உக்ரைன் போரும் உலகில் அதன் தாக்கமும் தமிழில்: ஜெயந்திரன்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள முழு அளவிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கும் மில்லியன் கணக்கிலான மக்களின் இடப்பெயர்வுக்கும் எண்ண முடியாத அளவுக்கு வீடுகள், பொது மக்களின் கட்டடங்கள், உட்கட்டுமானங்கள் போன்றவற்றின் அழிவுக்கும் இந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருக்கிறது.

உலகில் அறநெறி ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் என்ன நிலையில் ரஷ்யா தற்போது இருக்கின்றது என்பதையும் இது கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஏனென்றால் இந்தப் போருக்கு போதிய தயார் நிலையில் ரஷ்ய இராணுவம் இருக்கவில்லை என்பதையும் அதே நேரம் ரஷ்யாவின் பொருளாதாரப்பலம் எவ்வாறு மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இந்நிகழ்வுகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன.

அதுமட்டுமன்றி, உலகின் ஏனைய பாகங்களுக்கும் இந்தப் போர் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. உலகின் சக்திச் சந்தையை இப்போர் ஓர் உறுதியற்ற நிலைக்குத் தள்ளியது மட்டுமன்றி, பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து, உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விநியோகத்தை சீர்குலைத்தது, இன்றைய உலகப்போக்கின் கவலைக்குரிய நிலையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது.

அணுவாயுதங்களின் உற்பத்தி அதிகரிப்பு ஊடாக ஆயுதப் போட்டி மேலும் அதிகரித்திருக்கிறது, ஐக்கிய நாடுகளின் செயற்பாடு முடக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பன்னாட்டுச் சட்டத்தின் முக்கியத்துவம் கேள்விக்குட்படுத்தப்பட்டு பல்தரப்பு ஒத்துழைப்பு, மனிதாய உதவி போன்ற விடயங்களும் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உண்மையாகப் பார்க்கப்போனால் இப்போர் ஒரு முட்டாள்தனமான போர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். 2014ம் ஆண்டில் கிறைமிய தீபகற்பத்தை வலிந்து தமது நாட்டுடன் இணைத்து, டொன்பாஸ் பிரதேசத்தில் ஒரு முரண்பாட்டைத் தோற்றுவித்ததுடன் ரஷ்யா யுக்ரேன் நாட்டில் மூக்கை நுழைக்கத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில், ஒரு இராஜீக தீர்வை அடைந்துகொள்ள ஐரோப்பிய சக்திகள் தவறியதும், கிழக்கை நோக்கி நேட்டோவை விரிவுபடுத்த அமெரிக்கா மேற்கொண்ட முனைப்புகளுமே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இவ்வாறான மிகவும் பழமையான வழிமுறைக்கு அதாவது போருக்கு இட்டுச்சென்றிருக்கிறது.

தமக்கும் உக்ரைனுக்கும் இடையே இருக்கின்ற பரஸ்பர இணைப்பு, வரலாறு, பண்பாடு போன்றவை தொடர்பாகத் தம்பட்டம் அடித்து வந்த ரஷ்யா, இவ்வாறு தான் மிகவும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும் அந்த நாட்டை ஆக்கிரமித்து அதன் மீது குண்டுகளை வீசித் தாக்குதலைத் தொடுக்க எடுத்த முடிவு என்பது அந்த நாட்டின் மீது அது கொண்டிருந்த காதலின் காரணமாக அல்ல மாறாக அழிவை நேசிக்கும் அதன் பாங்கையே வெளிப்படுத்துகின்றது.

இந்தப் போரின் காரணமாக உலகப் பாதுகாப்பு என்பது முன்னரைவிட அதிகமாகக் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. ’போர் தான் உகந்த தீர்வு’ என்ற அடிப்படையில் இதற்கு முதல் முன்னெடுக்கப்பட்ட போர்களைப் போல, பன்னாட்டு ஒழுங்கமைப்பின் வரையறைகளையும் ஒட்டுமொத்தத் தோல்வியையும் இது மீண்டும் ஒரு தடவை நினைவூட்டியிருக்கிறது.

