புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி | விட்டல் ராவ்

136 Views

WhatsApp Image 2022 06 23 at 6.36.33 PM e1656913952113 புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி | விட்டல் ராவ்

புகழேந்தி: ஓர் ஓவியப் போராளி

பெரும்பான்மை பலத்தின் பாதுகாப்போடு அடக்குமுறை கொண்டு பல்வேறு அநியாயங்கள் புரிந்து சொல்லொணா துன்பந்தந்து மக்களை ஒதுக்கி வதைத்த பேரின வாதத்தினரை எதிர்த்து போராளிகள் பல்வேறு ரூபங்களில் தம் போராட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  ஆயுதமேந்தியோ, மேடையில் பேசி முழக்கமிட்டோ, கொரில்லா தந்திரங்களாலேயோ, அப்போராளிகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.  கவிதை, கதை, கட்டுரை முதலான எழுத்தாயுதம் போராளியின் ஓர் இன்றியமையாத போராட்ட ஊடகமாயிருந்து வருவது போலவே, நாடகம், திரைப்பட வகைமைகளும் போராளிக்கான சௌகரியமான வெளிப்பாட்டுச் சாதனங்கள்.  அந்த வகையில் ஓவியமும் சிற்பமும் போராளிக் கலைஞனின் போராட்டத்துக்கான அல்லது போராட்டதுக்கு ஆதரவான கை வந்த ஊடகம்.  இதைச் சற்று பின்னோக்கிப் பார்த்து விட்டு பிறகு சமகாலத்துக்கு வருவது சரியாயிருக்கும்.

விடுதலைக்கு முன் [1949] னிருந்த சீனாவில் ஏழை விவசாயிகள் நிலப் பிரபுக்களிடம் தாம் பட்ட கடனுக்கு ஈடாக தம் சொற்ப நிலங்களை கொடுத்துவிட்டு அதே நிலத்தில் அவர்களிடம் கூலிக்கும் குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்தார்கள்.  அவ்வாறு தம் நிலத்தையே குத்தகைக்கு – வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்த அவர்கள் தங்கள் நிலங்களுக்கு காலக்கிரமத்தில் வாடகை செலுத்தி வந்தார்கள்.  வாடகையை நிர்ணயிப்பதும் வசூலிப்பதும் அவர்களின் நிலப் பிரபுக்களே.  அந்த வாடகை அநியாய வாடகையாக இருந்ததோடு அதை வசூலிப்பதில் காட்டிய கொடுமையும் கொடூரமும் சொல்லி மாளாது.  சீனாவில் தாயி [TAYi] மாகாணத்தில் மிகவும் கொடுமை மிக்க நிலப்பிரபு லியூ வென் சாய் [Liu WEN – TSAI] என்பவனின் வாடகை வசூல் செய்யப்பட்டு வந்த கொடுமைகள் நிறைந்த பிரம்மாண்டமான தானியக் கிடங்கு பிரசித்தி பெற்றது.  விவசாயிகள் வாடகை செலுத்த முடியாது தவித்த போது நிலப் பிரபுவின் அடியாட்களால் துன்புறுத்தப்பட்ட அவலங்கள் இடம் பெற்ற புகழ் பெற்ற நரகம் அது.  விடுதலை அடைந்த பின்னர் டாயி வாடகை வசூல் நரகக் கிடங்கு ஒரு கலைக் கூடமாக மாற்றப்பட்டது.  இங்கு ஆளுயரத்திலான களிமண்ணால் வடிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான அபூர்வ அரிய சிற்பங்கள் உள்ளன.  இந்த ஆளுயரக் களி மண் தலைவர் மாவோவின் கொள்கைகளையும் தலைமையையும் ஏற்றுக் கொண்ட புரட்சிகர சீனா சிற்பக் கலைஞர்களால் வடிக்கப்பட்டவை.  குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்று வயது பார்க்காது கடுமையான நடவ்டிக்கைகளால் – பயங்கர நாய்கள் துணையோடு – உழைப்பை உறிஞ்சும் காட்சிகள், முதலாய், விவசாயிகளின் குழி விழுந்த கண்கள், கிழிந்த ஆடைகள், எலும்பு தூக்கிய உடம்பு என காண்போரை உருக்கிக் கண்ணீர் மல்க வைக்கும் இந்த சீனக் களிமண் சிற்பங்கள் டாயி மாநிலத்தில் “RENT COLLECTION COURTYARD” எனும் மியூசியமாயிருக்கும் வரி – வாடகை வசூலித்த கிடங்கில் காட்சியாக்கபட்டுள்ளன. இவை அழகியல் ரீதியாக AUGUSTINE RODINE வகையான சிற்பங்கள்.

