வவுனியாவில் கிராம சேவகர் அலுவலகங்களுக்கு படையெடுக்கும் மக்கள்

120 Views

கிராம சேவகர் அலுவலகங்களுக்கு மக்கள்

கிராம சேவகர் அலுவலகங்களுக்கு மக்கள்: வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பெறுவதற்காக ஆங்கில விண்ணப்ப படிவமொன்று கிராம சேவகர் ஊடாக வழங்கப்படுவதால் மக்கள் கிராம சேவகர் அலுவலகங்களை நோக்கி அதிகளவில் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந் நிலையில் தடுப்பூசியை பெற கிராம சேவகரிடம் விண்ணப்பத்தை பெற்று அதனை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து கிராம சேவகரின் கையொப்பம் பெற்று அதனை தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இந் நடைமுறை முதலாம் கட்ட தடுப்பூசி போடும் போது இருந்தே செயற்படுத்தப்பட்டமையால்  சிலர் தடுப்பூசியை பெற செல்லாது இருந்துள்ளதோடு  சிரமத்திற்கும் முகம் கொடுத்தனர்.

இந் நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் போதும் அதே ஆங்கில விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்காக மக்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதில் ஆங்கிலத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் ஊரடங்கு வேளையிலும் மக்கள் வீதியில் அலையும் நிலை வவுனியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கிராம சேவகர் அலுவலகத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இவ் விடயம் தொடர்பாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply