இந்தியாவின் மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதி, அது கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.
இதையடுத்து ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். காவல்துறையினர் சிலர் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இன்று (நவ.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.