இனப்படுகொலை, இன அழிப்பு அதனடிப்படையிலான போர் என்பதை சென்ற நூற்றாண்டின் ஜெர்மனி, நாஜிகளின் பாசிஸ ஆட்சியின் போது அனுபவித்தது.  பாசிஸ கொடுமைகளை மிக அற்புதமாய் – காண்போர் கண்ணீர் சிந்தி உருகும்படி பதிப்போவியங்களையும் கோட்டோவியங்களையும் சிற்பங்களையும் செய்தவர் ஒரு ஜெமன் பெண் கலைஞர், கதே கால்விட்ஜ் [KATHE KOLLWITZ]. 1945 –ல் காலமான இவரது கலை அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் இனம் சார்ந்தது.  எமிலி ஜோலாவும், இப்சனும், ஸ்ட்ரிண்ட்பார்க்கும், தோல்ஸ்தோயும், தாஸ்தாவெஸ்கியும், கார்கியும் மனித அழகின்மையில், அசிங்கத் தோற்றத்தில், நாற்றத்தில், நரகலில் எல்லாம் அழகையும் ஆனந்தத்தையும் கண்டவர்கள்.  கொடுமையும் கலை வெளிப்பாட்டுக்கான அழகியலைக் கொண்டதாகவே மேற் குறிப்பிட்ட இலக்கியவாதிகளுக்கும் GOYA, KOLLWITZ போன்ற ஓவியர்களுக்கும் பட்டிருக்கிறது.  இவர்களின் படைப்புகள் ஒரு குறிப்பிட்ட – தனிப்பட்ட நிகழ்வுகளோடு தங்கி நின்று விடாமல் அவை இம்மனித இனத்தின் முழுமைக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்குபவை.

அந்த வகையில் இந்திய மண்ணில், தமிழக மண்ணில் மனித இனப் படுதுயரை ஏற்ற கோணங்களில், கோடுகளுள், வண்ணத் தேர்வில் ஒரு சர்வதேச படுதுயராக தன் ஒப்பற்ற வண்ண ஓவியங்கள், கோட்டோவியங்களால் வெளிப்படுத்தியிருக்கும் ஓவியக் கலைஞர் திரு புகழேந்தி அவர்கள்.  இக்கலைஞரின் நெருங்கிய அறிமுகம் சுபமங்களா மாத இதழின் ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் அவர்களால் நிகழ்ந்தது.  அவர் புகழேந்தியின் ஓவியங்கள் கொண்ட “எரியும் வண்ணங்கள்” எனும் நூலைத் தந்து விமர்சனம் எழுதச் சொன்னார்.  அந்நூலை வெளியிட்டவர் “நிழல்” திருநாவுக்கரசு அவர்கள்.  அந்த நூலில் வெளியாயிருந்த ஓவியங்களில் புகழேந்தி தேர்வு செய்து உபயோகித்திருந்த மிக வெம்மையான வண்ணங்களைக் குறித்து எழுதியிருந்தேன்.  இப்போது என் கையிலிருப்பது அவருடைய மற்றொரு பெரிய ஓவிய நூல் “போர் முகங்கள்:ஈழப்போர் ஓவியங்கள்” இதிலுள்ள ஓவியங்களில் கொஞ்சம் எரியும் வண்ணங்கள் நூலிலும் இடம் பெற்றுள்ளன.

போர் முகங்கள் – நூலில் இடம் பெற்றுள்ள வண்ண ஓவியங்கள் தைலம். அக்ரைலிக், ஆயில் பேஸ்டல்களால் தீட்டப்பட்டவை.  மற்றும் கரிய மையைக் கொண்டு பேனாவால் கிறுக்கப்பட்ட படங்கள், பதிப்போவிய லினோ கட் படங்கள் என்று ஏராளம்.  ஈழப்போர் ஓவியங்கள் என்றால் கொடுமை, கொடூரம், சித்திரவதை, அவலம், கண்ணீர், மௌனம், அஞ்சலி என்று நீளும் வதைகள்.  கடைசி நாட்களில் ஒரு ஆங்கில நாளிதழில் ஈழத் தலைவர் பிரபாகரனின் இளம் வயது மகன் – சிறுவனின் படம் வெளியாயிருந்ததை உலகமே கண்டிருக்கும்.  சிங்கள சிப்பாய்கள் அந்த பாலகனுக்கு ஒரு பிஸ்கட் கொடுத்து சாப்பிட்டானதும் சுட்டுக் கொன்று போட்ட, வன்கொடுமையை மனிதன் என்பவன் எவனும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது.  அதைச் சொல்ல புகழேந்தியின் போர் முகங்களில் சில முகங்கள் உண்டு (தளிர் – பக்கம் 41)

