வெடுக்குநாறிமலை ஆலயப் பூசகரும் முன்னாள் தலைவரும் பிணையில் விடுவிப்பு

திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

திருகோணமலை பிரதான நீதவானிடம் தேரர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் வாதாடவில்லை.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை குறித்துத் தாமே தனித்து விளக்கம் அளித்த கஸ்ஸப தேரர், புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தினதும் பிக்குகளினதும் பொறுப்பு என்றும், அதற்காகத் தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில் நீதிமன்றத்திற்கு வராதது பிரபஞ்ச சட்டத்தின்படி நியாயமானது என்றும் வாதிட்டார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் உத்தரவைத் தவிர்த்துச் செயற்பட்டமையைக் கருத்திற்கொண்ட நீதவான், கஸ்ஸப தேரரை இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நாளைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலைத் துறைமுகப் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அநுராதபுர நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருவன்வெலிசாய அருகில் கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் ஏற்பட்ட மோதல் மற்றும் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளின் பேரில் கஸ்ஸப தேரர் உட்பட பலரை நீதிமன்றம் ஏற்கனவே விளக்கமறியலில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் வவுனியா நீதவான் நீதிமன்றினால் நேற்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, ஆலயத்தின் பூசகர் அ.மதிமுகராசா, முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை  நேற்றைய தினம் (16) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, ஆலயத்தின் பூசகரும் முன்னாள் தலைவரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி திருவருள் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து.தமிழ்ச்செல்வன் தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருவதால், இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.