தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி – அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (முதல் பகுதி)-குருசாமி அரசேந்திரன்

538 Views

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழிமொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி என்ற கருப்பொருளில் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முதல் பகுதி

கேள்வி?
மொழியியல் பகுப்பாய்வு என்றால் என்ன என்பதை எமது நேயர்களுக்கு சுருக்கமாக சொல்ல முடியுமா?

பதில்!
மிக்க மகிழ்ச்சி. அதுதான் என்னுடைய கடமை. இந்த மண்ணுலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் எழுநூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன என்று மொழியைப் பற்றிய அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகள் எல்லாம் அறுபது, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மக்களால் பேசப்படத் தொடங்கியது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். 60 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இருந்தார்கள், ஆனால்  மொழியில்லை. அதன் பிறகு இந்த மொழி தோன்றி, நாகரிகம் வளர்ந்தது, அறிவு வளர்ந்தது.

இன்றைய அறிவியல் ஊழி எல்லாவற்றிற்கும் அடிப்படை அந்தமொழி தொடங்கிய பிறகுதான் என்று அறிஞர்கள் எழுதுகிறார்கள். அந்தவகையில் தமிழ் என்ற நம்மொழி எப்பொழுது தோன்றியது. அம்மொழியின் சிறப்பு என்ன என்பதை நானும் தமிழனாகப் பிறந்தவன் என்ற அடிப்படையில், தமிழ் மொழியைக் கற்றவன் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக ஒரு வாசிக்கின்றவனாகவும், ஆய்வாளனாகவும் இருந்து வருகின்றேன்.  இதைப் பற்றி நிறைய நூல்கள் எழுதியிருக்கிறேன். நிறைய பேசியிருக்கிறேன். யூரியூப்பில் குருசாமி அரசேந்திரன் என்றுதேடிப் பார்க்கலாம்.

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழிதாய் தமிழ்த் தாய் Tamil Mother Tamil என்ற தலைப்பிலே பத்து சொற்பொழிவுகள் மாதந்தோறும் ஒரு ஒரு மணி நேரம் நிகழ்த்தி அது சிறந்த முறையிலே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலண்டனிலிருந்து தமிழன்பர்கள் அதை இணைத்து அதை வெளியிட்டார்கள்.  சிக்காகோ மாநாட்டில் 2019இலே ஒரு நூலை வெளியிட்டேன்.  பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இந்தோ-ஐரோப்பிய உறவு (Genetic Relationship between Tamil Indo-European) என்பது அந்தப் புத்தகத்தின் பெயர்.  சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்குவதற்கு முன்பு சிட்னி மாநகரத்தில் பேரளவில் 2009-க்கு பிறகு தமிழ் மக்கள் குழுமிஎடுத்த விழா என்று பேசப்பட்ட அந்த விழாவில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்   Dr Hugh McDermot அவர்கள் எனது ஆங்கில நூலை வெளியிட்டார்.

இப்பொழுதும் எனது நூல்கள் ஆங்கிலப்படுத்தப்பட்டு, வெளிவரவிருக்கின்றன. முன்பு எழுதிய நூல்கள் பலவும் தற்போது அச்சில் இல்லை. ஆதலால் மறுபதிப்பு செய்ய வேலை நடந்து வருகிறது.  இந்த ஆய்விலே கண்டது  என்னவென்றால்,  முதலில் தோன்றிய மொழி, மாந்தன் பேசத் தொடங்கிய முதல் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்ற ஒரு கருதுகோள். பாவாணர் அதைப் பற்றி எழுதினார்.   இன்றைக்கு மேலை நாட்டிலே மூலமொழி ஆய்வு  mother tongue studies,  Nostratic studies   என்ற தலைப்பில் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பேசப்படுகின்ற மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அந்த மூலமொழி எது என்பதைப் பற்றி இன்று ஆய்வு செய்கிறார்கள். நிறைய நூல்களும் அதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மொழியிலிருந்து பலமொழி வந்தது என்று சொல்லலாம். அப்படியென்றால், ஒரு மொழிக்கு மற்ற மொழிகளோடு உறவு இருக்கிறது. மற்ற மற்ற மொழிகளோடும் உறவு இருக் கிறது.  உலகெங்கும் பரந்து வாழும் மக்கள் குலம் பேசும் மொழிகளெல்லாம், ஏதோ ஒரு வகையில்  ஒன்றோடு ஒன்று உறவாக இருக்கிறது என்பது மட்டும் நிறுவப்பட்ட உண்மை. அப்படி என்றால் இவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்றாக வந்ததா? அப்படி என்றால் அந்த ஒன்று எது? அது தான் Nostratic studies என்பது. அதாவது ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்குமான முதல் தாய் யார் என்பது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பேசப்படும் மொழிகள் அனைத்துக்குமான மூலமொழி தென்னிந்தியாவில் தான் தோன்றியது.

தென்னிந்தியா என்றால்,  தென்னிந்தியாவில் பழைய நாகரிகம் உடைய இனம் என்றால் அது தமிழினம் தான்.  பழைய மொழி என்றால் அது தமிழ் தான். எனவே ஒரு நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்த தமிழ் என்பது வெறும் தமிழ்நாட்டு மக்கள் மொழி அல்ல, தமிழ் ஈழத்தில் பேசப்படுகிற மக்கள் மொழியல்ல,  இந்த மொழி இந்தியாவின் தொன் மொழி.  ஏன் ஐரோப்பா மக்களுக்கும்  மூலமான மொழி. அதுதான் தென்னகத்தில் தோன்றிய மொழி என்ற கருத்து இன்றைக்கு மேல்நாட்டு அறிஞர்களுக்கும்  வந்திருக்கிறது. இவர்கள் இந்த கருத்துக்கு இன்றைக்கு வருவார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் இந்த  ஆய்வை செய்யவில்லை.

நான் கால்டுவெல் வழியில் பாவாணர் வழியில் ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இது தொடர்பான நூல்களை எழுதத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டிருக்கிறேன். இன்றைக்கு இந்தக் கருத்தினை மேல் நாட்டு அறிஞர்களின் கருத்தோடு நினைத்துப் பார்க்கும் போது, நாம் பயன் உடைய வகையிலே உழைத்திருக்கிறோம். பயனுடைய வகையிலே தமிழினுடைய முதன்மையைக் கண்டிருக்கிறோம்  என்ற ஒரு மனநிறைவு இருக்கிறது. அந்த வகையில், அதிகமாக உறவுபடுத்தப்பட்டது தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழியுறவு தான். இலத்தீன், கிரேக்கம், ஜேர்மன், பிரெஞ்ச் என்று இன்று ஐரோப்பாவிலே வழங்குகின்ற மொழிகள், கீழை நாட்டிலே வழங்குகின்ற சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகள் எல்லாமே இந்தோ ஐரோப்பிய மொழிகள். இவை அனைத்தும் வேறு வேறு மொழி குடும்பமாக சொல்லப்பட்டது உண்மை.

நாம் அனைவரும் ஒரு நூறு ஆண்டுக்கு முன்பு ஒரே குடும்பத்திலிருந்து அந்த தாத்தா பாட்டியிலிருந்து கிளைகளாக கால் முளையாக வளர்ந்து வளர்ந்து  விரிந்து விரிந்து பல குடும்பங்களாக இன்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு 128 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் வெள்ளைக்காரன் காலத்தில் பாரதி  முப்பதுகோடி மக்கள் என்று தான் பாடினான்.  30 கோடி மக்கள் தான் 128 கோடி மக்கள் ஆனார்கள். அப்படி இன்றைக்கு 700 கோடி மக்கள் உலகத்தில் இருந்தாலும், ஆயிரம் ஆண்டுக்கு முன்பு எவ்வளவு 2000 ஆண்டுக்கு 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே எவ்வளவு என்று பார்த்தால் ஒரிரு கோடி மக்கள் தான் இருந்தார்கள்.

குகை ஓவியம்

குகை ஓவியம்ஆபிரிக்காவில் தொடங்கிய ஹோமோ சப்பியன் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்டவன் அவனுடைய கிளையினர் தான் இன்றைக்கு இருக்கிறவர்கள்.  எழுபது எண்பதாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே தென்னகத்திற்கு வந்து விட்டார்கள். மொழி தோன்றியது அறுபது எழுபதாயிரம் ஆண்டுகள்தான். இக்காலப் பகுதியில் தோன்றிய மொழி எது என்பது தான் கேள்வி அதைப்பற்றி தமிழ் தான் என்பதற்கு என்ன சான்று என்றால் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் பேசும் மொழி  தமிழோடு உறவுடையது என்று மேல் நாட்டு அறிஞர்கள் கண்டு பிடித்தார்கள்.  அவுஸ்திரேலியாவிற்கு நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பழங்குடியினர் சென்று விட்டார்கள்.

அவர்கள் வாழ்ந்த குகையிலே ஓவியம் இருக்கிறது. அந்த ஓவியத்திலே குளவி கூடுகட்டி யிருக்கிறது. அந்தக் குளவிக்கூட்டை பகுப்பாய்வு செய்து பார்த்த போது அது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட குகை ஓவியம் என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் அப்போதே அங்கு போய்விட்டார்கள். அதை கருத்து வேறுபாடு இல்லாமல் அறிஞர்கள் எழுதுகிறார்கள்.