“சோவியத் லிட்டரேச்சர்” இதழ்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், அவற்றில் சோவியத் ஓவியர்களின் வண்ண ஓவியங்கள் இடம் பெற்றன.  அனேகம், போல்ஷெவிக் போர் மற்றும் ஹிட்லரின் பாசிஸ ராணுவத்தோடான போர்க் காட்சிகளாயிருக்கும் அவை.  அவற்றில் பெரும்பாலும் கையாளப்பட்டிருந்த முக்கிய வண்ணம் சிவப்பு.  அதையடுத்து, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் இவற்றின் கலப்பால் கிடைக்கும் இதர வெம்மையான வண்ணங்கள்.  உலகின் மற்றொரு பகுதிக்குப் போகலாம் வாருங்கள்.  எட்வர்டு மங்க் [EDWARD MUNCH] எனும் மேற்கைரோப்பிய புகழ் பெற்ற ஓவியர்.  இவரது உலகப் புகழ் பெற்ற ஓர் ஓவியம் “THE CRY” என்பது சூரிய மறைவு நேரத்தைச் சொல்லும் அடர்ந்த சிவப்பும், ஆரஞ்சும் மஞ்சளும் மேவிய பரந்த வானம்.  கீழே இருண்டு வரும் பள்ளத்தாக்கு போன்ற இடத்தில் ஓர் உருவம் தன் பொந்து வாயைத் திறந்து கத்துகிறது.  அகலத் திறந்த வாயின் அலறலுக்கேற்றவாறு விரிந்த நாசித் துவாரங்களும், முட்டைக் கண்களும்.  எட்வார்ட் மங்கின் கூக்குரல் ஓவியத்திலுள்ள வண்ணங்களும், சித்தரிப்பும் புகழேந்தியின் பல ஓவியங்களில் உணரப்படுபவை, என்றால் பயமும், பரிதவிப்பும் அவற்றுக்கான கொடுமையும், வதையும் உலக மயமானவை – சர்வதேசத் தன்மை வயமானவை என்றாகிறது.  அப்படியானால், ஈழத் தமிழரின் படுதுயரும் அதற்கான முழுக் காரணிகளும், போராட்டமும் பாரபட்சமின்றி கவனிக்கப்பட வேண்டும்.  அந்த வழியில் முற்றிலுமான தீர்வு கிட்டி, வண்ணங்களின் வெம்மை நீங்கி, மென்மையும் இதமும் குளிர்ச்சியுமான நீலம், பச்சை வண்ணங்களையும் கொண்டு தீட்டப்படும் ஓவியங்களை நம் புகழேந்தியும் செய்தளிப்பார்.

பனைமரமே தமிழ் மண்ணின் ஆணித்தரமான குறியீடாக அமைகிறது.  யாழ்ப்பாண பகுதியில் இம்மரம் அதிகம்.  பல ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழ் எழுத்தாளர் செ. யோகநாதன் அவர்கள் ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் கொண்ட “வெள்ளிப் பாதசரம்” என்ற அரிய தொகுப்பு நூல் ஒன்றை கொண்டு வந்த போது அதன் அட்டைப் படத்தில் பனை மரம் ஒன்று நிற்கும்.  பிறகு  எஸ். பொன்னுத்துரையும் இந்திரா பார்த்தசாரதியும் இணைந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து குடியேறிய தமிழீழ எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து “பனியும் பனையும்” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டார்கள்.  போர் முகங்கள் ஓவிய நூலிலும் புகழேந்தி ஓர் ஒற்றைப் பனை மரத்தை நெடுக நிற்க வைத்து அரிய ஓவியமாக்கியிருக்கிறார்.  (99 –ம் பக்க ஆயில் பேஸ்டல் ஓவியம்) சுற்றி தலையிழந்த மொட்டைப் பனைமரங்கள் நடுவே குருதி வண்ணப் பின்புலத்தில் புகழேந்தியின் நம்பிக்கையாய் நிமிர்ந்து நிற்கும் பனைமரம்.

