தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன் –

கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு

பாரதியின் மறைவின் நூற்றாண்டு 12.09.2021. கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு:  பாரதி குறித்துப் பல்வேறு பார்வைகள், பல்வேறு நிலைகளில், பல்வேறு படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதியின் தனியடையாளமாக விளங்கியது; அவரின் தன்னாட்சிக் கோரிக்கை என்பதையும், அதனை நூறாண்டாகியும் தமிழர்களால் அடைய முடியாதிருக்கிறது என்பதையும் இந்நாளின் பின்னணியில் எடுத்து நோக்குவது காலத்தின் தேவையாக அமைகிறது.

மகாகா பாரதி
மகாகவி சுப்ரமணிய பாரதியார்

பாரதி அதுவரை வாழ்ந்த தமிழ்க் கவிஞர்களில் இருந்து எந்த விடயத்தில் வேறுபட்டுத் தனக்கான தனியடையாளத்தை ஏற்படுத்துகிறான் என்ற கேள்வி; அவனை ஏன் மகாகவியென தமிழ்கூறு நல்லுலகம் அவன் மறைந்து நூறாண்டாகியும் கொண்டாடுகிறது என்பதற்கான விடையாக அமையும்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஓப்பிலாத சமுதாயம்

உலகத்துக் கொரு புதுமை – வாழ்க

என்ற பாரதியின் வாழ்த்தொலி, அதுவரை தமிழ் இலக்கிய உலகில் கம்பனின் காலத்தின் பின் பேசப்படாதிருந்த சமபகிர்வை மீளவும் பேசியது.

கம்பன் முடியாட்சிக்கு எதிராக எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்திடும் நிலைதனை கல்வியினை எல்லார்க்கும் கிடைக்க வைப்பதன் வழி உருவாக்கலாமென்றும், அந்நிலை சமபகிர்வு நிலையினை உருவாக்கும் என்றும் எடுத்துரைத்தான்.

கல்லாது பிறர் இன்மையின் கல்வி முற்ற

எல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை

எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ

என்பது கம்பனின் மார்க்சியத்திற்கு முன்னதான சமபகிர்வுக்கான தீர்வு கூறும் பாடல். இதன் வழி கல்வியில் வல்லார் ஆக்குவதன் மூலம் ஒரு படிப்பறிவுச் சமுதாயத்தை உருவாக்கி, நாட்டில் சமமின்மையை உருவாக்குதல் என்னும் உத்தி அரசியலில் முடியாட்சிக் காலம் முதல் ஆங்கிலம் படித்தோர் குழாத்தை உருவாக்கி, படித்தோர் குழாத்து ஜனநாயக ஆட்சிகளை உருவாக்கிய பிரித்தானிய காலனித்துவ ஆட்சி வரை, மக்களைப் பிரித்தாள்வதற்கான தொடர் அரசியல் தந்திரோபாயமாக இருந்து வந்துள்ளது என உணர வைக்கிறது. இந்தப் பிரித்தாளும் தந்திரம் நாட்டின் பாதுகாப்பினை உடைத்த பின்னரே நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை எடுத்துரைக்கும் வகையில்தான், கம்பனின் மேற்சொன்ன பாடலுக்கு முதல் பாடலில் கம்பன்

தௌ்வார் மழையும் திரை ஆழியும் உட்க, நாளும்

வள்வார் முரசம் அதிர் மாநாகர் வாழும் மாக்கள் –

கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்

கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ

எனப்பாடி, நாட்டின் தேசியப் பாதுகாப்பு பலமாக அமையும் பொழுது அங்கு கள்ளத் தன்மையும், சுரண்டலும் இல்லாது போகையில் இரத்தலும் இரந்து வாங்கி அடிமையாதலும் இல்லாத நிலை இயல்பாகும் என பாதுகாப்பான அமைதியே சமூக உள்வாங்கலையும், மக்களுக்குச் சக்தி வழங்கலையும் செய்யும் என்பதை இன்தமிழால் எடுத்துரைத்தான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்

பூமிதனிலேயாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற்கேளிர்

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

எனப் பாட்டால் தமிழ்த் தேசிய உணர்வினை அறிவாக்கிய பாரதி, தமிழர்கள் வழியில் அவன் காலத்தில் உலகின் பாட்டாளி மக்களின் விடுதலைக்கான அரசியல் தத்துவமாக எழுச்சியுற்ற கம்பனின் முடியாட்சிக் கால தத்துவச் சித்தையில் இருந்து மார்க்சியத்தின் பொதுவுடமை என்னும் புதிய சித்தைக்குள் வார்த்துத் தன் பாடலில் முதன்மைப்படுத்தி சாதி, இன, மத,மொழி, பிரதேச வேறுபாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை நாட்டுப்பற்று, மொழிப்பற்று கொண்டெழுகின்ற புதிய தேசமாக விடுதலை வேட்கை கொண்டெழுதல் நடைமுறைச் சாத்தியமாவதற்கு பொதுவுடைமையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினான்.

