தம்மைத்தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முனைப்புகளும் முட்டுக்கொடுக்கும் தமிழ்த் தரப்பும் | இரா.ம.அனுதரன்

சிங்களத் தரப்பின் முனைப்புஇரா.ம.அனுதரன்

தம்மைத்தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முனைப்பு

சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினரது அபிலாசைகளை பாதுகாப்பதுடன் ஆட்சி – அதிகாரத்தின் துணைகொண்டு அதனை வலுப்படுத்தி நிறைவேற்றுவதற்கான எத்தனங்களாகவே சிறிலங்காவின் அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது என்பதன் நிகழ்கால சாட்சியமாக கோட்டா – ரணில் அரசு அமைந்துள்ளது.

ஜனாதிபதி பதவிநிலை அடிப்படையில் கிடைக்கப்பெற்ற எதேச்சதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தவறான முடிவுகள் மற்றும் முறையற்ற நிதி-நிர்வாக செயற்பாடுகள் காரணமாக இலங்கைத் தீவு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து நிற்கின்றது.

அரச இயந்திரத்தை துணையாகக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழினப் படுகொலை செயற்பாடுகள் மூலமாகவும், பின் நாட்களில் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்கள் மூலமாகவும் சிங்கள மக்களை குசிப்படுத்திவிட்டு, ஊழல்-மோசடிகளை சத்தம் சந்தடியின்றி நிகழ்த்தி, பெரும் செல்வந்தர்களாக ராஜபக்சக்கள் தம்மை வளப்படுத்தி வருவதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டுள்ளனர்.

மாறி மாறி இலங்கைத் தீவை ஆட்சி செய்யும் தரப்பினரால் காலாதிகாலமாக சிங்கள மக்களிடம் விதைக்கப்பட்டு வரும் இனவாத குரோத மனோநிலையில் மூழ்கிப்போயிருந்த சிங்கள தேசம், தற்போது சந்தித்து நிற்கும் பொருளாதார நெருக்கடி நிலையில் சுதாரித்துக் கொண்டு அதற்கு காரணமானவர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்புவதற்காக போராடிவருகிறது.

இந்தப் பின்னணியில், ‘கோ கோம் கோத்தா’ எனும் சிங்கள தேசத்தின் தொடர் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையானது மகிந்த ராஜபக்சவை முன்னாள் பிரதமராக்கியுள்ளது.

அரசியலில் பொதுவாக நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அரசியலில் நேரெதிர் தரப்புகளாக இருந்து வந்த ராஜபக்ச – ரணில் தரப்புகள் தற்போது ஓரணியாகியுள்ளன. அது மாத்திரமல்லாது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான கட்சிகளும் கோட்டா – ரணில் அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டுவரும் நிலை. தமிழ் – முஸ்லிம் – சிங்கள தரப்புகள் என பாகுபாடின்றி மக்கள் விரோத அரசுக்கு, பௌத்த சிங்கள பேரினவாத தரப்பினரது விருப்பிற்கு ஏற்றவாறு முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

ராஜபக்சக்களுடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒட்டுமொத்தமாகவே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு மாறாக மக்கள் விரோத அரசுக்கு முண்டுகொடுக்கும் அயோக்கியத்தனத்திற்கு பௌத்த பீடங்களின் மறைமுக ஆசி இருப்பதை மறுத்துவிட முடியாது. சிங்களப் பௌத்த பேரினவாத தரப்பினரது அபிலாசைகளை பாதுகாக்கும் ஆட்சி – அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் பலவீனமடைய பௌத்த பீடங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்யும் அதேவேளை இலங்கை மீது தமது செல்வாக்கை அதிகரிக்கும் சூழ்நிலையையும் மறுப்பதற்கில்லை.

இவ்வாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள், நிறுவனங்களின் செல்வாக்கு இலங்கை விடயத்தில் அதிகரிப்பதானது சிங்களப் பௌத்த பேரினவாத தரப்பினரது அபிலாசைகளுக்கு ஆபத்தானதாகிவிடும் என்பதால் ‘கோ கோம் கோத்தா’ என்ற மக்கள் கோரிக்கைக்கு பௌத்த பீடங்கள் பரிபூரணமான ஆதரவை வழங்கும் நிலையில் இல்லை. நாடு பொருளாதார நிலையில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நாட்டு மக்கள் பட்டினியால் சொத்தொழிந்தாலும் பரவாயில்லை, தங்களது அபிலாசைகளை பாதுகாக்கும் தரப்பினரது அதிகாரத்தை உறுதிசெயவதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. தற்போது இலங்கைத் தீவு சந்தித்துள்ள நெருக்கடி நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இறக்குவதற்கு மேற்சொன்ன வகையில் பௌத்த பீடங்கள் விரும்பவில்லை.

