ஈழத்திலே அரங்கேறிய இனப்படுகொலைக்கு ஓர் சர்வதேச விசாரணை வாயிலாகப் பொறுப்புக் கூறல் மேற்கொள்ளப்படாதவிடத்து, மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்யும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு மனித உரிமைகள் நாள் இம்மாதம் 10ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கின்ற நிலையில், இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பாக இலக்கு ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையில் மனித உரிமைகள் என்பது வெறும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் மாத்திரமே, இருக்கிறதே தவிர, நடைமுறையில் மக்கள் அனுபவிக்கக் கூடியதாக இல்லை என்பது வெளிப்படை உண்மை.
அதிலும் குறிப்பாக, தமிழ் தேசிய இனம் திட்டமிட்ட வகையில் மனித உரிமைகள் ரீதியாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும், முடக்கப்பட்டும் வருவது கடந்தகாலம் சொல்லித் தந்த பாடம், நிகழ் காலத்திலும் அதுதான் தொடர்கின்றது.
அதிலும், வேதனையான விடயம் என்னவென்றால், கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. பேச்சுரிமை தடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய கருத்துக்களை, கொள்கைகளை, முன்னெடுப்பதற்கான உரிமை வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் மிக அண்மையில் மிக வேதனையான விடயம். உலக நெறிமுறைகளுக்கு மாறாக, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, சர்வதேச மனிதாபிமானமற்ற, மனித உரிமை பட்டயங்களுக்கு முரணாக, இறந்த உறவுகளை நினைவு கூருகின்ற தமிழ் மக்களினுடைய அடிப்படை உரிமை, இன்றியமையாத உரிமை, மறுக்கப்பட்டிருக்கின்றது.
அதிலும், சில இடங்களில் நீதிமன்றங்கள், நினைவேந்தலுக்கு தடை விதிக்காத சூழலில் கூட காவல்துறையினரும், இராணுவத்தினரும், நினைவேந்தலைத் தடுத்தமை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு, தனது நாட்டின் நீதித்துறையை தாங்களே மதிக்கப் போவதில்லை என்பதை அதே நாட்டின் அரசும், பொலிசாரும் வெளிப்படையாக வெளிப்படுத்தி நிற்கின்றார்கள். இது கவலையான விடயம் மாத்திரம் அல்ல. ஒரு அபாய சமிக்ஞை ஆகும்.
ஏனென்றால், ஒரு நாட்டினுடைய இராணுவம் அல்லது காவல்துறை அந்த நாட்டினுடைய நீதித்துறையினுடைய, தீர்ப்புக்களையும், கட்டளைகளையும், உத்தரவுகளையும் செவிமடுக்கத் தவறுவார்களேயானால், அந்த நாட்டில் எவ்வாறு எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ முடியும் என்கின்ற ஒரு பாரிய வினா எழுந்திருப்பது தவிர்க்க முடியாததாகிறது.