மறைந்தும் மறையாத பிரகாஸ் – பிரகாஸ் ஞானப்பிரகாசம் – பி.மாணிக்கவாசகம்

மறைந்தும் மறையாத பிரகாஸ் மறைவுபிரகாஸ்-பிரகாஸ் ஞானப்பிரகாசம் என்ற மறைந்தும் மறையாத பிரகாஸ்  மறைவு தாயகத்திலும் புலம் பெயர் தேச நிலைமையிலும் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது. அந்த 26 வயதுடைய இளைஞன் பெருந்தொற்றுப் பேரரக்கனாகிய கொரோனாவினால் பலி கொள்ளப்பட்டு விட்டதே இதற்குக் காரணம். இதையும்விட அந்த இளைஞன் ஓர் ஊடகவியலாளன். ஒரு மாற்றுத்திறனாளி.

மறைந்தும் மறையாத பிரகாஸ் மறைவுதசைத்திறன் குறைபாட்டு நோயுடன் போராடிய பிரகாஸ் சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டிருந்த நிலையிலும் தற்துணிவும் மனத்திண்மையும் கொண்டு தன்னை ஓர் ஊடகவியலாளனாக உயர்த்திக்கொண்டான்.

யாழ் கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஐந்தாம் ஆண்டு வரையிலுமே கல்வி கற்ற, வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு துரதிஸ்டசாலியாகவே அவன் திகழ்ந்தான்.

சிறுவனாக இருந்தபோதே தசைத்திறன் குறைபாட்டு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நோயை உடனடியாக எவரும் அடையாளம் காணவில்லை. நடக்க முடியாமல் கால்கள் முடங்கிய பின்னரே மருத்துவ பரிசோதனைகளின் மூலம் ஏழாவது வயதில் அவனது இயலாமைக்கான காரணம் கண்டறியப்பட்டது.

‘எட்டு வயதை எட்டியிருந்த நான் நடக்கும்போது என்னுடைய கால்களில் குதிக்கால் பகுத தரையில் படுவதே இல்லை. கால் நரம்பு சிறிய அளவில் சுருங்கி உள்நோக்கி வளைந்து வயிற்றுப் பகுதிய முன்தள்ளியவாறுதான் என்னால் நடக்க இயலுமாக இருந்தது. இத்தகைய குறைபாட்டுடன் நடமாடுவது அவஸ்தை மிக்கதாகவே காணப்பட்டது. அத்துடன் அடிக்கடி தடுமாறி விழுந்தடித்து பின்னர் மீள எழுந்து நடக்க வேண்டிய இக்கட்டான நிலையிலேயே நானிருந்தேன். அப்படித் தடுமாறி விழுந்துவிட்டால் மீளவும் எழுந்து கொள்வது என்பது போராட்டம் மிக்கதாகவே இருக்கும்’ என்று தசைத்திறன் குறைபாட்டு நோய்த் தாக்கத்தின் அனுபவத்தை பிரகாஸ் விபரித்துள்ளான்.

தசைத்திறன் குறைபாட்டு நோய் (Musculer Dystrophy) படிப்படியாக ஆளைக் கொல்லும் ஒரு கொடிய நோய். அதற்கு மருந்துகள் கிடையாது. உடற்பயிற்சி ஒன்றே அதற்கான பரிகாரம் என்பது மருத்துவர்களின் முடிவு. கால்களில் உள்ள தசைகளைச் சுருக்கி இறுகச் செய்து பின்னர் இடுப்பு கைகள் என தடுப்பாரின்றி வளர்ந்து ஆளையே முடித்துவிடும் அளவுக்கு அந்த நோய் வல்லமை உடையது.

பிரகாஸின் கல்விக்காலம் ஊரருகில் அமைந்திருந்த அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு வகுப்புடன் நிறைவுற்றது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் அமைந்திருந்த பரீட்சை நிலையத்தில் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய தினத்துடன் பாடசாலைக் கல்வி முற்றுப் பெற்றது. அதன் பின்னர் முழுமையாக நடமாட முடியாத நிலைமைக்கு ஆளாகி வீட்டினுள் முடக்கப்பட்ட பிரகாஸ் முடிந்த அளவில் வீட்டிற்குள்ளேயே தவழ்ந்து திரிந்ததன் பின்னர் எஞ்சிய வாழ்க்கைக் காலத்தை சக்கர நாற்காலியில் கழிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக நேரிட்டுவிட்டது.

பிறர் தயவின்றி செயற்பட முடியாதிருந்த பிரகாஸை, அவரது தாய் தந்தையரே முழுமையாகக் கவனித்துக் கொண்டனர். வெளியில் நடமாட முடியாத மகனை வைத்தியர்களிடம் கொண்டு செல்வதில் தொடங்கி பின்னர் பொது நிகழ்வுகளில் விசேடமாகக் கலந்து கொள்வதற்காகவும், சமூக ஆவேசம் கொண்டு போராட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும் தந்தையாரே அழைத்துச் சென்று வந்தார்.

