்படுத்தி வருகிறார்களே தவிர யாரும் எமக்காக இல்லை என்பது தான் வருத்தம்.

அதனை நாம் புரிந்துகொண்டால் எமக்கான அடுத்த வழி பிறக்கும். அனைத்துலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை புரிந்தவர்களாக நாம் எமது விடுதலைப் பயணத்தை நகர்த்த வேண்டும்.

ஏமாற்றும் தரப்புடன் தேங்கிவிடாது உலகில் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்கும் நாடுகளை இனம் காண்பது அல்லது அதற்கான புறச்சூழல்களை உருவாக்குவது என்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்மெனில் தமிழ் மக்களிடம் தெளிவான கருத்துக்களை கொண்டு செல்லக் கூடிய அவர்களின் இலட்சியத்திற்கு துணைநிற்கும் ஊடகம் தேவை.

தமிழ் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும், சமூகத்தையும் ஆற்றல்படுத்தி, ஆற்றுப்படுத்தும் ஊடகமாக இலக்கு ஊடகத்தை வளர்த்தெடுப்பதில் அதில் வெளிவரும் ஆசிரியர் தலையங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே தான் எமது இனத்தின் சிந்தனை பள்ளியின் ஒரு அங்கமாக அதனை நாம் பார்ப்பதுடன், இன்று நூலாகவும் வெளியிட்டுள்ளோம்.

சர்வதேச மற்றும் தாயக அரசியலை இணைத்து பயணிக்க வேண்டியது இன்று எமது தேவையாகின்றது. உலகமயமாக்கல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும் எமக்குள்ளது. அதற்கு இலக்கு ஊடகம் வலுச்சேர்க்கும் என்பது எமது நம்பிக்கை அந்த நம்பிக்கையை பலப்படுத்த வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது. அதனை தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.

பிரித்தானியாவில் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் இலக்கின் இலக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் போரியல் ஆய்வாளர் அருஸ் ஆற்றிய உரை.