“உயிர்க் கல்லறை” மற்றும் “முள்ளிவாய்க்கால்” என்ற, அளவில் பெரிய இரு ஓவியங்களின் சங்கதிகள் பிகாஸோவின் “குவார்னிகா” வை நினைவூட்டுவதோடு கிட்டத்தட்ட அதுபோன்ற கவனத்தை ஈர்க்கும்படியாகவும் படுபவை.  யோகநாதன் “அரசு” என்று சிறு நாவல் ஒன்றை எழுதி வெளிக் கொணர்ந்தார்.  அரசு என்பது அரசமரம் – அரச இலையையும், அரசாங்கத்தையும் குறிக்கும் சொல்லாகிறதாயும், அரசு – அரசமரம் புத்த மதத்துக்கும் பௌத்தர்களுக்கும் முக்கியமானதென்றும், ஈழத்தமிழினத்துக்கும் பௌத்த சிங்கள பேரினத்தாருக்கும் தொடங்கிய போராட்டத்தின் அடிப்படை மத ரீதியான காரணங்களில் “அரசு” ம் ஒன்று என்பது மாதிரி அதில் எழுதியிருப்பார்.  அவரிடம் கேட்டபோதும் ஆமாமென்றார்.  புகழேந்தியின் போர் முகங்கள் நூலிலுள்ள சில வண்ண ஓவியங்களிலுள்ள இலைகள் சித்தரிப்பு அரச மர இலைகளை ஒத்திருக்கிறது.  ஈழப் போரின் போது நடந்தேறிய நிறைய அவல நிகழ்வுகளின் கொடூர காட்சிகளைப் புகழேந்தி தம் வண்ண ஓவியங்களில், கோட்டோவியங்களில், லினோகட் பதிப்போவியங்களில் தெரிவிக்கிறார். வண்ணங்களைப் போலவே புகழேந்தியின் கோடுகளும் ஆழமானவை, திடமானவை.  சொல்லும் செய்தியை உரத்துச் சொல்லும் வகையில் கனமான இழுப்புக்களாலானவை. அதே சமயம் பேனா மற்றும் மை [PEN AND INK] யால் வரையப்பட்ட ஏராளமான கோட்டோவியங்களில் புகழேந்தியின் கோடுகள் அதிநுட்பமாக, ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் போல தோன்றுவதோடு கோட்டோவிய சாயலைக் கடந்து பதிப்போவியங்களின் [PRINT MAKING] தன்மையைக் கொண்டிருக்கின்றன. 21–ம் பக்கத்திலுள்ள லினோகட் “காத்திருப்பு” படம் மக்கள் பசி பட்டினியால், எதிரியின் தாக்குதலில் படும் அவலத்தைக் காட்டுகிறது.  போராளிகளில் மூத்தவரான குட்டிமணியின் கண்கள் சிறையில் பிடுங்கப்பட்ட கோர நிகழ்வை, புகழேந்தியின் ஓவியச் சித்தரிப்பு நூலின் 23 –ம் பக்கத்து “குட்டிமணி கண்கள்” எனும் தைல வண்ண ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.  மனித நாகரிகத்தையும், மனிதம் எனும் உணர்வையும் இழந்த மிருகச் செயல் என்பதை ஓவியம் உணர்த்துகிறது.  ஈழத்தமிழர் குடும்பம் புலம் பெயர்ந்தும் பெயராமலும் அங்குமிங்கும் அலைந்து அகதிகளாய் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற வேறொரு இடத்திலும் நாட்டிலும் வேறு வித அடிமைகளாய் வாழ நேரிட்ட கொடுமை அவலத்தைப் புகழேந்தி பென்சில் ஓவியமாய் அதியற்புதமாய் [பக்கம் – 24, அலைவு]  தீட்டியுள்ளார்.  ஒரு குழந்தை உட்பட அறுவர் கொண்ட குடும்பச் சித்தரிப்பில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு கேள்விக் குறியை ஏந்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. “யாழ் நூலகம் எரிப்பு [பக்கம் – 29]” எனும் வண்ண ஓவியம், புகழேந்தியின் “கியூபிஸ்டிக்” பாணி முயற்சி எனலாம்.

