ஈழத்தமிழ் மக்களின் தேவை அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை

109 Views
அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை
இலக்கு மின்னிதழ் 146 இற்கான ஆசிரியர் தலையங்கம்

அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை: இவ்வாண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் மட்டும் நூற்றிநாற்பது இலட்சம் கோடி ரூபாய்களை சிறீலங்கா அரசுக்கான மேலதிகக் கடனாக இன்றைய ராசபக்ச குடும்ப ஆட்சி பெருக்கியுள்ளது. கோவிட் வீரியத் தாக்குதல்களுக்கு பணமின்மையால், தகுந்த பாதுகாப்பு அளிக்காது, மக்கள் பெருமளவில் பலியாகும் நாடாகச் சிறீலங்கா மாறிவருகிறது. அதே வேளை இந்த ‘வங்குரோத்து’ அரசாகவுள்ள சிறீலங்கா, இதுவரை இந்தியா, தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நுழைவாயில் என்று இருந்த நிலைக்குச் சவாலாகத் தன்னை ‘கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தெற்காசிய நுழைவாயில்’ என முன்னிருத்தி வெளியுறவுக் கொள்கையினை வகுத்து வருகிறது.  இது உலக படைபல வல்லாண்மைகள் மற்றும் பொருளாதார மேலாண்மைகளுக்கு தெற்காசியாவில் இந்தியாவுக்கு மாற்றாகத் தன்வழியாகக்  ‘காலூன்றலாம்’ என்னும் செய்தியைத் தெரிவிக்கும் உத்தியாகும்.

இந்த சிறீலங்காவின் ‘காலுன்றல் அழைப்புக்குச்’ சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா.பி.டெப்பிளிட்ஸ் அவர்கள் “சிறீலங்கா மிகப்பாரிய வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலையும், அமைவிடப் பயன்படுத்தல் அனுபவத்தையும் கொண்ட நாடு. துறைமுக நகர முதலீடுகளில் சிறீலங்கா அரசாங்கம் அதிக இலாபம் ஈட்ட விரும்புவதை அங்கீகரிக்கிறேன். அனைத்துலக வர்த்தக உடன்படிக்கைச் சட்டங்கள் பேணப்பட்டு, ஊழலற்ற முதலீட்டுக்கு அபாயமில்லாத வகையில் இந்த முறைமைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” எனப் பச்சைக்கொடி காட்டி, அமெரிக்கா கோவிட் 19 காலத்தில் சிறீலங்காவுக்குச் செய்த உதவிகளையும் சுட்டிக்காட்டி அமெரிக்கா சிறீலங்காவின் மற்றொரு மிகப்பலம் வாய்ந்த முதலீட்டாளராகத் தொடரும் என நம்பிக்கையளித்துள்ளார். கூடவே அமெரிக்கா வழங்கிய கடன்களைச் செலுத்தத் தேவையில்லையெனச் சிறீலங்காவுக்கு உற்சாகமும் ஊட்டியுள்ளார்.

இன்றைய இஸ்லாமிய அமீரகமான நேற்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியுள்ள அமெரிக்காவுக்குத் தெற்காசியாவுக்கான அதன் இருப்பை, சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுவதன் வழியான ‘தளமற்ற தள அமைப்பு’ வழியாக நிலைப்படுத்தலாம் எனக் காலம் இடம் அறிந்து சிறீலங்கா அழைத்துள்ளது. சிறீலங்காவின் இந்த ‘தளமற்ற தள அமைப்பு’ அழைப்பு பாகிஸ்தான், ஈரான் இஸ்லாமீய அமீரகம் என்னும் முக்கோண இணைப்பின் வழி உருவாகி வரும் இஸ்லாமியப் பேரரசு முயற்சிக்கு எதிர்நிலை ஒன்றை அனைத்துலக நாடுகள் அமைப்புக்களுடன் முரண்படாது, தெற்காசியாவுக்குள் ஏற்படுத்த வேண்டிய தேவையில் உள்ள அமெரிக்காவுக்கு மிக முக்கியமானதாகிறது.

தலிபான்களின் அரசை, அயலக ஆப்கானிஸ்தான்  மக்களுக்கான அக்கறை என்ற முறையில் தாம் ஏற்று உதவ வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்று பகிரங்கமாகவே கூறும் பாகிஸ்தானுக்குப், பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் நேரடியாகக் சென்று “பாகிஸ்தான் மக்களுடன் பிரித்தானியாவும் இணைந்து ஆப்கானிஸ்தானிய மக்கள் நலன்களின் அக்கறையில் பகிர்வுகளை மேற்கொள்ள விரும்புவதாக” அறிவித்துள்ளார். அரசுகளின் தலைமைப் போக்குகள் வேறுபட்டாலும் முரண்படாது, மக்கள் நலனில் அக்கறை எடுத்து இணைந்து செயற்படுகிறோம் எனப் பின்னடைவுகளைப் பெரிதுபடுத்தாது, தம் சந்தை இராணுவ நலன்களை உறுதிப்படுத்தும் இருப்புக்களைத் தொடர முயற்சிப்பது இன்றைய உலக அரசியலாக உள்ளது.

