முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி
எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல் கஸ்ரோ அவர்கள் கூறியது போல ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லாத் தாக்குதல் மிகச் சிறந்த பிரச்சாரமாகும்.
ஆனால் உக்ரைன் விவகாரத்தில் அதனையும்விட மேல், அதாவது தாக்குதல் நடத்துவது மட்டும் தான் உக்ரைன் படையினரின் பணி; பிரச்சார வேலைகளை மேற்குலக அரசியல் தலைவர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் பலமடங்கு பெரிதாக செய்து முடிப்பார்கள்.
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள 60 ஆயிரம் படையினரை அழிப்பதில் தான் தற்போது ரஸ்யா அதிக கவனம் செலுத்துகின்றது. இந்தப் படையணியில் 20,000 படையினரைக் கொண்ட அசோ பட்டலியன் எனப்படும் மேற்குலகப் படையினரால் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு மரியப்போல் பகுதியில் நிரந்தரமாகத் தளம் அமைத்துக் கொடுக்கப்பட்ட படையினரை அழிப்பதில் தான் ரஸ்யா தனது முழுமையான கவனத்தையும் குவித்துள்ளது.
போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ரஸ்யாவின் அதிபர் முன்வைத்த கோரிக்கைகளில் இந்தப் படையணியை அழிப்பதும் ஒன்றாகவே இருந்தது. எனவே தான் அவர்களை அழிக்கும் போது ஏனைய படையணிகள் உதவிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு தலைநகர் கிவிவ் மீது வடக்கில் இருந்தும், கிழக்குப் பகுதியின் கார்கிவ் முதல் டொன்பாஸ் வரையிலும் ஒரு பரவலான படை நகர்வை மேற்கொண்டு, உக்ரைன் படையினரின் கவனத்தைத் திசைதிருப்பியது ரஸ்யா.
இந்த பத்தி எழுதப்படும் போது மரியப்போல் பிரதேசத்தின் 90 விகிதமான பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியுள்ளதுடன், அசோ படைப்பிரிவும் கடுமையான அழிவைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தான் தமது படையினரின் மனவலிமையை அதிகரிக்கும் நோக்கத்துடனும், மேற்குலகத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் முகமாகவும் பேர்டைன்ஸ்க் துறைமுகத்தில் தரித்து நின்ற ரஸ்யாவின் தரையிறங்கு கலம் மீது உக்ரைன் படையினர் ஒரு கொரில்லாத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். ஏவுகணை கொண்டு அல்லது கிராட் வகையை சேர்ந்த பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மரியப்போல் பகுதி மீதான தனது தாக்குதலை விரைவுபடுத்திய ரஸ்யா, நகரத்தின் ஒரு சிறு பகுதிக்குள் வைத்து 14,000 இற்கு மேற்பட்ட சிறப்புப் படையினரை சுற்றிவளைத்துள்ளது. இந்த முற்றுகைக்குள் சிக்கியுள்ள படைத் தளபதிகளையும், மேற்கு நாடுகளின் பயிற்சியாளர்களையும் மீட்பதற்கு உக்ரைன் படையினர் துணிகரமான திட்டம் ஒன்றை தீட்டினார்கள்.
இந்தத் திட்டத்தில் இரு இலக்குகள் இருந்தன. ஒன்று ரஸ்யப் படையினரின் ரடார் கண்களில் சிக்காது, உலங்குவானூர்திகளில் தாழ்வாகப் பறந்து சென்று, முற்றுகைக்குள் சிக்கியுள்ள முக்கிய தளபதிகளை மீட்பது, இரண்டாவது ரஸ்யப் படையினரின் கவனத்தைத் திருப்புவதற்காக கார்கிவ் பகுதிக்கு அண்மையாக உள்ள ரஸ்யாவின் எல்லைக்குள் ஒரு வான் தாக்குதலை நடத்துவது. இதன் மூலம் உக்ரைனின் வான்படை வலுவாக உள்ளது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது.
