வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

282 Views

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும், அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப் பட்டவர்களும், மனித நேய அமைப்புக்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் குரல் எழுப்பியுள்ள தருணத்தில், அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் வெளியாகி இருக்கின்றது. இது மிகுந்த அவதானிப்புக்கும் சிந்தனைக்கும் உரியது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது என்பது சாதாரண விடயமல்ல. அது திட்டமிட்டு, செயற்படுத்தப்பட்ட ஒரு குற்றச் செயலாகும். எனவே அது தண்டனைக்குரிய செயற்பாடு. அதற்கும் அப்பால் அது மிக மோசமான மனித உரிமை மீறல். அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல். இதனை மனித நாகரீகமுள்ள – மனித நேயம் கொண்ட எவரும் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.

ஆனால் ஜனநாயக நாடாகிய இலங்கையில் நிலைமைகள் நேர்மாறாகவே இருக்கின்றன. ஐநா உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் 60 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணித்திருக்கின்றன. ஆயினும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கணிப்பின்படி இந்த எண்ணிக்கைக்கு மேலாக ஒரு இலட்சத்து 43 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்பது கணக்கிடப்படவில்லை. இறுதி யுத்தத்தின்போது, நாலரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யுத்த பிரதேசத்திற்குள் வாழ்ந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருடைய திட்டமிடல் பிரிவினரின் இறுதியான மாதாந்த நிலைமைகள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்ஆனால் யுத்தம் முடிவைடந்த தையடுத்து, யுத்த களமாகிய முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் இரராணுவ முள்வேலி முகாமுக்கு இராணுவத்தினரால் மூன்று இலட்சம் பேர் மாத்திரமே கொண்டு வரப்பட்டிருந்தார்கள். இதன் அடிப்படையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, அரசாங்கத்தின் இந்தப் புள்ளி விபரங்களின்படி ஒரு இலட்சத்து 43 ஆயிரம் பேர் கணக்கிடப்படவில்லை என சுட்டிக் காட்டியிருந்தார். அவர்களுக்கு என்ன நடந்தது, என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அந்த வகையில், இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது புலனாகின்றது.

இவ்வளவு தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த போதிலும், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. காணாமல் போயுள்ளவர்கள் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராய்வதைக் கைவிட வேண்டும் என்று நாட்டின் நீதி அமைச்சர் அல் சப்ரி தெரிவித்துள்ளார். இதனை நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகள் மற்றும் நாட்டு மக்களுக்கும் வலியுறுத்திக் கூறியிருப்பதாக அமைச்சர் அல் சப்ரி கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாகப் பாதிக்கப் பட்டவர்களினால் முன்வைக்கப்பட்டு, அதற்கு சாத்வீகப் போராட்டங்களும் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பலவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டு நடத்தி வரும் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகிய ஆகஸ்ட் 30 ஆம் திகதி 1653 தினங்களை எட்டிக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய ஒரு தருணத்திலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கூறியதாகக் குறிப்பிட்டு, காணாமல் போனவர்கள் காணாமல் போனதாகவே இருக்கட்டும். அவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்பதை ஆராய வேண்டாம் என்று நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியதையடுத்து, நிலைமாறுகால நீதிக்கான செயற்பாட்டின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கியது.

காணாமல் போனோருக்கான அலுவலகம்

நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்காக ஐநா பரிந்துரைத்திருந்த நான்கு பொறிமுறைகளை உருவாக்கிச் செயற்படுத்தி, நடைபெற்ற அசம்பாவிதங்களுக்குப் பொறுப்புக் கூறுவதாக, 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தையடுத்து, அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதியளித்திருந்தது. அதற்கமைய காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான பொறிமுறையாக காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு 2 வருடங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்5 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் - பி.மாணிக்கவாசகம்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், காணாமல் போயுள்ளவர்களையும் கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும்போது, அதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்படுவார்களா, அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்களா என்பது பற்றிய எந்தவித அம்சங்களும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு ‘காணாமல் போனார்கள்’ என்பதைக் கண்டறிவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களிடம் அதற்கான விசாரணைகளை நடத்துவதற்கான அதிகாரங்கள் அனைத்தையும் காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு இந்தச் சட்டமூலம் வழங்கி உள்ளது.

