அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

157 Views

அனைத்துலக ஈகைத்தினம்
அனைத்துலக ஈகைத்தினம்:

வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை.
ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள்.

ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில் ஈடுபட்டு வரும் மக்களையும், அரசசார்பற்ற அமைப்புக் களையும், இப்பணிகளுக்குப் பங்கேற்பாளர்களாக உள்ளவர்களையும் அணிதிரட்டி, இப்பணிகளின் முக்கியத்துவத்தையும், உயர்ச்சியினையும் உலகுக்கு உணர்த்தும் ஐக்கிய நாடுகள் சபையின் நாளாக ‘அனைத்துலக ஈகை நாள்’ செப்டெம்பர் 5ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்துலக ஈகைத்தினம்கேம்பிரிஜ் பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியராக இருந்து நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் அவர்களின் ஆய்வு முடிவாக, வறுமை என்பது வெறுமனே பணமின்மையல்ல, மாறாக ஒரு மனிதன் தன்னுடைய முழு ஆளுமையையும் வெளிப்படுத்தி, வாழ்வதற்கு அவனுக்கு இருக்கும் தடைகளே வறுமை என்ற, இன்றைய வரைவிலக்கணம் கட்டமைக்கப்பட்டது. வேறு மொழியில் சொல்வதனால், ஒருவரின் சுதந்திரமின்மையே வறுமை. இதுவே எல்லாத் துன்பங்களுக்குமான தலைமைக் காரணி. இந்த சுதந்திர வாழ்வு முதலில் குடும்பங்களில் பயிற்சிப்படுத்தப்படல் வேண்டும். இதனாலேயே உலக அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றவுடன், ஊடகவியலாளர்கள் உலக அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமென அன்னை திரேசாவிடம் கேட்ட பொழுது “உங்கள் குடும்பங்களை நேசியுங்கள்” என அன்னை திரோசா பதிலளித்தார். இதனால் இந்த அனைத்துலக ஈகை நாளில் ஒவ்வொரு மனிதனின் சுதந்திரத்தையும் உறுதி செய்ய, மற்றைய மனிதன் உழைப்பதே ஈகை என்பதை மனதிருத்த வேண்டும்.

இந்நாளில் சிறீலங்காவில் இதற்கு நேர் எதிர்மாறாக ஈழத்தமிழ் மக்களிடை தொண்டுப்பணிகள் செய்யும் அமைப்புக்களும், தனியாட்களும் பிறருக்கு உதவும் வகையில் நிதிக்கொடைகள் அளிப்பவர்களும், சுதந்திரமாகச் செயற்பட இயலாதவர்களாகப் படைபல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதும் அல்லாமல், தொண்டுப் பணிகளின் மக்கள் நிர்வாகம் மறுக்கப்பட்டு, எந்தப் படையினர் ஈழத்தமிழ் மக்களை இனஅழிப்புச் செய்தார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் விசாரிக்கவெனப் பெயர் வெளியிட்டதோ, அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஈகைநாள் இடம்பெறுகிறது.

அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள வறுமையையும், உளத்துன்பங்களையும் மேற்கொள்வதற்கான போராட்டத்தில் ஆற்றிய அளப்பரிய பணிக்காக 1979இல் உலக அமைதிக்கான நோபெல் பரிசினைப் பெற்ற கல்கத்தாவின் அன்னை திரேசா அவர்கள், 87 வயதில் காலமான 05.09.1997ஆம் திகதியை ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து, இந்நாளில் ஈகைப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனியாட்களையும், அவர்களின் தொண்டுகளையும் அங்கீகரித்து போற்றி ஈகையினை ஊக்கப்படுத்தி, இதற்கான கல்வியையும்,  விழிப்புணர்வைத் தரும் பொது நிகழ்ச்சிகள், செயற்பாடுகளையும் இந்நாளில் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை தனது 17.12.2012ஆம் ஆண்டுத் தீர்மானத்தின் படி வேண்டி நிற்கிறது.

