தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்

319 Views

புதிய அணி உருவாகின்றதா?

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்ந்து ஏதாவது நடைபெறுகின்றதோ இல்லையோ, தமிழ்க் கட்சிகளிடையேயான தலைமைத்துவப் போட்டியை இது தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்குள் ஜெனிவாவுக்கான கடிதம் தொடர்பில் பிளவு என்ற செய்தி முதலில் வெளிவந்தது. ஆனால், தமிழரசுக் கட்சிக்குள்ளும் தெளிவான ஒரு பிளவை ஜெனிவா ஏற்படுத்தியிருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், சிறிதரனும் இவ்விடயத்தில் முரண்படுகின்றார்கள் என்பது வெள்ளிக்கிழமை இருவரும் தனித்தனியாக – ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்கள் வெளிப்படுத்தி யிருக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் 48 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எனச் சொல்லக்கூடிய கட்சிகளிடையே ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ரெலோ முன்னெடுத்தது. பொதுவான சில விடயங்களில் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என தமிழ்க் கட்சிகளால் அடையாளம் காணப்பட்ட விடயங்களில் ஜெனிவா விவகாரமும் ஒன்று. அதற்காக மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பது குறித்து இணக்கம் ஏற்பட்டது தொடர்பாகவும், பின்னர் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையிட்டும் கடந்த வாரம் இந்தப் பந்தியில் பார்த்திருந்தோம்.

புதிய அணி உருவாகின்றதா?இந்த செயற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்திருக்கவில்லை. அதேவேளையில், சுமந்திரன் தயாரித்த கடிதம் தாமதமானதால், புளொட், ரெலோ என்பவற்றுடன் விக்னேஸ்வரன், அணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து அமைப்புக்களும் இணைந்து தயாரித்த கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டது. இதனால், தனிமைப்படுத்தப்பட்ட தமிழரசுக் கட்சி தனியாகத் தயாரித்த கடிதம்தான் கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கடிதம் புயலைக் கிளப்பியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் கடிதம்

தமிழரசுக் கட்சிக் கடிதத்தின் உள்ளடக்கத்தில் இருந்த ஒரு பகுதிதான் இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். “விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்ற அர்த்தத்தில் அதன் உள்ளடக்கத்தில் காணப்பட்ட விடயம்தான் தமிழரசுக் கட்சியில் உருவான சூறாவளிக்குக் காரணம். ஐ.நா. ஆணைக் குழுவின் சார்பில் வெளியான தருசூமன் அறிக்கையில் காணப்பட்ட விடயமே இது. அதனை சுமந்திரன் தயாரித்த அறிக்கையில் உள்ளடக்கியிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் கடிதம்தமிழரசுக் கட்சியின் எம்.பி.க்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் உட்பட முன்னாள் எம்.பி.க்கள், உட்பட தமிழரசுக் கட்சியின் 9 முக்கியஸ்தர்களுக்கு கடும் சீற்றத்தைக் கொடுத்திருக்கின்றது. அவர்கள் தனியாகக் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஆணையாளருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. தாம் தனியான கடிதம் ஒன்றைத் தயாரித்து, குறிப்பிட்ட ஒன்பது பேரிடமும் கையொப்பங்களைப் பெற்றது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்ட சிறிதரன், ஆனால், அந்தக் கடிதத்தை அனுப்பவில்லை என வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கடிதம், ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டது அல்ல எனவும், அதில் காணப்பட்ட விடயங்களைத் தம்மால் ஏற்க முடியாது என்ற நிலையிலேயே அதில் கையொப்பமிட தாம் மறுப்புத் தெரிவித்ததாகவும் சிறிதரன் குறிப்பிட்டார். கடிதம், தமிழரசுக் கட்சிக்குள் புயலைக் கிளப்ப கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கையொப்பங்களைப் பெறுவதும் சாத்தியமற்றது என்பதைக் கண்டுகொண்ட சம்பந்தன், தான் மட்டும் கையொப்பமிட்ட நிலையில் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் பெயரில் சம்பந்தன் மட்டும் கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது முக்கியமானது. ஆக, பங்காளிக் கட்சிகளின் சம்மதத்தைப் பெறாத ஒரு கடிதத்தைத்தான் சம்பந்தன் அனுப்பி வைத்திருக்கின்றார். மறுபுறம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரன், சுரேஷ், சிறிகாந்தா ஆகியோருடன் இணைந்து தனியான ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். யார், யாருடன் நிற்கின்றார்கள் என்பதே புரியவில்லை.