அத்துடன் –

– வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், காணாமல் போயுள்ளவர்களையும் தேடிக் கண்டறிவது

– இது தொடர்பில் அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளை வழங்குவது

– காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும், அவர்களுடைய உறவினர்களினதும் குடும்பங்களினதும் உரிமைகளையும் கரிசனைகளையும் பாதுகாப்பது

– காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது

– காணாமல் போனவர்கள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு தொகுப்பை உருவாக்குவது

ஆகிய நோக்கங்களையும் காணாமல் போனோருக்கான அலுவலகம் கொண்டிருக்கின்றது.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் கண்டறியப்படுகின்ற விபரங்கள் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகின்ற குற்றம் இழைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துமேயானால், காணாமல் ஆக்கப் பட்டவர்களுடைய குடும்ப உறவினர்களின் ஆலோசனையுடன், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வல்ல அரச நிறுவனங்களுக்கு அறிக்கையிட முடியும் என்று இந்த அலுவலகத்திற்கான சட்டமூலத்தின் 12 (1) ஆம் பிரிவு குறித்துரைக்கின்றது.

அதேவேளை, சட்டமூலத்தின் 13 (2) ஆம் பிரிவு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் கண்டறியப்படுகின்ற விடயங்களைக் கொண்டு குற்றவியல் மற்றும் சிவில் பொறுப்புக்களைத் தொடர முடியாது என்று குறிப்பிடுகின்றது.

போக்கும் நோக்கமும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் களினால் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்களில் கண்டறியப்பட்ட ஆதார பூர்வமான விடயங்கள், மேல் நடவடிக்கைக்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இந்த விடயங்கள் ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்துகின்ற புலனாய்வு பிரிவினரிடம் சட்ட ரீதியாக குற்றஞ் சாட்டி வழக்குத் தாக்கல் செய்வதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக ஒப்படைக்கப்பட்டன.

ஆனால் அந்த நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப் படவில்லை. ஆணைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் அதன் உள்ளடக்கங்களும் கிடப்பில் போடப்பட்டன.

இந்த நிலையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் நடத்துகின்ற விசாரணைகளும், அவற்றின் மூலம் கண்டறியப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான சட்டமூலத்தில் அதற்குரிய வழிமுறைகள் உள்ளடக்கப்படவில்லை.

முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிவதற்கு சட்டத்தை வகுத்த அரசு, அந்த விசாரணைகளின் மூலம் ஆட்களைக் காணாமல் ஆக்கியவர்கள் தொடர்பில் எந்தவிதமான குறிப்புக்களையும் உள்ளடக்க வில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள் என்பதை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தி, அதற்குரிய சான்றாக காணாமல் போனவர்கள் ‘பிரசன்னமாக இல்லை’ என்றும் அல்லது அவர்கள் ‘மரணமடைந்து விட்டார்கள்’ என்றும் உறுதிப்படுத்துவதற்கான சான்றுப் பத்திரங்களை வழங்கினால் போதும். அதன் மூலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்திற்கு முடிவு காணலாம் – தீர்வு காணலாம் என்பதே அரசாங்கத்தின் உள்ளக் கிடக்கை.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதை ஆராய வேண்டியதில்லை என்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகச் சட்டத்திற்கு நேர் முரணான வகையில் நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கூறியதாகக் குறிப்பிட்டு, நீதி அமைச்சர் அல் சப்ரி வெளியிட்டிருக்கின்ற கருத்து அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தக் கருத்து, மற்றுமொரு விடயத்தையும் நினைவூட்டியுள்ளது. பாரதூரமான குற்றச்செயல்களைப் புரிந்தவர்கள் ஆதாரபூர்வமாக அடையாளம் காணப்பட்டு, நீதிமன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும், அவர்கள் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தண்டனை பெறுவதில் இருந்து பாதுகாக்கின்ற போக்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளிப்படையான கொள்கையாகக் கடைப்பிடித்து வருகின்றார்.

இந்தத் தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தின் அடிப்படையில் கடற்படை மற்றும் இராணுவ பொலிஸ் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற விடாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், நீதிமன்றங்களினால் தீர்க்கமான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்த வரலாற்றுப் பெருமையையும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கொண்டிருக் கின்றார்.

இத்தகைய ஓர் அரச தலைவரினுடைய அரசாங்கத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது விழலுக்கு இறைத்த வேலையாகவே முடியும்.

இதனாற்தான், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்கள். உள்ளக பொறிமுறையின் கீழான எந்தவொரு விசாரணையும் உண்மையைக் கண்டறியப் போவதில்லை என்றும் ஆட்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், எனவே, தங்களுக்கு சர்வதேச விசாரணையொன்றின் மூலமே நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றார்கள்.

அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படுவதன் மூலம் மாத்திரமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி நியாயமும், முறையான நிவாரணமும் கிடைக்கும் என்பது உள்ளங்கனி நெல்லிக்கனியாகத் தெரிகின்றது.

Leave a Reply