இந்தப் பின்னணியில்தான் கோட்டாபய ராஜபக்ச மீது கொண்டுவரப்படுவதாக சொல்லப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சத்தம் சந்தடியின்றி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அது கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. அதையும் மீறி கொண்டுவரப்படுமாக இருந்தால் தோல்வி நிலையிலேயே அது கொண்டுவரப்பட்டு தோற்கடிப்பு செய்வதற்கு ஒரு சந்தரப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் கோட்டா – ரணில் அரசு பலமாகவே உள்ளது என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்படலாம்.

இது இவ்வாறு இருக்க, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற கையோடு புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு வருகிறது. அரச தரப்பு விசுவாசிகளாக இருந்து முட்டுக்கொடுப்பதையே அரசியல் இலட்சியமாக கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் – முஸ்லிம் தரப்புகளை தவிர, சிங்கள தரப்பில் மாறுதல்களுடன் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு வருகிறது. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இறுதி நேரத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்சி மாற்றம் என்ற பெயரில் சர்வகட்சி இடைக்கால அரசை உருவாக்கும் கோட்டாவின் அழைப்பிற்கு பெரும்பாலான கட்சிகள் பின்னடிப்பதற்கு மக்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ள நெருக்குவாரமும் காரணமாக அமைந்துள்ளது.

எது எப்படி இருப்பினும், தம்மைத் தாமே பிணையெடுக்கும் சிங்களத் தரப்பின் முன்னெடுப்புகளே மீண்டும் வெற்றிபெற்றுள்ளன. 2015இல் ராஜபக்ச தரப்பு வீழ்த்தப்பட்டு ரணில்-மைத்திரி கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டதும், 2022இல் மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பப்பட்டு கோட்டா-ரணில் அரசு ஸ்தாபிக்கப்பட்டதும் அவ்வாறே, அதற்காகவே. இவ்வாறு கட்டமைப்பு ரீதியாக எவ்வித மாறுதல்களும் இல்லாவிடிலும் வெளிப்பார்வைக்கு அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சிங்களத் தரப்பில் பெயரளவில் தன்னும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தமிழ்த் தரப்பில் அதே தரப்புகள் மீண்டும் அமைச்சர்களாக வலம்வர வைக்கப்பட்டமை தமிழ் மக்கள் தரப்பில் சிந்திக்க வேண்டிய விடமாகும்.

இலங்கைத் தீவில் யார் ஆட்சிபீடமேறினாலும், அவர்களோடு ஒட்டுண்ணிகளாக இருந்து தமிழினத்தின் கோடாலிக் காம்புகளாக செயற்படும் தரப்பினர் அரச தரப்பு பங்காளிகளாக வலம்வருவது வழமையாகி விட்டது. தமிழ் – முஸ்லிம் – மலையக தரப்பினரையும் இணைத்து செயற்படும் ஜனநாயக அரசு என்பதாக உலக நாடுகளுக்கு காட்டும் தேவையின் நிமித்தம் இவ்வாறான ஒட்டுண்ணி தரப்புகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான ஒட்டுண்ணி தரப்புகள் தங்களுக்கு வாக்களித்த தங்கள் சொந்த மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுவதைக் காட்டிலும் எலும்புத் துண்டுகளை தூக்கிப்போடு அரச தரப்பின் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன.

இவ்வாறு தமிழ் மக்கள் விரோத சக்திகள் அரச ஒட்டுண்ணிகளாக தொடர்ந்து வலம் வருவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளிடையே காணப்படும் பிளவு நிலையே பிரதான காரணமாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்போம், வேணவாக்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் என அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடையேயும் சுயலாப அரசியலே மேலோங்கியுள்ளது. அவர்களுக்குள் நடைபெறும் கழுத்தறுப்புகளும், குழிபறிப்புகளுமே, இவ்வாறான அரச தரப்பு ஒட்டுண்ணிகளை மதிப்பிற்குரியவர்களாக தமிழ் மக்கள் மத்தியில் வலம்வருவதற்கு காரணமாகும்.

