அநுர அரசாங்கத்தின் பொருளாதார தடுமாற்றம் : விதுரன்

முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களோடும், விடுதலைப் போராளிகளின் உதிரத்தோடும் முடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனினும், அந்தப் போரின் இறுதி நொடிகள் மற் றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறுதிப் பயணம் குறித்த சர்ச்சைகளும், வாக்குமூலங்களும் தென்னிலங்கை அரசியல் பரப்பில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
போர்க்கால இராணுவத் தளபதியும் பீல்ட் மார் ஷலுமான சரத் பொன்சேகா, ‘பிரபாகரனின் உடலுக்கு என்ன நடந்தது என்பது குறித்த இறுதி அறிவுறுத்தல்களைத் தான் வழங்கிய போதிலும், அதனை ஒருபோதும் வெளியில் கூறப்போவதில்லை’ என்று வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை பழைய காயங்களைக் கிளறியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, நினைவிடங்கள் அமைக்கப் பட்டுவிடும் என்ற அச்சம் போன்ற காரணங்களை முன் வைத்து பொன்சேகா இந்த இரகசியத்தைக் காப்பதாகக் கூறினாலும், இதன் பின்னாலுள்ள பேரினவாத அரசியல் சிந்தனையையும், வரலாற்று நாயகனின் தியாகத்தை இருட் டடிப்பு செய்ய முனையும் இராஜதந்திரத் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரத் பொன்சேகாவின் நேர்காணலில் மிக முக்கிய மாக வெளிப்படும் அம்சம், ‘தலைவர் பிரபாகரனின் உடல் அழிக்கப்பட்ட இடத்தை வெளியிட்டால், பிற்காலத்தில் அங்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, அது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக மாறி விடும்’ என்ற அவரது தார்மீக அச்சமாகும்.
பேரரசைத் தனது இராணுவ உத்திகளாலும், உலகமே வியந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டினாலும் மூன்று தசாப்தங்களாக நடுங்க வைத்த தலைவனின் பூதவுடல், மறைந்த பின்னரும்கூட தென்னிலங்கை இராணுவ மேலாதிக்க சிந்தனையை எந்தளவுக்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று எதுவுமில்லை.
சரித்திரத்தில், மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் உடல்களை எதிரிகள் இரகசியமாக அழித்த சம் பவங்கள் பல உண்டு. சேகுவேரா முதல் உலகெங்கும் உள்ள பல புரட்சியாளர்கள் வரை, உடல்களை மறைப்பதன் மூலம் அவர்களின் சித்தாந்தங்களை அழித்துவிடலாம் என்று ஆட்சியாளர்கள் கணக்குப் போட்டார்கள்.
பொன்சேகா நிலைநாட்ட முற்படுவதும் அதை யொத்த அடக்குமுறை உத்தியைத்தான். ஆனால், அவர்கள் மறந்துபோன யதார்த்தம் என்னவெனில், பிரபாகரன் என்பவர் வெறும் சதைப்பற்றுகளான மனித உடல் அல்லர். அவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கூட்டு மனச்சாட்சியின் வடிவம்.
அநீதிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் குறியீடு. நந்திக்கடலின் எந்த இரகசியப் புதருக்குள் அவரது உடலுக்கு என்ன செய்தோம் என்பதை பொன்சேகா மறைத்தாலும், முள்ளிவாய்க்கால் மண்ணின் ஒவ்வொரு துகளிலும், தமிழர்களின் நினைவலைகளிலும் அவரது தியாகத்தின் சாட்சியம் அழியாமல் பதிந்தே கிடக்கிறது.