இயலாத நிலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் குடித்த தசைத்திறன் குறைபாட்டு நோயுடன் போராடிய நிலையிலும், கணிணியில் பெற்றிருந்த ஆரம்ப அறிவே பிரகாஸை பின்னாளில் ஊடகவியலாளனாகப் பிரகாசிக்கச் செய்தது.

சகோதரனிடம் புகைப்பட வடிவமைப்பைக் கற்றுக்கொண்ட பிரகாஸ், வெளிநாட்டில் இருந்த மற்றுமொரு சகோதரனுடன் உரையாடுவதற்காக ஸ்கைப் தொழில்நுட்பத்தையும் அறிந்து கொண்டான். அந்த சகோதரனின் நண்பர் ஒருவர் பிரகாஜஸுக்காக முகநூல் கணக்கொன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.

முதலில் முகநூலில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி, பின்னர் அதன் நுணுக்கங்களைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டதுடன், இணைய தளங்களில் வெளிவந்த செய்திகளைத் தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றுவதுடன் பிரகாஸின் ஊடகத்துறை வாழ்க்கை ஆரம்பமாகியது.

அவனது முகப்புத்தப் பக்கத்திற்கு வருகை தந்தவர்களும், முகநூலின் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களும் அதில் பதிவேற்றப்பட்ட செய்திகளை ஆர்வத்துடன் வாசித்தனர். பிரகாஸை ஓர் ஊடகவியலாளனாகவே நோக்கினர். இது அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது. ஊக்கத்தைக் கொடுத்தது.

இணையதளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு அப்பால் சொந்தமாக பலருடனும் தொடர்பு கொண்டு செய்திகளைத் தேடிப் பதிவேற்றியதுடன், தன்னை ஓர் ஊடகவியலாளனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

பல வருடங்களாக பிரகாஸ் ஒரு மாற்றுத்திறனாளி, நோயுடன் போராடிக்கொண்டிருக்கின்ற ஓர் இளைஞன் என்பது தெரிய வரவில்லை. அவனுடன் மிக நெருக்கமாகப் பழகிய ஒரு சிலருக்கு மாத்திரமே அது தெரிந்திருந்தது.

முகநூலில் பிரவேசித்து ஐந்து ஆறு வருடங்களின் பின்பே தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை பிரகாஸ் வெளிப்படுத்தினான். அதனைக் கேட்ட பலரும் ஆச்சரியமடைந்தனர். ஒரு மாற்றுத்திறனாளியினால் ஓர் ஊடகவியலாளனாகச் செயற்பட முடியுமா என வியந்தனர்.

அதையும்விட பிரகாஸை கற்றுத் தேர்ந்த ஒருவனாகவே நோக்கியிருந்த பலரும், ஆண்டு ஐந்து வரையிலுமே கல்வி கற்றவன் என்பதை அறிந்ததும் மேலும் ஆச்சரியத்துக்கு உள்ளாகினர். பிரகாஸினுடைய எழுத்துப் பாணியும், விடயங்களை வெளிப்படுத்துகின்ற இலாவகமுமே பலரையும் அவனை ஒரு கைதேர்ந்த ஊடகவியலாளனாக நோக்கச் செய்திருந்தது.

செய்திகளுடன் நில்லாமல் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவனை இணைய தளங்களும் பத்திரிகைகளும் ஊக்குவித்தன. தமிழ் எழுதுவதில் ஆற்றல் மிக்கவனாக மாறியதுடன், கட்டுரைகளைப் பலரும் விரும்பிப் படிக்கும் அளவில் அவற்றை வடிவமைத்து கோர்வையாக விடயங்களைக் கூறிச் செல்வதிலும் திறமையை வளர்த்துக் கொண்டான்.

குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டதையடுத்து, அவை குறித்த செய்திகளை எழுதுவதியதுடன் கட்டுரைகளை எழுதியதால் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் அவற்றைப் பிரசுரம் செய்தன.

பிரகாஸ் எனும் நான்

தனது கட்டுரை எழுதும் ஆர்வத்தை மலையகப் பிரச்சினைகளே தூண்டுகோலாக இருந்தன என, தன்னைப் பற்றிய விபரங்களை வெளியிட்ட முகநூல் பதிவிலும், ‘பிரகாஸ் எனும் நான்’ என்ற தனது சுயசரிதை நூல் எழுத்துப் பிரதியிலும் பிரகாஸ் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகின்றது.

மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே சக்கர நாற்காலியில் முடங்கிய வண்ணம் ஊடகச் செயற்பாட்டின் மூலம் வெளியுலகில் வலம் வந்த பிரகாஸ் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரகாஸ் எனும் நான்தனக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த விடயத்தையும், தசைத்திறன் பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு தடுப்பூசி மருந்து ஏற்ற முடியுமா என்பதில் தெளிவான தகவல்கள் கிடைக்காமை, தனக்கு தடுப்பூசி மறுக்கப்பட்டதான தகவலையும் தனது டுவிட்டர் பதிவில்; ஆங்கிலத்தில் வெளியிட்டதன் மூலம் சர்வதேச அளவில் பிரகாஸுடைய மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த அதிர்ச்சி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் மாற்றுத்திறனாளிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டியவர்களாகவே உள்ளனர். குறிப்பாக பிரகாஸ் போன்று நோய்களுக்கு உள்ளாகி இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

தசைத்திறன் பாதிப்பு, முள்ளந்தண்டு வடம் பாதிப்பு, அவயவங்கள் செயலிழந்தமையினால் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமல்லாமல், பொதுவான தொற்றா நோய்களுடன் வாழ்கின்ற மாற்றுத்திறனாளிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசேட நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்குத் தடுப்பு மருந்து ஏற்ற முடியுமா இல்லையா என்பதை மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறிந்து அது பற்றிய தெளிவை வைத்தியர்களுக்கு வழங்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாஸுடைய விடயத்தில் தசைத்திறன் பாதிப்பு நோய்க்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூச் வழங்க முடியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் அதுபற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு  வெளியாகவில்லை. இதனால் பிரகாஸிpன் மரணத்தைத் தடுத்து நிறுத்தி இன்னும் சில காலம் அவன் உயிரிவாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அந்த மனிதாபிமான, மனிதநோய தார்மீக பொறுப்பில் இருந்து அரசும் அதிகாரிகளும் தவறியிருப்பதையே பிரகாஸினுடைய உயிரிழப்பு உணர்த்தி இருக்கின்றது.

ஊடகவியலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதில் கவனமும் அக்கறையும் செலுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் மாற்றுத்திறனாளிகளான ஊடகவியலாளர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

மாற்றுத்திறனாளிகளாகிய ஊடவியலாளர்கள் குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளிப்படாதுள்ள போதிலும், அவர்கள் குறித்து இந்த கொரோன பெருந்தோற்றுப் பேரிடர் காலத்தில் கவனமும் கரிசனையும் செலுத்தப்பட வேண்டும் என்பதை பிரகாஸின் உயிரிழப்பு நினைவுறுத்தி இருக்கின்றது.

மறுபுறத்தில் பிரகாஸ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞன் உயிர் குடிக்கும் நோயுடன் போராடிய நிலையிலும் உளத் திண்மையுடன் செயற்பட்டு வாழ்க்கையில் முன்னேறியமை, இயலாமை காரணமாக வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று மனச்சோர்வுக்கு உள்ளாகி இருக்கின்ற ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை, கணிணி மற்றும் திறன்பேசிகளில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குறுகிய வட்டத்தில் முன்னேற்றமின்றி செயற்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கும் பிரகாஸின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

உயிர்வாழ்வதற்கான போராட்டத்திற்கு மத்தியிலும் தன்னை ஓர் ஊடகவியலாளனாக வளர்த்துக் கொண்ட பிரகாஸை உயிருடன் இருந்த போது தமிழ் ஊடகத்துறை சரியாக அடையாளம் காணத் தவறியிருந்தமை கவலைக்கு உரியது.

ஊடகவியலாளனாக மட்டுமல்லாமல் பெருந்தோட்டத்துறை மக்களின் சம்பளப் பிரச்சினைக்காக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று நேரடியாகக் கலந்து கொண்டு தன்னை வெளிப்படுத்திய பிரகாஸிற்கு அமரர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் நினைவு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. ஆனால் ஊடக அமைப்புக்கள் அவனை சரியாக இனங்காணவோ ஊக்குவிக்கவோ தவறிவிட்டது என்பது கவலைக்கு உரியது.

அதேபோன்று அவருக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஊடக நிறுவனங்களும்கூட அவரை உற்சாகப்படுத்தி, ஊக்குவிக்கும் வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதுவும் கவலைக்கு உரியதே. எனினும் ஊடகத்துறையில் தனது பெயரைப் பொறித்துச் சென்றுள்ள பிரகாஸின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அவருடைய நினைவாக தமிழ் ஊடகத்துறை ஏதாவது செய்ய வேண்டும். அது அனைத்து ஊடகவியாளர்களினதும் தலையாய கடமையும் பொறுப்புமாகும்.