அந்த மொழியோடு தமிழ் உறவுடையதாக இருக்கிறதென்றால், அதற்கு முன்னரே தமிழ் இந்தப் பகுதியில் இருந்திருக்க வேண்டும். அங்கு தமிழுடன் தொடர்புடைய சொற்கள் பழக்கத்தில் இருந்தன. காலின் மாசியா என்ற அறிஞன் சொன்னான். தென்பகுதியிலே தோன்றிய மூல இனம் தமிழினம். அறுபது எழுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொல் தமிழர்கள் தான் உலகத்தின் முதல் குடிகளாக இருந்திருக்க வேண்டும்.

முன்னர் சொல்லி வந்தார்கள். மத்திய ஆசியாவிலிருந்து நாமும் பலிசிஸ்தான், சிந்துவெளி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து ஈழம் வரையிலே சென்றோம் என்று தான் சொல்லி வந்தார்கள். நாங்கள் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்திற்கு வந்திருந்தால் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற பழங்குடி மக்களின் மொழிக்கு தமிழ் எவ்வாறு சென்றிருக்க முடியும். இல்லை தவறான கருத்து இதுவரை சொல்லப்பட்டது. ஆபிரிக்காவில் மாந்தர் இனம் புறப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் மொழிபேசி வளர்ச்சி பெறவில்லை.

கடல் கொண்ட தென்னாடு நீண்ட நெடிய நிலப்பரப்பு இலங்கையை ஒன்றாக்கி கொண்டிருந்த நிலப்பரப்பு வரலாற்றில் இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.  நீண்ட நிலப்பரப்பு இருந்தது. நெடிய மக்கள் இருந்தார்கள். கடல் மட்டம் தாழ்வாக இருந்தது.  அவுஸ்திரேலியாவிற்கு அப்படியே நகர்ந்து விட்டார்கள். இந்தியா முழுவதும் தமிழ் இருந்தது.  பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இலங்கையையும், ஈழத்தையும் உள்ளடக்கிய பழம்பெரும் இந்திய நிலப்பரப்பில் இருந்த ஒரு பெரும் கூட்டத்தினர் மேற்கு நோக்கி சென்றார்கள்.

மூல மொழியாகிய தமிழை மிக ஆழமாக பெரும் பேரறிஞர்களிடத்தில் கற்று அதையே வாழ்நாள் பணியாக கொண்ட காரணத்தால் தமிழ் தான் இந்த மூலமொழி என்பதை மேலே உலகத்திற்கும் அனைத்துலகத்திற்கும் சொல்லுகின்ற வகையில் பல கருத்துக்களை நான் நாலாயிரம் பக்கத்திற்கு குறையாமல் எழுதியிருக்கிறேன். இன்றைக்கு உலகம் முழுக்க பேசப்படுகின்ற இந்த ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் என்று ஒரு நாளைக்கு இலக்கமுறை அந்தச் ஒலிக்கப்படுகிறது.  அந்த காபூலில் என்ற அந்தச் சொல் எவ்வாறு வந்தது என்பதை நான் எழுதியிருக்கிறேன். காபூல் என்றால் என்ன? என்பதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

தமிழ் மொழியின் ஆழத்தை முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கண்ட காரணத்தினால், இதன் பெருமையை விளக்குவது தான் எனது பிறவிப்பணி. என் வாழ்க்கைப் பணிஎன்று நான் இயங்கினேன். இயங்கிக் கொண்டிருக்கிறேன். எஞ்சிய காலமும் இயங்குவேன்.  எனது ஆய்வுகளைப் படித்தார்கள் என்றால், தமிழ்மொழி உயர்ந்த மொழியாக இருக்கும் என நினைப்பார்கள். ஆனால் தமிழர்கள் இந்த மொழியை நேசிக்கமாட்டார்கள். இந்த ஆய்வையும் போற்றமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் எல்லாம் திசை மாறிப்போன பறவைகளாக வரலாற்றிலே கரைந்து, கலைந்து போனவர்கள். அந்த இனத்தையும் நிலைநிறுத்தி, மீட்டு, வரலாற்றில் மீண்டும் பண்டைய பழம்பெருமையைப் பெறவேண்டும் என்று உலகத்தில் ஒருவர் தான் நினைத்தார். அவர்தான் மேதகு வே.பிரபாகரன். செயல் முந்தி, பேச்சுப் பிந்தி என்று சொல்லுவார் தேசியத் தலைவர் அவர்கள். உலகில் எந்த அறிஞனும் இந்தக் கருத்தை இவ்வளவு எளிமையாக சொன்னதில்லை.

வரலாற்றில் இந்த இனம் அழிந்து போகக் கூடாது. இந்த மொழி அழிந்து போகக் கூடாது. மக்களுக்கு இதை முதலில் உணர்த்த வேண்டும். அதன் பிறகு உலகத்திற்கும் இதை உணர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

இறுதிப் பகுதி

Leave a Reply