நூலில் சிறு சிறு புகைபடங்கள் ஓவியரின் ஓவிய செயல்பாடுகளை, அவரது பல்வேறு பருவங்களில் நிகழ்ந்ததைச் சொல்லியவாறு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.  சில புகைப்படங்களின் வாயிலாக புகழேந்தி தம் ஓவியங்களை போராட்டம் போதே தமிழீழத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தியிருப்பது தெரிகிறது.  அத்தோடு சில அரிய புகைப்படங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே தம் சீருடையில் வந்திருந்து ஆவலோடு அக்காட்சிக் கூடத்தினுள் ஓவியங்களைப் பார்வையிடும் அரிய காட்சியும் கிடைக்கிறது.

அதி உயர்ந்த தரமான முறையில் இவ்வண்ண ஓவிய நூல் தயாரிக்கபட்டுள்ளதைப் பாராட்ட வேண்டும், தோழமை வெளியீட்டுப் பதிப்பகம் பெருமை கொள்ள வேண்டிய பதிப்பாகும்.  நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலத்தில் – 1985 முதல் 2018 – வரையிலான காலகட்டத்தில் வரையப்பட்டும் தீட்டப்படும், பதிப்போவியமாக்கப்பட்டதுமானவை என்பது தெரிய வருகிறது.  எனினும், பல்வேறு காலங்களில் படைக்கப்பட்டதேயாயினும், அவை யாவும் ஒரே விடயத்தை – செய்தியைக் கொண்டதாயிருப்பதால் ஒரே சீரான கட்டமைப்போடு ஒரே வித வண்ணச் சேர்க்கையோடு ஒரே வித கோடுகளால் அமையப் பெற்றுள்ளன.  இதனால் கால இடைவெளி சற்றும் தொனிக்கவில்லை.  இவை புகழேந்தி எனும் ஓவியப் போராளியின் மாறாத இனப்பற்றையும், மண் பற்றையும், பேரினவாதத்திலிருந்து ஈழத் தமிழரின் விடுதலை பெறும் உணர்வு மற்றும் போராட்டத்தின் மீதான நம்பிக்கையையும் இரக்கத்தையும் ஆதரவையும் எடுத்துச் சொல்லுபவை.  ஒவ்வொரு ஓவியத்துக்கும் உகந்த தலைப்பையும் அதற்கான செறிவான பொருள் பொதிந்த கவிதைகளை ஆக்கி அளித்துள்ள கவிஞர் இன்குலாப்பையும் கவிஞர் காசி ஆனந்தனையும் மிகவும் போற்றிப் பாராட்ட வேண்டும்.

ஓவியர் புகழேந்தியவர்கள் ஓவியக் கலை தொடர்பாக நூல்கள் பலவற்றை எழுதி வெளிக் கொணர்ந்திருப்பவர்.  அவற்றில் முக்கியமானவை, தந்தை பெரியாரின் பல்வேறு தோற்றங்களைக் கொண்ட கோட்டோவியங்களின் அரிய தொகுப்பு நூல், ஓவியம் – கூறுகளும் கொள்கைகளும் எனும் நூல் மிக முக்கியமானது.  எளிய விளக்கங்களோடு கூடிய ஏராளமான படங்கள் கொண்ட நூல் இது.  மேற்குலக ஓவியர்கள் – வண்ணங்களும் வரலாறும் என்ற நூலும் ஐரோப்பிய ஓவியர்களில் முக்கிய கலை ஆளுமைகள் குறித்தானது.  அரிய வண்ணப் படங்களும் கருப்பு வெள்ளைப் படங்களும் நிறைந்தது.  புகழேந்தியின் மற்றொரு ஓவிய நூல், இந்திய ஓவியக் கலைஞர் எம். எஃப். ஹூசேன் பற்றியது.  இந்நூல் காலஞ்சென்ற – இந்திய பிக்காஸோ என்று புகழப்பட்ட கலைஞர் ஹூசேனுக்கான அஞ்சலி நூல் போலானது.  ஓவியர் ஹூசேனின் முக்கிய வண்ண ஓவியங்களின் படங்கள் கொண்ட நூல், ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் பற்றிய தம் கட்டுரைகள் வாயிலாக கருத்துச் சொல்லியிருப்பவர்கள் ஏராளம்.  அவர்களில் சிலரது அரிய கட்டுரைகள் கொண்ட “நெஞ்சில் பதிந்த நிறங்கள்”, என்ற நூலும் சிறந்த ஒன்று.  சமகால ஓவியர்களில் புகழேந்தியும் நம் நெஞ்சில் பதிந்து நிறைந்தவர்.

Leave a Reply