தாம் தமிழரசுக் கட்சியிலேயே உள்ளதாகவும் தம்மை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்சியிலிருந்து தம்மை கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் சந்திரகுமாருக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் கூட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? என்று யாழில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ ஆகியன ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைபில் இருந்தவர்கள்.
“இன்னொரு கட்சியான சந்திரகுமாரது கட்சி, இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளே என்று கூறிய தரப்பினர்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரகுமாரது கட்சி, தற்போது தமிழ் தேசியம் பேசினால்தான் வாக்கெடுக்கலாம் என்று எண்ணுவதாகவும் அவர்களுடன் இணைந்து பயணிப்பது இயலாத ஒன்று என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் மத்திய குழு கூட்டத்திலும் கூறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.