அதற்கான திட்டத்தில் உக்ரைன் வான்படையினர் ரஸ்யாவின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றி மறைவான இடங்களில் வைத்திருக்கும் தமது எஞ்சியுள்ள தாக்குதல் விமானங்களை ஒழுங்கு படுத்தியது. நான்கு தரைத்தாக்குதல் எஸ்யூ-24 விமானங்களும், தரைத் தாக்குதல் விமானங்களை பாதுகாக்கும் சூட்டாதரவை வழங்குவதற்காக ஒரு எஸ்யூ-27 விமானமும் மார்ச் 28 ஆம் நாள் நள்ளிரவு தமது நடவடிக்கையை ஆரம்பித்தன.
ஒடிசா பகுதியில் இருந்து கடற்கரை வழியாக உலங்குவானூர்தி சென்ற அதேசமயம், கார்கிவ் பகுதியை 5 தாக்குதல் விமானங்கள் ஊடறுத்துச் சென்றன. ஆனால் ரஸ்யப் படையினரின் ரடார்களில் விமானங்கள் சிக்கிக்கொண்டன. சிக்கிய விமானங்களைத் தரையில் இருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகளால் தாக்கி அழிப்பதை விடுத்து, பெலாரூஸ் படைத்தளத்தில் நிலைகொண்டிருந்த எஸ்யூ-35 தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி ஒரு வான் சண்டையாக மாற்றியிருந்தது ரஸ்யா.
400 மைல்களுக்கு அப்பால் வைத்து இலக்குகளை அழிக்கும் இந்த விமானம், உக்ரைனின் 5 விமானங்களையும் தனது ஆர்-73 மற்றும் 77 ஏவுகணைகளால் வீழ்த்தி விட்டது. கடந்த மாதம் 5 ஆம் நாள் உக்ரைனின் தலைநகருக்கு அண்மையான வான்பரப்பில் இடம்பெற்ற மிகப்பெரும் வான் சமருக்கு பின்னர் இடம்பெற்ற வான் சமர் இதுவாகும். அந்தச் சமரில் ரஸ்யாவின் எஸ்யூ-35 விமானம் 4 எஸ்யூ-27 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருந்தது.
ரஸ்யாவின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் திட்டம் தோல்வியில் முடிந்த அதேசமயம், மீட்பு நடவடிக்கையும் வெற்றிபெறவில்லை. மீட்பு நடவடிக்கைக்குச் சென்ற குழுவும் ரடார்களில் சிக்கி கொண்டது.
இருந்தபோதும் இந்த நடவடிக்கையில் 4 உலங்குவானுரர்திகள் ஈடுபட்டதாகவும் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது ஆனால் அதனை ரஸ்யத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. வீழ்ந்த விமானத்தில் இருந்து உயிர்தப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் தனது முயற்சியை கைவிடாத உக்ரைன், நேற்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலை உலங்குவானூர்திகள் மூலம் தாழ்வாகப் பறந்து சென்று ரஸ்யாவின் மேற்கு எல்லைக்குள் 21 மைல்கள் தொலைவில் பெல்கொரோட் நகரில் உள்ள எரிபொருள் களஞ்சியத்தை தாக்கியுள்ளது.
போர் ஆரம்பமாவதற்கு முன்னரே உக்ரைனினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வான் கலங்களையும், ஏவுகணைகளையும், மேற்குலகத்தினால் வழங்கப்படும் ஆயுதங்களையும் தேடி அழிப்பது தான் ரஸ்யாவுக்குச் சவாலான விடயமாக தற்போது மாறியுள்ளது. எனவே தான் உக்ரைனின் வான்பரப்பை சுதந்திரமாக விட்டுள்ள ரஸ்யா அதனை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.
[…] […]
[…] முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-176-april-03/ https://www.ilakku.org/ […]