அன்னை திரேசாவை அருளாளர் நிலைக்கு உயர்த்திய திருநிலைப்படுத்தல் விழாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “அன்னை திரேசா தெருக்கரையில் யாருமே தேடுவாரற்று வீசப்பட்டு, மரணத்தின் வாயிலில் அன்புக்காக ஏங்கிக் கிடந்தவர்களின் முன் மண்டியிட்டுப் பணிசெய்தார். இதன் வழி அவர்களில் கடவுள் கட்டமைத்துள்ள கண்ணியத்தை அவர் கண்டுணர்ந்தார். அவர்களின் குரலை இந்த உலகின் வல்லாண்மைகளுக்குக் கேட்கச் செய்தார். இதனால் அவர்கள் தாங்கள் படைத்துள்ள வறுமை என்னும் பெருங்குற்றத்தின் கொடுமையைக் கண்டுணர வைத்தார்” என எடுத்துரைத்து, வறுமை என்பது வல்லாண்மைகளால் படைக்கப்படும் குற்றச் செயல் என்பதை உறுதிப்படுத்தினார்.

அனைத்துலக ஈகைத்தினம்சிறீலங்காவில் மூன்று வேளை உணவும், தங்க இடமும் கொண்டு அமைதியுடன் வாழ்ந்த ஈழத்தமிழ் மக்கள், மலையகத் தமிழர்கள் இவர்களிடை வறுமை என்பதைச் சிங்கள பௌத்த பேரினவாத வல்லாண்மையாகப் பிரித்தானியக் காலனித்துவம் உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை, ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறையே உருவாக்கியது. 1931ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 80 ஆண்டுகால இலங்கை மக்களின் வறுமைக்கும், துன்பதுயரங்களுக்கும் சிங்கள அரசாங்கங்களே காரணம்.

இன்று கூடச் சிறீலங்காவில் ஈழத்தமிழ் மக்களின் வறுமையையும், உளத்துன்பங்களையும் மேற்கொள்வதற்கான போராட்டங்களுக்கு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் கூட உதவ இயலாத வகையில் அனைத்துக் கட்டுப்பாடு களையும் சிறீலங்கா அரசாங்கம் செய்து வருகிறது. அன்னை திரேசாவின் வழியில் ஈழமக்களின் வறுமையும், உளத்துன்பங்களும் நீக்க உழைத்த கத்தோலிக்க கிறிஸ்தவத் துறவிகள் பலர் சிறீலங்கா படைகளால் கொன்றழிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டதாக ஈழமக்களின் வரலாறு திகழ்கிறது.

அதே வேளை ஈழமக்களின் வறுமைப் பிரச்சினையோ அல்லது உளத்துன்பங்களோ வெறுமனே நிதி வழங்கல் வழி தீர்க்கப்படக் கூடியனவல்ல. மாறாக அன்னை திரேசா அவர்கள் கூறியது போல “அன்பு என்பது வெறுமனே அந்த வார்த்தையில் தங்கியுள்ள ஒன்றல்ல. அன்பு செயலில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்தச் செயல்தான் தொண்டு”. அன்னை திரோசவின் வார்த்தைப்படி “நாம் எவ்வளவு செய்தோம் என்பதல்ல, நாம் எவ்வளவு அன்பு அதைச் செய்வதற்கு வைத்தோம் என்பதே முக்கியம். நாம் எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, அதைக் கொடுப்பதற்கு எவ்வளவு அன்பை அதில் வைத்தோம் என்பதே முக்கியம்” எனவே அன்னை திரேசாவின் இதயம் என அவர் கூறிய இயேசுவின் கூற்றாகிய “இச்சிறியோரில் ஒருவருக்குச் செய்யும் போதெல்லாம், எனக்கே செய்தீர்கள்” என்பதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உணர்ந்து, கடவுளுக்கான பணி என்பது கல்லில் உள்ள சிலைக்கல்ல, கடவுள் இருப்புக் கொண்டிருக்கிற உயிர்களுடையதும், உலகினுடையதும் இயல்புத்தன்மை என்னும் அவற்றின் சுதந்திரத்துடன் அவை அமைதியாக வாழ்வதற்கான இயங்குவதற்கான நிலையை உறுதிப்படுத்த ஆற்றும் தொண்டு என்பதை மனதிருத்தி, சுதந்திர வாழ்வுக்கு உழைத்தலே கொடை என்பதன் பொருள் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

இதனால்தான் ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கான துன்பதுயர நீக்கலுக்கான  கொடைகளைப் – பணிகளை சிறீலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளென படைபலத்தால் தடைசெய்து வருகிறது. சிறீலங்காவில் ஈழத்தமிழ் மக்களிடையுள்ள தொண்டு அமைப்புக்கள் அத்தனையுமே ஏதோ ஒருவகையில் இனங்காணக் கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலேயே செயற்பட்டு வருகின்றன. இது ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதி உலகால் உறுதிப்படுத்தப்பட்டாலே அங்கு வளர்ச்சியும், மக்களாட்சியும் நிலைபெற முடியும் என்பதை உலகுக்குத் தெளிவாக்குகிறது.

இந்நிலையில் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் அன்னை திரேசா கூறியது போல “எங்களால் பெரிய செயல்களைச் செய்ய இயலாது விட்டாலும், சிறிய செயல்களை அன்புடன் செய்கிறோம்” எனத் தாயகத்தில் வாழும் தங்கள் உடன் பிறப்புகளுக்குச் செய்வதற்கு எந்நாளும் ஆயத்தமாக உள்ளனர். ஆயினும் அன்னை திரேசா கூறிய ஒரு அனுபவ மொழி இவ்விடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. “மக்களின் அன்புக்கான பசியைப் போக்குவது உணவுக்கான பசியைப் போக்குவதை விடப் பன்மடங்கு கடினமான வேலை” எனவே ஈழத்தமிழ் மக்களின் அன்புக்கான தாகத்தை உலகுக்குப் புரிய வைத்து, அந்தத் தாகம் அவர்களின் தாயாக தேசிய தன்னாட்சி இருப்பு நிலைக்கான உலக அங்கீகாரத்தின் மூலமே போக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை புலம்பதிந்த தமிழர்கள் உலகுக்குத் தெளிவாக்க வேண்டும். அன்னை திரேசா மரணிக்கும் நிலையில் புறக்கணிப்புக்கு உள்ளாகி தெருக்கரையில் வாழ்ந்த மக்களுக்குக் கண்ணியமான வாழ்வு அமைக்கத் தன் வாழ்வையே தியாகம் செய்தார். ஆனால் ஈழத்தில் கண்ணியமான வாழ்வுக்காகத் தினம் தினம் போராடும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்தல் ஈகையில் எல்லாம் தலையாய ஈகை என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய நாளாக இந்த அனைத்துலக ஈகைநாள் அமைகிறது.

ஈகை என்பது பல்லின, பல மத, பல் பண்பாட்டு மக்களிடை ஒற்றுமையையும், புரிந்துணர்வையம் உருவாக்குவதற்கான பங்களிப்புக்கள் என ஐக்கிய நாடுகள் சபையின், இந்நாளின் தீர்மானத்திற்கான விளக்கம் 2012இல் தெளிவாக்கியுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசாங்கம் பல்லின, பல்மத, பல் பண்பாட்டு நாடு இலங்கைத் தீவு என்பதை மறுத்து, ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் கொள்கையுடன் அரசியல் அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கான கண்ணிய வாழ்வை உறுதிப்படுத்துமாறு விடுத்த கோரிக்கையைக் கூட நிராகரித்துள்ளது. இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கான வறுமையையும், துன்ப துயரங்களையும் மாற்றியமைக்க ஐக்கிய நாடுகள் சபையும், அதன் உறுப்புரிமை நாடுகளும் அக்கறையற்று இருப்பதன் காரணமென்ன? எனக் கேட்டு, அவற்றின் கடமையை உணர்த்த வேண்டியது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் தலையாய பணியாக இந்நாளில் அமைய வேண்டும்.

1 COMMENT

Leave a Reply