இரு துருவ, தனித்துருவ, பல் துருவ உலக ஒழுங்குகள் எதனை நிரூபித்திருக்கின்றன என்றால், பூகோள ரீதியிலான முரண்பாடுகள் ஏற்படும் போது, உலக வல்லாதிக்க சக்திகளைப் பொறுத்தவரையில், பன்னாட்டுச் சட்டமோ அன்றேல் பன்னாட்டு உடன்படிக்கைகளோ எந்தவித நம்பிக்கையையும் அளிப்பதில்லை என்பதாகும். சக்தியற்றவர்கள் துப்பாக்கி முனையில் இவற்றுக்குக் கட்டுப்பட வைக்கப்படுகிறார்கள் அதே நேரம் பலமானவர்களோ வேண்டுமென்றே அவற்றை மீறுகின்றார்கள்.

வலிமையற்றவர்களுக்கு முன்னே வலிமையானவர்களுக்கு அனுகூலமான மோசடித் தன்மை வாய்ந்த உலகளாவிய ஒழுங்கமைப்பாக இது இருப்பதையே அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. எதிர்காலத்தைப் பொறுத்த வரையில் ஏற்கனவே இருப்பதை விட இன்னும் அதிகமான நாடுகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணுவாயுதங்களின் உதவியை நாடப்போகின்றன என்பதையே இது எதிர்வுகூறுகின்றது.

புடாபெஸ்ற் குறிப்பாணையின் கீழ் அமெரிக்க, ரஷ்ய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டுப் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தொடர்ந்து சோவியத் காலத்து அணுவாயுதங்களைக் களைவதற்குஉக்ரைன் எடுத்த முடிவு அதன் அனுபவமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது என்றே இன்று பலரும் கருதுகின்றார்கள்.

பாகிஸ்தான், இந்தியா, வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைப் பின்தொடர்ந்து, ஈரான், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும் அணுவாயுதங்களை அதகரிப்பதில்லை என்ற கொள்கைகளை மதிக்காது, அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கப்போகின்றன.

அணுசக்திப் போருக்கு ரஷ்யா விடுத்திருக்கும் அழைப்பு, காலாவதியாகிவிட்ட அணுவாயுத ஒப்பந்தங்கள், ஐந்து நேட்டோ நாடுகளில் உள்ள அணுவாயுதங்களை நவீனமயப்படுத்த அமெரிக்கா இரகசியமாக எடுத்துவருகின்ற முயற்சிகள் போன்ற விடயங்கள் பன்னாட்டுப் பாதுகாப்பை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.

மேற்குலகமும் ஓர் ஆயுதப்போட்டிக்குள் தற்போது இறங்கியிருக்கிறது. ”ஆயுதங்கள் உண்மையில் அமைதிக்கான பாதை” என்று ஓர்வேலியன் பாணியில் நேட்டோவின் செயலாளர் நாயகமான ஜென்ஸ் ஸ்ரோல்ற்றன்பேர்க் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

பெரியதும் சிறியதுமான ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது தோற்கடிக்கப்பட்ட பின் இதுவரை இந்த ஆயுதப் போட்டிக்கு வெளியில் நின்ற ஜேர்மனி கூட இந்த ஆயுதப் போட்டிக்குள் குதித்திருக்கிறது. 113 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பாதுகாப்பு நிதியை ஒதுக்குவதாக ஜேர்மனி கடந்த ஆண்டு அறிவிப்பை மேற்கொண்டது.

ரஷ்யாவும் அண்ணளவாக 84 பில்லியன் டொலர்கள் பாதீட்டைத் திட்டமிட்டிருக்கிறது. 2021ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பாதீட்டுடன் ஒப்பிடும் போது, இது 40 வீதம் உயர்வானதாகும். அதே வேளையில் இந்தத் தொகை 2023ம் ஆண்டுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ள பாதீட்டின் 10 வீதம் மட்டுமே என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஐரோப்பாக் கண்டத்தில் நடந்தேறும் நிகழ்வுகளால் ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாகவும் மேற்கில் இருந்து வருகின்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தின் காரணமாகவும் தனது இராணுவச் செலவை அதிகரிப்பதன் மூலம் சீனாவும் இந்த ஆயுதப் போட்டிக்குள் கால்பதித்திருக்கிறது.

வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகையைப் பாதுகாப்புக்காகச் சீனா ஒதுக்கியது இதுவே முதற்தடவையாகும். சீனாவின் இந்தச் செயற்பாடு தொடர்பாக அதன் அயல்நாடுகளும் தமது பாதுகாப்புச் செலவினத்தை அதிகரித்திருக்கின்றன.