பொன்சேகாவின் நேர்காணலில் மற்றொரு அதிர்ச்சிகரமான, ஆனால் உண்மையை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. ‘பிரபாகரன் உயிருடன் பிடி பட்டால் அவரை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி வட-கிழக்கு முதலமைச்சராக்கக் கூடும் என்பதால், அவரை உயிருடன் பிடிப்பதல்ல, மாறாகப் போர்க்களத்தில் முற்றாக ஒழிப்பதே தனது இராணுவத் திட்டமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், இறுதிப் போரில் சர்வதேச யுத்த விதிகளோ அல்லது சரணடைதல் போன்ற மனிதாபிமான நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்பதும், திட்ட மிட்ட இனப்படுகொலை உத்தியே கையாளப்பட்டது என்பதும் அம்பலமாகியுள்ளது. ஆனால், இந்த உத்தியைக் கடந்து உற்றுநோக்க வேண்டியது தலைவர் பிரபாகரனினதும், அவரது தலை மையிலான விடுதலைப் புலிகளினதும் உன்னதமான தியாகப் பண்பாகும்.
உலகின் எத்தனையோ போராட்டத் தலைவர்கள் போரின் இறுதி கட்டத்தில் அண்டை நாடுகளுக்குத் தப்பியோடி அரசியல் தஞ்சம் புகுந்த வரலாறுகள் உண்டு. தங்களின் உயிரைக் காத்துக் கொள்வதற்காகக் கொள்கைகளை அடகு வைத்த தலைவர்களும் உண்டு.
அவர்களுக்கு மத்தியில், இறுதி நொடி வரை தனது மக்களோடும், எஞ்சிய போராளிகளோடும் நந்திக்கடல் களப்பிலேயே நின்று சமரசம் ஏதுமின்றிப் போரிட்டு மடிந்த தலைவர் பிரபாகரனின் தியாகம் உலக வரலாற்றில் என்றுமே உன்னதமானது.
பிரபாகரன் நினைத்திருந்தால், சர்வதேசத் தொடர் புகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியும். ஆனால், ‘என் மக்களுடன் என் மண்ணில் மடிவேன்’ என்ற அவரது அசைக்க முடியாத கொள்கை உறுதி தான் அவரை சாதாரண அரசியல்வாதியாக அல்லாமல், ஈகத்தின் உச்சமாக வரலாற்றுப் பக்கங்களில் செதுக்கியுள்ளது.
பொன்சேகா விவரிக்கும் அந்தச் சிதைந்த உடலமைப் பும், கனரக ஆயுதங்களின் கொடூரத் தாக்குதல்க ளும், விடுதலைப் புலிகளின் தலைவர் எத்தகையதொரு உக்கிரமான இறுதிப்போரை எதிர்கொண்டார் என்பதையும், மரணத்தைக் கண்டு அவர் அஞ்சாமல் களத்திலேயே தியாகியானார் என்பதையும் தான் உலகிற்கு உரத்துச் சொல்கிறது.
போர்க்களத்தில் பிரபாகரனின் உடல் கண்டெடுக் கப்பட்ட போது, அவர் அணிந்திருந்த விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையை உடனடியாகக் கழற்றுமாறு தான் கட்டளையிட்டதாகப் பொன்சேகா பெருமையுடன் கூறியுள்ளார்.
பன்னிரண்டாயிரம் போராளிகள் சரணடைந்த போது சீருடை அணிய அனுமதிக்கவில்லை என்ற போர்க் கால விதியை இதற்குக் காரணமாக அவர் கூறுகிறார். எனினும், போராளி தனது இறுதி மூச்சு வரை அணிந்திருந்த சீருடையை, அவர் இறந்த பின்னரும் கழற்றச் சொன்னதன் பின்னணியில் இருப்பது வெறும் இராணுவ விதி அல்ல.
அதுவொரு மாபெரும் விடுதலை இயக்கத்தின் அடை யாளத்தை, அதன் அங்கீகாரத்தை வரலாற்றிலிருந்து துடைத்தெறிய முயற்சித்த பேரினவாத வன்மத்தின் வெளிப்பாடாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஏதோ வொரு சாதாரண இயக்கம் அல்ல. அது தமக்கென ஒரு தரைப்படை, கடற்படை (கடற்புலிகள்), வான்படை (வான்புலிகள்), காவல் துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புகளைக் கொண்டு, நிழல் அரசாங்கத்தையே நடத்திய மரபுவழி இராணுவக் கட்டமைப்பாகும்.