தமிழ்த்தேசியம் பேசி வாக்குகளை அறுவடை செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்களது உரிமைகளை நிலைநாட்டவோ, இருப்பை பாதுகாக்கவோ செயற்படாது, தமக்குள் மோதிக்கொள்வதன் ஊடாக எதிரிகளின் இலக்கை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தம்மை மெல்ல மெல்ல நீக்கம் செய்து வரும் நிலையேற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரச தரப்பு ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுவரும் ஐவர் வெற்றிபெற்றமை அதன் வெளிப்பாடேயாகும்.

தமிழ்த் தேசிய பரப்பில் செயற்பட்டு வரும் சகல தரப்பினருமே இந்நிலைக்கு மூலகாரணமாகும். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பரணாக திகழவேண்டியவர்கள் தமக்குள் மோதுண்டு பிளவுபட்டு நிற்பதால் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் தங்குதடையின்றி தமிழர் தாயகத்தில் நடந்தேறி வருகின்றன. ஆயுத மௌனிப்பின் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழத் தேசிய பரப்பில் செயற்பட்டு வரும் தரப்பினர் எவரும், தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ, நீதியை வலியுறுத்தவோ, நியாயத்தை எடுத்துரைக்கவோ, நாங்கள் உங்களுக்காகவே உள்ளோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவோ இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

இக்கையறு நிலையில்தான் தமிழ் மக்கள் தத்தமது நிலையில் நின்றுகொண்டு இவ்வாறான அரச தரப்பு ஒட்டுண்ணிகளுக்கு வாக்களிக்கும் அவலம் நடந்தேறி வருகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, தமிழ் மக்களுக்கு காப்பரணாக இருக்க வேண்டிய தமிழத் தேசிய தரப்பினரிடையே காணப்படும் பிளவு நிலையானது, அரச தரப்பு ஒட்டுண்ணிகளுக்கும், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வையும், நீதியையும் வேண்டுமென்றே நிராகரித்துவரும் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பிற்கும் வாய்ப்பாக அமைந்து வருகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழின விடுதலைப் போராட்டத்தை அனைத்துலக தளத்திற்கு முன்னகர்த்தி முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிய எமது உறவுகளின் உயிர்த்தியாகத்தை முதலீடாக கொண்டு அரசியல் செய்து வருபவர்கள் தமிழ் மக்களை அரசியல் முள்ளி வாய்க்காலுக்குள் வலிந்து தள்ளிவிட்டுள்ளனர்.

இந்நேரத்தில், மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை நாம் அறுதியிட்டுக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். சிங்கள தேசத்தின் அரசியலமைப்பின் கீழ் தமிழர்களாகிய எமக்கு துரும்பளவிற்கேனும் நன்மைகள் கிடைத்துவிடப்போவதில்லை என்பது திண்ணம். அதற்கு சிங்கள அரச இயந்திரத்தை இயக்கும் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினர் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. சிங்கள மக்களது கோரிக்கைகளையே காலில் போட்டு மிதிக்கத்தலைப்பட்டுள்ள இத்தரப்பினர், எவ்வாறு தமிழ் மக்களுக்கு நன்மைகள் நடந்துவிட வழிவிட்டு ஒதுங்குவார்கள்?

தற்போதைய நெருக்கடி நிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் கோட்டா – ரணில் அரசின் முன்னெடுப்புகளிலும் தமிழ் மக்களது நியாயமான அரசியல் அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்படாது என்பதற்கான அறிவிப்பாகவே, தமிழ் மக்கள் விரோத சக்திகளான அரச தரப்பு ஒட்டுண்ணிகள் அரச தரப்பு பங்காளிகளாக்கப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்து ஆட்சிக்குழப்பத்திற்குள் தமிழ்த் தரப்பும் ஓரங்கமாக மாறுகின்றமை, இந்த நச்சுவட்டத்திற்குள் தமிழ் மக்களை அடமானம் வைக்கும் செயலாகவே அமையும்.

தமது தலைமையாக ஏற்றிவைத்த மக்களுக்கு எப்படி இறக்கி வைக்க வேண்டும் என்பதும் தெரியும் என்பதனை நினைவில் கொள்வது யாவருக்கும் நன்மையே பயக்கும்.

Tamil News