முன்னெப்போதும்  இல்லாத வகையில் தற்போது போருக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களின் சொந்தக்காரரின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டிருக்கிறது. 2014ம் ஆண்டிலிருந்து, உலகின் மொத்த ஆயுத உற்பத்தி ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக அதிகரித்து ஈற்றில் 2021ம் ஆண்டில் 2.1 ட்ரில்லியன் டொலர்கள் என்று அதி உச்சத் தொகையை எட்டியிருக்கிறது.

ஆயுதங்களுக்காக உலகில் மிக அதிகமான தொகையைச் செலவிடும் நாடுகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளுமே திகழ்கின்றன. இந்த ஐந்து நாடுகளும் உலகின் மொத்தப் பாதுகாப்புச் செலவினத்தின் 62 வீதத்தைக் கொண்டிருக்கின்றன.

இராணுவ ரீதியிலான செலவினம் அதிகரிக்கும் போது, பொதுமக்களுக்கான ஏனைய சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறையும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. முக்கியமாக சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதார சேவை போன்றவைகளுக்குச் செலவிடப்படும் நிதியில் தாக்கம் ஏற்படுகிறது. இவ்வாறான நிதிக்குறைப்புகள் பொதுமக்களின் நலனில் நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உலகளாவிய வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் போர்வெறி, சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்த மூனிக் பாதுகாப்பு மகாநாட்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. ரஷ்யா தொடர்பாக மேற்குலம் இழைத்த தவறை சீனாவுடனும் இழைப்பது தொடர்பாக எச்சரிக்கையை ஸ்ரோல்ற்றன்பேர்க் வெளியிட்ட அதே வேளை, மேற்குலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டு மண்பத்தை ஒரு போர் மண்டபமாக மாற்றி, போரை மேற்கொள்வதில் தமக்கிருக்கும் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள். இங்கு இராஜீக அணுகுமுறைகள் தோற்றுவிட்டதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது.

ஏற்கனவே குழப்பம் மிகுந்ததாகவும் உறுதியில்லாமலும் இருக்கும் பன்னாட்டு ஒழுங்கமைப்புக்கும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நிலவும் எந்தவேளையிலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய  அக்கண்டங்களின் பாதுகாப்புக்கும் இது நல்ல செய்தியாக இருக்காது. போரில் ஈடுபடும் போது, அது மேலும் மேலும் போரையே கொண்டு வரும். இவ்வாறான ஒரு சூழலில் மொழி, கலாச்சாரம், பன்னாட்டு உறவுகள் என அனைத்துமே பாதிக்கப்பட்டு, இந்தப் பைத்தியக்காரச் சக்கரத்தை மீள உறுதிப்படுத்துகின்றது. ”கடைசி வரை நாங்கள் போராடுவோம்” ”அது எவ்வளவு காலமானாலும்” ”இதற்கான எந்தத் தெரிவையும் மேற்கொள்ள நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்” போன்றவை மேற்குலக பாதுகாப்பு நிறுவனங்களின் மந்திரங்களாக இப்போது மாறிவிட்டன. இவற்றின் விளைவுகள் தொடர்பாக இந்த நிறுவனங்கள் அலட்டிக்கொள்வதில்லை.

தனது உதாரணத்தின் மூலம் அதாவது தனது அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா முன்னெடுக்கும் தலைமைத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தப் பைத்தியக்காரத்தன்மை வெளிப்படுத்துகின்றது. 2008ம் ஆண்டிலிருந்து நேட்டோக் கூட்டுறவை ரஷ்யாவின் எல்லைவரை விரிவுபடுத்தும் அதன் வலியுறுத்தல்களும் அந்தப் பிரதேசத்தில் சனநாயகக் கோட்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அதன் முனைப்புகளையும்  சாட்டாக வைத்துத்தான் ரஷ்ய ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அதுபோலவே, அதன் இராணுவ முன்னெடுப்புகள், குறிப்பாக ஒரு பொய்யான எடுகோளின் அடிப்படையில் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை உலகம் முழுவதையும் ஓர் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளியது. ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்கா உலகின் மிக வறிய நாடுகளுக்கும் உலகின் மிக மோசமான அரசுகளுக்கும் முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது. அது மட்டுமன்றி, மத்திய கிழக்கில் மனித உரிமைகளை மிகவும் மோசமாக மீறுபவர்களுடன் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன் சமகாலத்தில் வெளிவேடத்தனமாக உலகளாவிய வகையில் சனநாயத்தையும் மனித உரிமைகளையும் பேணும் பயணத்துக்கும் தலைமை தாங்குகிறது.