சுமந்திரனின் அவசர வருகை

தமிழரசுக் கட்சிக்குள் கடித விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலையில்தான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை சுமந்திரன் அவசரமாக யாழ்ப்பாணம் வந்தார். நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அவசரமாக சுமந்திரன் யாழ்ப்பாணம் வந்தமைக்கு காரணம் உள்ளது. யாழ். வந்த சுமந்திரன் உடனடியாகவே தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் அழைத்து அருகில் வைத்துக்கொண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை யாழ். மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்தினார்.

சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக இருந்தன. முதலாவதாக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழரசுக்கட்சி கடிதம் எழுதியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், அது விசமனத்தனமான பொய்ப் பிரசாரம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார். அதனைவிட, பங்காளிக் கட்சிகள் தனியாகச் சென்று கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியமையையும் சுமந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

எதிர்த் தரப்பினரது பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் நோக்கத்துடனேயே அவர் அவசரமாக யாழ்ப்பாணம் வந்து, இந்த ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். ஒரு பக்கத்தில் மாவையையும், மறுபக்கத்தில் சி.வி.கே.சிவஞானத்தையும் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் தான் சொல்பவற்றுக்குத் தலையாட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை சுமந்திரன் வெளிப்படுத்தினார். கிளிநொச்சியில் சிறிதரன் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தும் அதேவேளையில், மாவை, சி.வி.கே. ஆகியோர் தன்னுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவை சுமந்திரனுக்கு இருந்துள்ளது.

தமிழரசின் பனிப்போர்

தமிழரசுக் கட்சிக்குள் அடுத்த தலைமைக்கான பனிப்போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதைத்தான் இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. மாவை தமிழரசின் தலைவராக உத்தியோகபூர்வமாக இருந்தாலும், அனைத்து விடயங்களிலும் தீர்மானம் எடுப்பவராக இருப்பது சுமந்திரன்தான். யாழ். மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பதிலிருந்து, தேசியப் பட்டியல் எம்.பி.யாக யாரைப் போடுவது என்பது வரை மாவை தெரிவை பின்தள்ளிவிட்டு, இறுதி முடிவை எடுத்தது சுமந்திரன்தான். கட்சிக்குத் தலைமை தாங்கக்கூடிய ஆளுமையோ ஆற்றலோ தனக்கு இல்லை என்பதை மாவையர் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றார். கட்சியின் கட்டுப்பாடு சுமந்திரனிடம் சென்றமைக்கு மாவையரின் இந்தப் பலவீனங்கள்தான் காரணம்.

அதேவேளையில், கட்சியின் தலைமைப் பதவி மீது கண்வைத்துச் செயற்படும் ஒருவராக சிறிதரன் உள்ளார் என்பது இரகசியமல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி ஒருவரின் மைத்துனரான சிறிதரன், தன்னை தீவிரமான ஒருவராகவே வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். சம்பந்தனுக்குப் பின்னர் தலைமையைப் பெற்றுக்கொள்வதில் சுமந்திரன் தடையாக இருப்பார் என்ற அச்சம் சிறிதரனுக்குள்ளது. மாவையை முன்னிலைப்படுத்தி கட்சிக் கட்டுப்பாட்டை தனது கைகளில் எடுத்துக்கொள்வதுதான் சுமந்திரனின் உபாயமாக உள்ளது. அதேவேளையில், சம்பந்தனும் தன்னுடைய இராஜதந்திர தொடர்பாடல்களுக்கு சுமந்திரனையே நம்பியிருக்கின்றார்.

இந்தப் பின்னணியில் ஜெனிவாவுக்கான கடித விவகாரத்தில் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் கொந்தளிப்புக்கு கொள்கை ரீதியான காரணம் எதுவும் இல்லை. சுமந்திரனின் கடிதத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்கள் மத்தியில் அவரை அம்பலப்படுத்த சிறிதரன் முயன்றுள்ளார். தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்த முற்பட்டுள்ளார். அதனை உணர்ந்துதான் அவசரமாக யாழ். வந்த சுமந்திரன் அவ்வாறு நான் கடிதம் ஒன்றைக் கொடுக்கவில்லை என மறுத்துள்ளார். ஆனால், கடிதத்தை அவர் வெளியிடவில்லை. எதிர்காலத்தில் கடிதம் வெளியிடப்பட்டாலும், அதுதான் உண்மையான கடிதமா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.!

1 COMMENT

Leave a Reply