இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 176 ஆசிரியர் தலையங்கம்

இலங்கைத்தீவின் இன்றைய சூழலில் ஈழத்தமிழர் இறைமையிழப்பு தடுக்கப்பட வேண்டும்

பால் உட்பட அன்றாட உணவுப் பொருட்கள் அத்தனைக்கும் தட்டுப்பாடு மட்டுமல்ல, அரசாங்கமே உயிர் வாழ்தலுக்கான உணவு வகைகளின் வழங்கலை மிகவும் மட்டுப்படுத்தும் நிலை இன்றைய சிறிலங்கா ஆட்சியாளர்களின் சாதனையாக உள்ளது. மருத்துவ சேவைகள், கல்விச் சேவைகள், போக்குவரத்துச் சேவைகள் என அனைத்து அன்றாட மக்கள்நலச் சேவைகளும் நின்றுபோன அல்லது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட நிலை. வாழ்வுக்கான அன்றாட சக்தி வளங்களான மின்சாரம், எரிவாயு, பெற்றோல், டீசல் அத்தனையும் அருந்தல் நிலையில் உள்ள நாடாகச் சிறிலங்கா உள்ளதால், அனைத்து வகையான உள்நாட்டு உற்பத்திகளும் நின்று வருகிறது. நாடு வேகமாக இயங்க இயலாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவே இன்று இலங்கையர் தங்கள் நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்வதற்கான அன்றாட நாணய மாற்றையும், கடன் உதவிகளையும் வழங்க வேண்டும் என்கிற நடைமுறை எதார்த்தம் சிறிலங்காவின் பொருளாதார எதார்த்தமாக மாறியுள்ளது. ஆண்டுத் தொடக்கத்தில் எரிபொருள் கொள்வனவுக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள், தொடர்ந்து டொலர் கடனுதவியாக 500 மில்லியன் டொலர்கள் இவற்றை அடுத்து இன்று  இரண்டு 1 பில்லியன் டொலர், அன்றாட பொருட் தேவைகளுக்கான கடனுதவிகள் என இந்தியாவிடம் கடன் பெறும் தொகை நீண்டு கொண்டே செல்கிறது.

அத்துடன் இந்த அளவுக்கு ஒரு வெளிநாடாக இலங்கைக்கு இந்தியா நிதிவழங்கல் செய்ய இயலாது. இதனால் இந்தியாவின் ஒன்றிய எல்லை மாநிலங்களுள் ஒன்று போல சிறிலங்கா தனது இறைமையை விட்டுக் கொடுத்து வாழும் நிலையிலேயே இதனை இந்தியாவால் செய்ய இயலும் என்பது வெளிப்படையான உண்மை. இதனைச் சிறிலங்கா இந்தியாவுடன் இறைமைப் பகிர்வை அனுமதிக்கும் நான்கு ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்து விட்டது. இந்நிலையில், கொழும்புக்கு வங்காள விரிகுடா விளிம்புநிலை நாடுகளின் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்; “முன்னர் சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் பலவாரங்களில் செய்யப்பட்ட நடவடிக்கைகளை தற்போது இந்தியா சில நாட்களுக்குள் செய்கின்றது” என்கிற உண்மையை ஊடகவியலாளர் களுக்கு எடுத்துரைத்ததின் மூலம், இந்திய இறைமையின் மேலாதிக்கத்துள் இலங்கையின் இறைமை உள்ளடக்கப்பட்டுள்ள சமகால அரசியல் நிலையை நாகரிகமான முறையில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவால் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையும், மலையகத் தமிழர்களின்  மற்றும் முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் பிரச்சினைகளும் நியாயமான தீர்வு பெற வேண்டுமென முத்தரப்பினரும் எதிர்பார்ப்பது இயல்பானதே.  இந்தியா ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதி என்பது அவர்களின் இறைமையின் இயல்பு நிலையை உறுதிப்படுத்தலே என்கிற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும். அவ்வாறே  மலையகத் தமிழர்களதும், இலங்கை முஸ்லீம்களினதும் அரசியல் உரிமைகளைப்  பாதுகாக்கக் கூடிய முறையில் செயற்பட வேண்டும். இதற்கான அரசியலமைப்பு முறைமை ஒன்று இலங்கையில் நடைமுறைக்கு வருவதற்கு நேரடியாகவே உதவக்கூடிய சூழ்நிலை இன்றைய சமகால இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியாவுக்கு இயல்பாகியுள்ளது.

இதனை இந்தியா உணர்ந்து செயற்படக்கூடிய முறையில் அரசியல் அமுக்கக் குழுவாகச் செயற்படக்கூடிய ஈழத்தமிழர்களதும், மலையகத் தமிழர்களதும், இலங்கை முஸ்லீம் மக்களதும் தெளிவானதும் உறுதியானதுமான கூட்டிணைவு ஒன்று உடனடித் தேவையாக உள்ளது. இந்தக் கூட்டிணைவு சிங்கள மக்களின் இறைமைக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ அச்சுறுத்தலாக அமையாது, அதனை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் இனங்களின் முயற்சி என்பதைச் சிங்களப் பாட்டாளி மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ள சந்தேகங்களையும், அச்சங்களையும் நீக்கும் வகையில் சிங்களவர்களுடனான உரையாடல்களையும் வளர்த்தல் வேண்டும். இந்தத் தளம் உறுதி பெறுகின்ற போதே உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், அனைத்துலகத் தமிழர்களும் இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களதும் மலையகத் தமிழர்களதும், முஸ்லீம் மக்களதும் பாதுகாப்பான அமைதி வாழ்வை உறுதிப்படுத்துமாறு பலமாகக் கோர முடியும்.

இந்நேரத்தில் சிறிலங்கா ஜனாதிபதி கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட சம்பந்தர், ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் இறைமை குறித்த பிரச்சினை எனத் தனது உரையைத் தொடங்கினார். ஆயினும் அடுத்து, அதனைச் சிறிலங்கா ஏற்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து, ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலக அரசியல் முறைமைகள் கவனத்தில் எடுக்க உதவாது, சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சியை நிலைப்படுத்துவதற்கான பொருளாதார ஆலோசகராகத் தம்மை மாற்றிக் கொண்டார் சம்பந்தர்.

அமைதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மறுசீரமைப்புக்கள் வழியாகத் தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்தக் கூடிய அதிகாரப் பரவலாக்கலைச் செய்து,  தமிழர்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்க இந்த ஆட்சியாளர்கள் உதவ வேண்டும் என ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படலாம் என உலகுக்கு உறுதிப்படுத்தும் வகையில் மயக்கமான பேச்சாகத் தம்பேச்சை அமைத்துக் கொண்டார்.  இந்த மயக்கப் பேச்சின் வழி ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமை மறுக்கப்படவில்லை என்கிற சாட்சியாகச் சம்பந்தர் தன்னை முன்னிறுத்தி, ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலகத் தலையீடுகள் சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்படாதவாறு பாதுகாப்புப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

முடக்க நிலையில் சிறிலங்கா, மயக்க நிலையில் சம்பந்தரின் பேச்சு, விழிப்புடன் செயற்பட வேண்டியவர்களாக உலகத் தமிழர் உள்ளனர். அதாவது ஈழத்தமிழ் மக்களின் இறைமை இழக்கப்படாதவாறு, அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்கள் உருவாக்கும் அவர்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த, உலகத்தமிழர்கள் உழைப்பதன் வழியாகவே இன்றைய சூழலில் ஈழத்தமிழர்களை இறைமையிழப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News