ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றும் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதன் விளைவுதான், தொடர்ந்தும் படுகொலைகள் நடைபெற்றதற்குரிய காரணமாக இருந்தது.
ஆகவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமாக, இந்த அரசாங்கம் தாங்கள் சரியான பாதையில், சரியான நீதியில் செல்லுகின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (31) காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், ஐயாத்துரை நடேசன் துணிச்சலாகத் தன்னுடைய பத்திரிகைச் செயல்பாட்டை முன்கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டினார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மக்கள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர், தன்னுடைய கருத்துக்களைத் துணிச்சலாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்குக் கிடைத்த பரிசு என்னவென்றால், அவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
“நேற்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, 22 ஆண்டுகள் கடந்துள்ளன”
“ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், தமிழ்த் தேசிய சிந்தனையையும் தமிழ்த் தேசிய அரசியலையும் அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் தான் யோசப் பரராசசிங்கம் ஐயா, நடேசன், விரிவுரையாளர் தம்பையா, சந்திரநேரு மற்றும் ரவீந்திரநாத் போன்றோர் கொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, “இன்னும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை. நீதிக்கான குரல், வேண்டும். இந்த அரசாங்க மாற்றத்தின் பின்னர் ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்தார்கள்”.
“சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இன்னும் பல குற்றவாளிகள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