ஈராக்கின் மீதான தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, உக்ரைனின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் அமெரிக்காவின் செயற்பாடு உலகின் பெரும் பகுதிக்கு அர்த்தமற்றதாகத் தெரிவது ஆச்சரியமான ஒரு விடயமல்ல. அதே போலவே, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் சிரிய நாட்டின் பிரதேசங்களை தமது நாட்டுடன் இணைக்கும் இஸ்ரேலின் செயற்பாடுகளை அங்கீகரிக்கும் அமெரிக்கா, ரஷ்யா உக்ரைனின் பிரதேசங்களை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியைக் கண்டிப்பதை அர்த்தமற்றதாகவே நோக்குகின்றது.

உலக வல்லாதிக்க சக்திகளின் வெளிவேடத்தன்மை உலகளாவிய சுகாதார மற்றும் மனிதாயப் பிரச்சினைகளை உலகம் எதிர்கொள்ளும் போது, நிலவும் பல்தரப்புத் தன்மையையும் ஒத்துழைப்பையும் கேள்விக்குறிக்குள்ளாக்குவதோடு இந்தச் செயற்பாட்டின் மூலம் உலகின் பல நாடுகளை தம்மிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது.

தென் பூகோளத்தில் உள்ள நாடுகள் தமது சொந்த நலன்களை நிறைவு செய்வதிலேயே முனைப்புக் காட்டுகின்றன என்பது மட்டுமன்றி அமெரிக்காவின் அழுத்தங்கள் இருக்கின்ற போதிலும் யுக்ரேனில் ரஷ்யா தொடுத்த போர் தொடர்பாக நடுநிலைமையையே அவை பேணிவருகின்றன என்பது ஒன்றும் புதுமையான விடயமல்ல. உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட ஆக்கிரமிப்பை மேற்கு நாடுகளுடன் சேர்ந்து சில நாடுகள் கண்டித்திருக்கும் அதே வேளை பல நாடுகள் கீவுக்கு தமது உதவிக்கரத்தை நீட்டவில்லை. அதேவேளை அந்ந நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் உறவைப் பேணிவந்ததுடன் அதனைப் பலப்படுத்தியும் இருக்கின்றன.

மேற்குலகச் சுற்றுவட்டத்துக்கு அப்பாலுள்ள தலைவர்கள் குறிப்பிட்ட ஒரு சாராரில் மட்டும் தங்கியிருக்காமல் வோஷிங்டன், மொஸ்கோ, பேஜிங் ஆகியவற்றுடன் சமநேரத்தில் உறவைப் பேணும் கலப்பு அணுகுமுறையைக் கையாள்கின்றன. அதே வேளை சர்வாதிகார அரசுகளோ, உலக வல்லாதிக்கச் சக்திகளின் தவறான நடத்தைகளினால் ஊக்கம் பெற்று பொது நலனையோ, அல்லது அறநெறிகளையோ அல்லது பொது அல்லது உலகளாவிய நலன்களையோ முன்னிலைப்படுத்தாது தமது மிக குறுகிய நலன்களைப் பேணுவதில் மட்டும் முனைப்புக் காட்டிவருகின்றன.

மனித நாகரிகம் என்ற வகையில் முன்னரை விட ஆரோக்கியமாகவும் பணக்காரர்களாகவும் சிறப்பான கல்வியறிவைப் பெற்ற பரம்பரையாக நாங்கள் முன்னேற்றமடைந்த போதிலும், எம்மை எத்தனையோ பரம்பரைகள் பின்தள்ளக்கூடிய அழிவுப் போர்களுக்குள்ளே நாம் அகப்பட்டிருக்கிறோம்.

மிக மோசமான போர்களில் ஈடுபடுவதன் காரணமாக பெரிய சக்திகள் படிப்படியாக அழிந்து போவதை வரலாறு எமக்குக் கற்பிக்கிறது. பல தசாப்தங்களாக ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒருவர் ஒருவர் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வருகின்றன. இவை தாங்கள் முடிவுக்குக் கொண்டுவர முடியாத போர்களில் ஈடுபட்டு இறுதியில் அவமானத்தையும் பாரிய அழிவையுமே தமதாக்கிக் கொள்கின்றன.

கடைசியாக மிக மோட்டுத்தனமாக உக்ரைன் போர் வந்தது. இது மோட்டுத்தனமானது என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

நன்றி: அல்ஜஸீரா