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே

வாழி கல்வி செல்வம் எய்தி

மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

வைய வாழ்வு தன்னில்எந்த

வகை யினும்ந மக்குள்ளே

தாதர் என்ற நிலைமை மாறி

ஆண்களோடு பெண்களும்

சரிநி கர்ச மான மாக

வாழ்வம் இந்த நாட்டிலே

என மனித சமத்துவம் ஆண்பெண் சமத்துவம் விடுதலைக்கான முன்நிபந்தனை என்பதைத் தமிழர் மனதிருத்திய பாரதி, ஒரு மனிதனது துன்பமானாலும் அது சமூகத்தின், பொருளாதாரத்தின், அரசியலின், மதத்தின் அடக்குமுறை ஒடுக்குமுறை, மேலாண்மையின் விளைவு என்பதை உணர்ந்தான். இதனால் தான்

இனியொரு விதி செய்வோம் – அதை

எந்நாளும் காப்போம்

தனியொருவனுக் குணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்.

ஏன தனிமனிதனது சுதந்திர இழப்பு என்பதற்கான போராட்ட எழுச்சிக்கு வித்திட்டான்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்ட மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் வாழ்க

எனப் பாரதி தொடர்ந்து பாடிய பின்னணியில்தான் சுயராஜ்ஜியம் – தன்னாட்சியே இந்த நிலையை உருவாக்கும் என்பதில் உறுதி பூண்டான். பாரதியின் பத்திரிகை எழுத்துக்கள் எல்லாமே இந்த தன்னாட்சியை முதன்மைப்படுத்தியே வளர்ந்திருப்பதைக் காணலாம். பெல்ஜியம் தன்னாட்சி முயற்சியில் யேர்மனியிடம் தோல்வி கண்ட நேரத்தில் மனம் வெதும்பி

அறத்தினால் வீழ்ந்து விட்டாய்

அன்னியன் வலியனாகி

மறத்தினால் வந்து செய்த

வன்மையைப் பொறுத்தல் செய்யாய்

கவிதா ஆணையிடுவதைக் காணலாம். அவ்வாறே இலெனின் ரஸ்யப் புரட்சியினைப் பாடிய முதற் தமிழ்க்கவிஞனாகவும் தன்னை முன்னிறுத்திய பாரதி

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமை நீதி

கடியொன்றி லெழுந்ததுபார் : குடியரசென்று

உலகறியக் கூறிவிட்டார்

அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது

அடிமையில்லை அறிக என்றார்

இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்

கிருதயுகம் எழுக மாதோ!

எனப்பாடி பாரதி விநாயகர் அகவலில் பிரகடனப்படுத்திய

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி

முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி

உடலை இரும்புக்கிணையாக்கிப்

பொய்க்குங் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மெய்க்குங் கிருதயுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே

என்னும் சூளுரையில் கிருதயுகம் என்னும் பாதுகாப்பான அமைதிக் காலம் மீளவும் பொதுவுடைமைச் சமுதாயத்தில் அமையும் என தமிழ் கூறு நல்லுகிற்கு உறுதியாக எடுத்துக் கூறினான். புரட்சி பொதுவுடமை  தன்னாட்சி (சுயராச்சியம்) என்ற சொற்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்ததின் மூலம் பாரதி தன்னைப் பழமை பேணும் கவிஞன் என்ற நிலையில் இருந்து விடுவித்து, காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னையும் தன்சிந்தனையையும் அறிவார்ந்த நிலையில் மாற்றி மக்கள் விடுதலை என்பது மக்களது தன்னாட்சியால்தான் வருமென உறதி செய்தமையே பாரதிக்கான தமிழ்க் கவிதா உலகின் தனித்துவமாகவும், அவனது மகாகாவித் தன்மையின் வெற்றியாகவும் அமைகிறது. பாரதி மறைந்து நூறாண்டாகிய இவ்வருடத்தில் அதே 1921இல் யாழ்ப்பாண மகாசபையின் மூலம்  தோற்றம் பெற்ற ஈழத்தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான கோரிக்கைக்கும் நூறாண்டாகிறது. தமிழர் தொன்மைத் தாயகமான ஈழத்தில் தன்னாட்சி வெற்றி பெற பாரதியின் பாரததேசம் உதவுவதே அது பாரதிக்குச் செய்யும் நூற்றாண்டு மதிப்பளிப்பாக அமையும் என்பது உலகத் தமிழர்களின் பணிவான கருத்து.