அவர்களின் சீருடை என்பது தமிழர்களின் சுய மரியாதையினதும், இறையாண்மையினதும் அடையாள மாக விளங்கியது. அந்தச் சீருடையை அகற்றுவதன் மூலம், அவ்வியக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை சிறு மைப்படுத்திவிடலாம் எனப் பொன்சேகா போன்றவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆனால், சீருடைகளைக் கழற்றியதாலோ, உடல் களை இரகசியமாக அழித்ததாலோ முப்பது ஆண்டுகாலம் தமிழினம் சிந்திய குருதியும், சுமந்த தியாகங்களும் மறைந்து போகாது. மாறாக, எதிரியின் இத்தகைய சிறுமைத்தனமான நடவடிக்கைகள், அந்தப் போராட்டத்தின் தூய்மையையும் அதன் தலைவனின் தியாகத்தையும் மேலும் பிரகாசமாக்கி அடுத்த தலைமுறைக்கும் இயல்பாகவே கடத்துகின்றது.
சரத் பொன்சேகாவும் தென்னிலங்கை அரசும் இறுதிப் போரின் வெற்றியைத் தங்களின் உன்னத இராணுவ சாதனையாகக் கொண்டாடினாலும், அரசியல் ரீதியாக அவர்கள் இன்னும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டச் சிந்தனையை வெல்ல முடியாமல் தோற்றுத்தான் இருக் கிறார்கள்.
தலைவர் பிரபாகரனின் தூரநோக்குச் சிந்தனை என்பது வெறும் ஆயுதங்களின் பலத்தில் மட்டும் தங்கி யிருக்கவில்லை. அது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி என்ற தத்துவார்த்த அடித்தளத்தில் கட்டமைக் கப்பட்டதாகும்.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய  யதார்த்தம் என்னவெனில், தென்னிலங்கையின் எந்த வொரு அரசியல் கட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு சமவுரி மையையோ அல்லது நீதியான அரசியல் தீர்வையோ தாராளமாக வழங்கிவிடப் போவதில்லை என்பதாகும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதும், தமிழ் மக்கள் இன்னும் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருப்பதும் பிரபாகர னின் அந்தத் தூரநோக்கு அரசியல் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபிக்கின்றது.
பிரபாகரன் விதைத்த உரிமைப்போராட்ட சிந்தனை என்பது ஒருபோதும் மரணிப்பதில்லை. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அந்த ஆயுதங்களை ஏந்த வைத்த அடக்குமுறைகளும், அநீதிகளும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.
‘நாங்கள் ஒரு நியாயமான இலட்சியத்திற்காகப் போராடுகிறோம்; அந்த இலட்சியம் மக்களின் இதயங்களில் வாழ்கிறது’ என்ற அவரது சிந்தனைக்கேற்ப, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தாகம் இருக்கும் வரை பிரபாகரனின் சிந்தனைகளும் அவரது ஈகமும் அழியாது.
பொன்சேகாக்கள் இரகசியங்களை நந்திக்கட லோடு புதைக்கப் பார்த்தாலும், தமிழினம் உலகப் பரப் பெங்கும் பரந்து வாழும் வரை, தங்களின் சுயமரியாதைக் காகவும், விடுதலைக்காகவும் சமரசமின்றி நின்ற அந்த உன்னதத் தலைவனின் தூரநோக்குச் சிந்தனையும், அவர் வழிநடத்திய உரிமைப் போராட்ட வரலாறும் உலக வர லாற்றின் நீங்காப் பக்கங்களாகத் தொடர்ந்து சுடர்விட்டுக் கொண்டே தான் இருக்கும்.