சீனா இன்று மேற்குலக ‘பொதுவான நன்மை’ (Common Good) யில் இணைதல் என்னும் உலக அரசியல் தத்துவத்தையே  மாற்றும் தத்துவமாக முன்னெடுத்துள்ள ‘பொதுவான வளர்ச்சியில்’ (Common Prosperity) இணைதல் என்னும் தத்துவம்,  சிறீலங்காவில் உள்ள அதன் இறைமையுள்ள கொழும்புத் துறைமுக அபிவிருத்தி நகரில் அமெரிக்காவையும் முதலீட்டாளராக இணைத்தலை நடைமுறைச் சாத்திய மாக்குகிறது. அதாவது சீனாவின் புதிய கலப்புப் பொதுவுடமைத் தத்துவப்படி “தனி முதலாளிகளை உச்ச இலாபம் நோக்கி வளர அனுமதித்து, அந்த இலாபத்தை பகிர்வதன் வழி புதிய வளர்ச்சிகளை ஏற்படுத்தி, அந்த வளர்ச்சிகளின் வழி மக்கள் பயன்பெற, அதன் மூலதன உடமையாளர்களாகச் சீனாவே தொடர்தல்” அமைகிறது.

இந்த புதிய அணுகுமுறையில் சீனாவின் மேலாண்மையும், உலக மூலவளங்களும், மனிதவளங்களும் பிரிக்க முடியா இணைப்பில் தொடரும். சீனாவின் இந்தப் புதிய கலப்புப் பொதுவுடமைத் தத்துவத்திற்கு ஏற்ப, சீனா குத்தகை முதலீடுகளாலும், படுகடன் பொறியாலும், இலங்கையின் தரையிலும், கடலிலும் மீயுயர் இறைமையுள்ள இறைமையாளராகத் தன்னையும் நிலைநிறுத்தியுள்ள இன்றைய நிலையில், சிறீலங்கா, அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளையும் சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள வைத்து தன்னை ‘வங்குரோத்து’ பொருளாதார நிலையில் இருந்து காப்பாற்றிக் கொள்வதே ராசபக்ச குடும்ப ஆட்சியின் இன்றைய ‘காலுன்றல் அழைப்பு’ இலக்கு. மேலும் சிறீலங்கா அரச தலைவர், ஐக்கிய நாடுகள் சபையினதும், அனைத்துலக சட்டங்களினதும் முறைமைகளுக்கு ஏற்ப தாங்கள் தங்களவில் செயற்படுவதாகக் காட்டும் உத்தியாகவே அமெரிக்க அதரவாளரான சுமந்திரன் வழி தமிழர் தேசியக் கூட்டணியினர் உடன் பேச்சுக்கள் நடாத்தி, ஈழத்தமிழர்களின் உரிமைகளை மிகமிக மட்டுப்படுத்தலையும் ஈழத்தமிழர்களே கண் ணியமான வாழ்வாக ஏற்கின்றார்கள்.

ஆதலால் இந்திய அரசின் தமிழர்களின் ‘கண்ணியமான வாழ்வு’க்கான உரிமைகளை வழங்குவித்தல் என்னும் முயற்சியை முறியடித்தல், முதல் நோக்கு.  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறீலங்கா மேலான அனைத்துலகச் சட்ட மீறல்களுக்கான விசாரணக்கான சான்றாதாரங்களைத் திரட்டும் அலுவலகத்தின் வேலைத் திட்டங்களைத் தடைப்படுத்தவும் முடியும் என்பது இரண்டாவது நோக்கு. சுருக்கமாகச் சொன்னால், சிறீலங்காவின் காலுன்றல் அழைப்பு அரசியலுக்குச் சுமந்திரன் சம்பந்தர் கூட்டுக் ‘கால்கழுவும் அரசியல்’ மிகுந்த பயனை அளிக்கும் என்பது வெள்ளிடைமலை. இன்று மாறிவரும் புதிய உலக அரசியல் முறைமைக்குள் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், ஈழத்தமிழ் மக்களின் முக்கிய தேவை ஆற்றலாளர்களின் அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை. இதனை எவ்வளவு வேகமாக ஈழத்தமிழ் மக்கள் கட்டியெழுப்புவார்களோ அவ்வளவுக்குத்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் இந்தக் ‘காலுன்றல்’ ‘கால் கழுவல்’ அரசியல்களைத் தாண்டி உறுதிபெறும். ஏன்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply