சிறு தேசவினங்களின் இறைமை மதிக்கப்படாமையின் அரசியல் உதாரணங்களாக ஈழமும் உக்ரேனும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 223

137 Views

சிறு தேசவினங்களின் இறைமை மதிக்கப்படாமையின்
அரசியல் உதாரணங்களாக ஈழமும் உக்ரேனும்

சமகாலத்துக்கான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் யுத்தம் எனச் சுட்டப்படும் இரஸ்ய – உக்ரேன் யுத்தம் 2 இலட்சம் இரஸ்ய படையினர் உக்ரேனுள் 24.02.2022 இல் தரையிறங்கியதுடன் ஆரம்பமாகியது. இன்று ஒரு ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின் படி 7199 பொதுமக்களின் உயிரிழப்பையும், பல்லாயிரம் பொதுமக்களின் காயப்படுதல்களையும், 13 மில்லியன் மக்கள் ஆதரவற்றவர்களாக கடுங்குளிரில் உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் தங்குமிடத்திற்கும் இடமின்றித் தவிக்கும் நிலையையும், வெளிப்படுத்தி நிற்கிறது. பொதுமக்கள் உயிரிழப்பு பல்லாயிரம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரம் மேலெழுந்தவாரியானதென்றும் தெரிவிக்கும் ஊடகங்கள் மரியபோல் மாநகரத்தில் மட்டும் பாரிய இடப்பெயர்வின் பொழுது 21000 பேர் உயிரிழந்ததாக அந்நகர முதல்வர் அறிவித்திருந்ததை நினைவுகூர்கின்றன. அதே நேரத்தில் இருதரப்புப் படையினரையும் பொறுத்த மட்டில் ஒரு இலட்சத்துக்கு மேல் உயிரிழந்த காயப்பட்ட தொகை அமையும் என்பது புள்ளிவிபரங்களின் உத்தியோகப்பற்றற்ற பதிவுகளாகஉள்ளன. கூடவே உக்ரேனின் பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்ப 369 பில்லியன் டொலர்கள் தேவை என்னும் அளவுக்கு உட்கட்டுமானம் முழுவதும் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. உலகின் வளமிகு நாடொன்றும் அதன் மக்கள் இனமும் தமது வாழ்வுக்கான ஆற்றலை இழந்து பிறநாடுகளில் கையேந்தி நிற்கும் அவலநிலை வாழ்வாக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் காரணம் உக்ரேனில் வாழும் சிறுதேச இனங்களின் இறைமையை ரஸ்யாவும் மதிக்கவில்லை உக்ரேன் ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை. இருபகுதியினருமே சிறுதேசவின மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து தங்களின் அனைத்துலக அரசியலை உக்ரேனில் முன்னெடுக்கின்றனர். இது போலவே இந்திய அமெரிக்க மேலாண்மைகள் ஈழத்தமிழருக்கு அவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் சிறிலங்கா ஏற்படுத்தும் இனக்காணக் கூடிய படைபல அச்சத்திற்குப் பாதுகாப்பாக இருந்த நடைமுறையரசை 2009 இல் கிட்லரிசத்தை விட மோசமான ராயபக்சரிசத்தால் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்ய அனுமதித்து இன்று வரை அந்த ராயகபக்சரிசத்தையே ரணிலின் பின்னணியிலும் முன்னெடுத்து ஈழத்தமிழனத்தை சிறிலங்கா தொடர்ந்து பலவழிகளில் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு செய்ய ஊக்குவித்துவருகின்றனர். இதனால் இன்று மகிந்த ராயபக்சாவே எந்தப் 13 வது திருத்தத்தை இன்று இந்தியா தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு தனது அரசியல் தீர்வு என்கிறதோ அந்தப் 13வது எங்களுக்குத் தேவையற்றது எனப் பகிரங்கமாக அறிவிப்புச் செய்ய முடிகிறது. சிறுதேச இனங்களை ஒடுக்கும் சக்திகளுக்கு ஊக்கமளித்தால் அவை வல்லாண்மைகளையும் தயங்காது எதிர்ப்பர் என்பதற்கு இது உலக உதாரணமாக உள்ளது.
மேலும் இரஸ்ய உக்ரேன் களநிலையில் 21 வீதமான உக்ரேனின் நான்கு மாநிலங்களின் நிலப்பரப்பு அம்மாநிலங்களின் சுதந்திரத்தைக் கோரும் மக்களுக்கு உதவுதல் என்ற பெயரில் இரஸ்யாவால் மீளவும் தனது இறைமையுள்ள நிலப்பரப்பாக இணைக்கப்பட்ட எதார்த்த நிலையில் இவ்வார இரஸ்யா – உக்ரேன் போர் முதலாண்டு நிறைவுக்கு வருகிறது. இதனை வெற்றிகரமாக மீட்போம் என்று சூளுரைக்கும் உக்ரேன் அரசத்தலைவருக்கு உறுதுணையாக அமெரிக்காவின் அரசத்தலைவரே தனது தள்ளாத வயதிலும் தளராது தொடருந்துப் பயணம் செய்து உக்ரேன் சென்று களநிலை உற்சாகம் அளித்துள்ளார். மேலும் நவீனப்படுத்தப்பட்ட மென்நிலை அணுவாயுதங்கள் இவ்வாண்டில் பயன்பாட்டுக்கு வருவதை ஊக்கப்படுத்தி வேகப்படுத்துவதற்குரிய ஆயுத மற்றும் போர்விமானங்களும் உக்ரேனுக்கு மேற்குலகால் வழங்கப்படும் என்னும் நம்பிக்கையளிப்புக்களும் வேகம் பெற்றுள்ளன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் முன்னின்று மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய நிதிமுகாமைத்துவத்தை உக்ரேனுக்கு நெறிப்படுத்துவதுடன் கூட்டு போர்முகாமைத்துவத்தையும் வேகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இரஸ்யா அமெரிக்காவுடனான மட்டுப்படுத்தப்பட்ட அணுவாயுதஉற்பத்திகள் பயன்பாடுகளுக்கு ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் அமெரிக்கா அணுவாயுத உற்பத்திகளைப் பயன்படுத்தல்களை முன் மேற்பார்வை செய்யும் பலத்தை நீக்கியுள்ளது. கட்டவிழ்த்து விட்ட கையுடன் இரஸ்யா மாறியுள்ளமை உலக அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சத்தையும் சந்தேகத்தையும் மீள்வித்துள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அணுவாயுத உலகம் மாறியுள்ளது.
அதே நேரம் அரசியல் ரீதியாக ஐக்கிய நாடுகள் சபையில் 141 நாடுகள் இரஸ்யாவின் உக்ரேன் தலையீட்டை ஆக்கிரமிப்பாக அறிவித்து உடன் வெளியேற சபையில் தீர்மானத்தை இரண்டாவது முறையாக நிறைவேற்றியுள்ளது. ஆயினும் 7 நாடுகள் இரஸ்யாவுக்கு ஆதவரவாகவும் சிறிலங்கா உட்பட 32 நாடுகள் மௌனமாகவும் இருந்தது இரஸ்யாவுக்கு நம்பிக்கை ஊட்டும் செயலாகவும் மாறியுள்ளது. எண்ணிக்கையின் அளவில் அல்ல நாடுகளின் படைபல பொருளாதார வலிமையில் இன்றைய உலகின் புதிய அரசியல் ஒழுங்கு முன்னர் போல ஒரு முனை கொண்டது அல்ல முனைவாக்கம் அடைந்த நிலை என்பது ரஸ்யா உக்ரேன் போரின் ஓராண்டில் உறுதியாகியுள்ளது. இதனை பெலிசராசின் அதிபர் சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கச் சீனா செல்வதும், உக்ரேன் அரசத்தலைவரே தான் சீனாவின் அமைதித் திட்டத்தை எடுத்தாராயத் தயார் புடினின்நச்சு உறவுதான் தனக்குத் தேவையில்லை எனக் கூறியிருப்பதும் எடுத்துக்காட்டுகின்றன. அதிலும் 2014களில் புடின் தான் ஐரோப்பியரஸ்ய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்யும் ஆர்வத்தையும் செயற்பாடுகளையும் தோற்றுவித்த பிதாமகர் என்ற வகையில் உக்ரேனை நேட்டோவை நெருங்க வைத்த அவரே அதனைச் சாட்டாக வைத்துத் தன்னைத் தாக்குகையில் உக்ரேன் அதிபருக்கு புடின் நஞ்சாகத் தெரிவதில் அதிசயமில்லை ஆயினும் இரஸ்யா தனது இன்றைய தலையீட்டை தனது பிராந்தியத்துப் பிரச்சினையை