எமது உறவுகளுடன் வாழத்துடிக்கும் எமக்கான நீதியை நாம் இறப்பதற்கு முன் பெற வழி செய்யுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
வவுனியாவில் இன்று போராட்டம் மேற்கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசின் படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் தொடர் போராட்டம் இன்று 1750 வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று சர்வதேச மனித உரிமைகள் நாள் நாம் எமக்கான உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட நிலையிலும், எம் உரிமைகனைப் பற்றி பேசுவதே குற்றம் என்ற நிலையிலும், எமது போராட்டத்தை தொடர்வதற்காகவே போராட வேண்டிய சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1948ம்ஆண்டு ஐ.நா பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட இத்தினமானது பல்வேறுபட்ட உரிமைகளை மனித உரிமைகளாக வரையறுத்து கூறியிருந்தாலும் அவற்றுள் வாழ்வதற்கான உரிமையும், சுயகௌரவத்துடனும், பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதையும் முக்கியமானதாக கொள்ளலாம்.
இலகையிலே தமிழர்கள் மேற்கூறப்பட்ட இரண்டு உரிமைகளும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். பிச்சையாக எதைப் போட்டாலும் பெரிய மனசுடன் ஏற்றுக் கொள்ளும் சுயமரியாதை அற்ற குணமும், கூப்பிட்டால் அற்ப சலுகைகளுக்காக விழக்கூடிய குணமும் கொண்ட தமிழர்களால் மட்டுமே பயமின்றி உயிர்வாழ முடியும்.
எங்கள் உறவுகள் சுய கௌரவத்துடன் வாழும் உரிமைக்கு ஆசைப்பட்ட குற்றத்திற்காக, வஞ்சகமாகச் சரணடையச் செய்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். சம உரிமையுடன் நடாத்தப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டதற்காகக் கடத்திச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். பெற்றோர் சரண்டையும் போது கூட்டிச் சென்ற ஒன்றுமறியாத 20 இற்கு மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள் அவர்கள் யாருக்கு என்ன செய்தார்கள். மழலைகளின் வாழும் உரிமை கனவுகள் மறுக்கப்பட்டு அவர்களையும் வலிந்து காணாமல் ஆக்கியமையை மனித உரிமை மீறல் என்ற சொற்களில் மட்டும் அடக்கி விட முடியுமா?”
இவர்கள் அனைவருக்கும் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அந்த உறவுகளைத் தேடியலையும் எங்களுக்கு எங்கள் கணவனுடனும் பெற்ற பிள்ளைகளுடனும் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நீதியினை இறப்பதற்கு முன் வழங்குங்கள்.
மேற்படி உரிமைகளுக்காகப் போராடிய எங்களில் 108 பெற்றோர்கள் எங்களின் குழந்தைகளின் நிலையறியாமலே மரணித்து விட்டார்கள்.
மீதம் இருக்கும் நாம் எங்களின் நிலையை அறிய போராடுவதோடு இறந்தவர்களின் குழந்தைகளிற்காகவும் சேர்த்துப் போராடுகின்றோம். அதுமட்டுமல்ல இந்தத் தொடர் போராட்டத்தை தொடர்வதற்கே நாம் பலமாகப் போராட வேண்டியுள்ளது.
அரச புலனாய்வாளர்களதும், படையினரதும் அச்சுறுத்தல், அரச அடிவருடிகள் எம்மை திசை திருப்பும், பீதியடையச் செய்யும், குழப்பும் செயற்பாடுகள் என்று பல எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது
எமது உறவுகளை திருப்பித் தருவதாகக் கூறி கையளிக்கச் செய்து சரண்டையச்செய்து, வலிந்து காணாமல் ஆக்கிய இந்த அரசானது, நாங்கள் நீதிக்காகப் போராடும் போது “புலிகள் மீளுருவாக்கம், நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்தல், சுகாதாரக் கட்டுப்பாடுகள்” என்று நாளுக்கொரு காரணம் கூறி அப்பாவிகளான எங்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவுகளை வழங்கி எம்மை முடக்கப் பார்க்கின்றது. இன்னும் எம்மை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு விசாரணைக்கு அழைப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த முயல்கின்றது.
எமது அடிப்படையுரிமைகள் அனைத்தையும் மறுத்து அடக்கி ஒடுக்க நினைக்கும் ஒரு அரசு, எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை தான் கொடுப்பதாக சர்வதேசத்திற்குத் தெரிவிக்கின்றது. ஆனால் இலங்கையில் நடப்பது என்னவென்று சரவதேசம் அறியுமா?ஒரே குற்றத்திற்கு தமிழருக்கு ஒரு தண்டனை. சிங்களவருக்கு ஒரு தண்டனை. விடுதலைப்புலிகளுக்கு உணவளித்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைவாசம். சிறு குழந்தை உள்ளிட்ட எட்டுப் பேரை வெட்டிக் கொலை செய்தவருக்கு மரணதண்டனையிலிருந்து பொது மன்னிப்பில் உடனடி விடுதலையும் பதவியுயர்வுடன் மீள வேலையும், நாம் வாழும் நாட்டில் மனித உரிமை எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க இது போன்ற எவ்வளவோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.
ஆணையாளர் அவர்களே எமது உறவுகளுடன் உறவுகளைத் தேடும் உரிமைக்காகவே போராட வேண்டிய நிலையிலுள்ள வயோதிபத் தாய்மாராகிய நாங்கள் மிகவும் மன்றாட்டத்துடன் கேட்பது யாதெனில், எமது உறவுகளுடன் வாழத்துடிக்கும் எமக்கான நீதியை விரைவில் அதாவது நாம் இறப்பதற்கு முன் பெற வழி செய்யுங்கள், அதுவரை எமது போராட்டம் தொடரும். அப்படித் தொடரும் போராட்டத்தை முடக்கும் அச்சுறுத்தல்கள், அதாவது தடையுத்தரவு, உயிர் அச்சுறுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை எம் மீது பிரயோகித்தல் ஆகியவற்றிலிருந்து எமக்குப் பாதுகாப்பளியுங்கள்” என்றுள்ளது