தாங்களே தீர்க்கும் உரிமையுள்ளவர்கள் என நியாயப்படுத்துகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் அணித் தலையீடு அமைதி மீள்வதற்கான மிகப்பெரிய தடையாக உள்ளது என்பது இரஸ்யாவின் வாதம். அதே வேளை 2014இலேயே உக்ரேன் தனக்கான தன்னாட்சியை நிறுவி விட்டது. இதனால் உக்ரேனின் மாநிலப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாராகிவிட்ட இரஸ்யாவின் தலையீடு தேவையில்லை என்பது உக்ரேனின் வாதம். எனவே வெளியார் தலையீட்டிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கவமாக “நேட்டோ” பாதுகாப்பு முறைமைக்குள் தன்னை உட்படுத்திக் கொள்வதை தனது இறைமைக்குரிய விடயம் என்பதால் அதன்படி தாங்கள் நடப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அணியினைத் தனக்கான பாதுகாப்புக்கவசமாக முன்நிறுத்துகிறது உக்ரேன். இவை ஏற்கனவே 2ம் உலகப்போர் காலத்திலேயே ஐரோப்பிய அரண், ஆசிய அரண் என்கிற பாதுகாப்புப் பிரிப்பு பலமாகப் பேசப்பட்டு யப்பான் மேல் அமெரிக்க அணுவாயுத வல்லாண்மை வழியாக ஐரோப்பா தனது பலத்தை நிரூபித்து யப்பானிய மக்களினத்தின் ஒரு தொகுதியை இனஅழிப்பு செய்து துவைத்தது வரலாறு. இப்போது இரஸ்யா- உக்ரேன் போர் மீளவும் ஐரோப்பிய கோட்டை – ஆசியக் கோட்டை என்ற பிரிதளங்களை உருவாக்கத் தொடங்கி விட்டது வெளிப்படையான உண்மை. இதன் பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள இந்துமாக்கடல் பகுதியும் ஈழத்தமிழர்களும் இன்றைய உலகின் ஐரோப்பிய ஆசிய கோட்டைச்சிந்தனைக்குள் சிக்குண்டு ஈழத்தமிழர்களின் இறைமை மறக்கப்பட்டு மறுக்கப்படும் மேலும் துன்பமான அரசியல் வாழ்வை எதிர்நோக்க வேண்டிய சிக்கல் பலமடைந்து வருகிறது. வல்லாண்மைகளாக உள்ள பிராந்திய மேலாண்மைகள் பாதிப்புறும் தேசவின மக்களுக்கு உதவுதல் என்ற காரணத்திலேயே தங்களின் மேலாண்மையை பாதிப்புற்ற மக்களிடை முன்னெடுப்பது உலகப் பொதுவான அரசியல் – போரியல் இராசதந்திரமாகவுள்ளது. ஆனால் இந்தப் வல்லாண்மைப் பிராந்திய மேலாண்மைகள் சிறு தேசஇனங்களுக்குரிய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை உறுதி செய்வதாக அவர்களின் இறைமைக்குள் பயணிக்கத் தொடங்கி காலப்போக்கில் தங்களின் சந்தை இராணுவ நலன்களை முன்னிறுத்தி சிறுதேச இனங்களின் பிரச்சினையை அனைத்துலக பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் என்ற பெயரில் பின்னர் எந்த சிறுதேச இனங்களைப் பாதுகாக்க முன்வந்தார்களோ அந்த சிறுதேச இனங்களையே உலக வரைபடத்திலிருந்து மறையச் செய்து விடுவது உலகவரலாறு தரும் செய்தி இந்த அனுபவமாக ஈழத்தமிழர் வரலாறும் மாறிவிடக் கூடாதென்றால் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற இறைமையைப் பாதுகாத்தல் என்பதை அரசியல் கொள்கைப் பிரகடனமாக முன்வைத்து அது பிரிவினை அல்ல என்பதையும், அதனை அடைவதற்கான போராட்டம் என்பது ஈழத்தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டமே தவிர பயங்கரவாதம் அல்ல எனவும் உலகுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் சனநாயக மக்கள் இயக்கத்தை இயன்றளவு விரைவாகத் தொடங்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News

Leave a Reply